அதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

அதிமுகவின் 40 வேட்பாளர்களும் செவ்வாய்க்கிழமை மதியம் 1.40 மணி முதல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் ஏப். 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 29-ம் தேதி தொடங்கியது. எனினும் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் அன்றைய தினம் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. சுயேச்சைகளும், சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுமே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், 31-ம் தேதி யுகாதி பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த தாலும் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை (இன்று) மதியம் 1.40 மணியிலிருந்து 3 மணிக்குள் அதிமுகவின் 40 வேட்பாளர்களும் தங்களது தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் அந்தந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் மூலம் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரம், கடன், வங்கிக் கணக்கு மற்றும் வரவு செலவு விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் குறித்த விவரம் போன்றவற்றை சேகரித்து, வேட்புமனுவையும் பூர்த்தி செய்து தயார் நிலை யில் உள்ளனர்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE