தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள்: மாநில பொதுக்குழு கூடியே பிறகே நியமனம்

தமிழக பாஜகவின் மாநில பொதுக்குழு கூடி தமிழிசை சவுந்தரராஜனை முறைப்படி தலைவராக அங்கீகரித்த பின்னரே புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின்னர் தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜனை அக்கட்சி தலைமை நியமனம் செய்தது. மேலும் தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என அனைவரின் பதவி காலங்களும் முடிவடைய உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு மாநில பாஜகவுக்கான புதிய செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஈடுபட்டு வருகிறார்.

புதிய நிர்வாகிகள் பட்டியல் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அதன் பிறகு புதிய நிர்வாகிகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தமிழக பாஜகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடிய பிறகே புதிய நிர்வாகிகளின் நியமனம் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அகில இந்திய தலைவர் அமித் ஷாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக பாஜகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை ஒருமனதாக ஆட்சேபணையின்றி தேர்வு செய்வார்கள்.

அதன்பிறகே புதிய மாநில நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் இந்த அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்திற்குள் வெளியாகும்.

இதைத்தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருவதற்கு முடிவு செய்துள்ளார். தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியான பிறகு தமிழகம் வரவுள்ள அமித் ஷா கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE