மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட காவிரி நீர் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட கடைமடை பகுதியை நேற்று சென்றடைந்தது. இதனால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கர்நாடக அணைகள் நிரம்பியதால், கடந்த 20 தினங்களுக்கும் மேலாக கர்நாடகத்திலிருந்து உபரி நீர் பெருமளவு திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி ஜூலை 23-ம் தேதி அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூலை 19-ம் தேதியும், கல்லணை ஜூலை 22-ம் தேதியும் திறக்கப்பட்டன. இந்த தண்ணீர், காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் இடமான பூம்புகாருக்கு மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைசி நீரொழுங்கி அமைந்துள்ள மேலையூருக்கு நேற்று அதிகாலை வந்தடைந்தது.
மேலையூரில் பொதுப்பணித்துறையின் மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் கனக. சரவணசெல்வன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கடைமடைக்கு வந்த காவிரி நீரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஜம்புலிங்கம், பாலசுந்தரம், சாமி நாகராஜ், ரவி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
இதேபோன்று கல்லணையிலிருந்து செல்லும் வெண்ணாறு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகிலுள்ள மூணாறு தலைப்பில் வெண்ணாறு, வெட்டாறு, பாமணி ஆறு என மூன்றாக பிரிந்து கடைமடை பகுதிகளுக்குச் செல்கிறது. இந்த ஆறுகளில் திறக்கப்பட்ட தண்ணீரும் கடைமடையை எட்டியுள்ளது.
மேலும், இவற்றிலிருந்து பிரியும் கிளை ஆறுகளான மரைக்கா கோரையாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, முள்ளியாறு, நல்லாறு, ஓடம்போக்கி, பாண்டவையாறு உள்ளிட்ட ஆறுகளிலும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்துள்ளது.
கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு ஆகியவற்றில் அதன் முழுக் கொள்ளளவான 9 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் தற்போது திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் முழு வீச்சில் சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர் பொதுப்பணித்துறை பொறியாளர்கள்.
காரைக்காலுக்கும் வந்தது...
காரைக்கால் மாவட்ட எல்லைப்பகுதியான நூலாறு தலைப்புக்கு நேற்று வந்த காவிரி நீரை புதுச்சேரி முதல்வர் வி.நாராயாணசாமி மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், அபிவிருத்தி ஆணையர் அ.அன்பரசு, சார் ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, பொதுப்பணித் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மலர், விதைநெல்லைத் தூவி வரவேற்றனர்.
பின்னர், வி.நாராயணசாமி கூறும்போது, "10 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்காலுக்கு காவிரி நீர் வந்துள்ளது. இது இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு ஏதுவாக அமையும்" என்றார்.
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் பகுதிக்கு நேற்று மதியம் 2 மணியளவில் வந்த காவிரி நீருக்கு அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago