ஏற்றுமதியாகும் பப்பாளி பால்: கூடுதல் லாபத்தால் தேனி விவசாயிகள் மகிழ்ச்சி

By ஆர்.செளந்தர்

தேனி மாவட்டத்தில் இருந்து பப்பாளி பால், மருந்து தயாரிப் புக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இதில் கூடுதல் லாபம் கிடைப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப் பட்டி, ஆண்டிபட்டி, கடமலைக் குண்டு, கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழை சாகுபடி செய்யப் பட்டுவந்தது. ஆனால், போதிய மழை இல்லாத காரணத்தால் விவசாயத் தொழில் பெரிதும் பாதிப்பு அடைந்தது. கருகும் வாழையைக் காப்பாற்ற தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊற்ற முடியாமல் நடுத்தர விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதையடுத்து, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர் களை சாகுபடி செய்ய முடிவு செய்து அவர்கள் பப்பாளி சாகுபடியில் இறங்கினர். சில மாதங்களுக்கு முன்பு வரை, உள்ளூர், வெளியூர் சந்தைகளில் பப்பாளி பழங்களை மட்டும் விற்பனை செய்து வந்தனர். ஆனால், விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால், புதிய வழிமுறைகளைத் தேடினர். இந்நிலையில், பப்பாளி சாகுபடி குறித்து அறிந்த கோவை மாவட்ட வியாபாரிகள், தேனிக்கு வந்து விவசாயிகளிடம் பப்பாளி பாலை மட்டும் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து கோட்டூரைச் சேர்ந்த பப்பாளி விவசாயி முத்துராஜ் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: ‘‘தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, பல இடங்களில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறைவான மூலதனமே போதுமானது. ஒவ்வொரு பப்பாளி மரத்தின் காய்களின் மீது இரவு நேரத்தில் குச்சியால் கீறி விட்டு அதன் அடியில் ரப்பர் சீட்டை வைத்துவிடுவோம். பின்னர் இரவு முழுவதும் காயில் இருந்து வடியும் பால், ரப்பர் சீட்டில் பாலாடைக் கட்டிபோலத் தேங்கி இருக்கும். அதனை மறுநாள் அதிகாலையில், மொத்தமாகச் சேகரித்து கோவைக்கு அனுப்பி விடுவோம்.

அங்கு வியாபாரிகள் பப்பாளிப் பாலை அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்களுக்கு, மருந்து தயாரிக்க அனுப்புகின்றனர். ஒரு ஏக்கரில் வளர்க்கப்பட்ட பப்பாளி மரத்தில் இருந்து, தினந்தோறும் சுமார் 60 முதல் 70 கிலோ வரை பால் சேகரிக்க முடியும். தற்போது ஒரு கிலோ பால் ரூ. 130 வரை விலை போகிறது. அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றார்.

பப்பாளி பாலில் இருந்து ஜெலட்டின் உறை

பப்பாளி பாலின் மருத்துவ தன்மை குறித்தும், இந்தப் பாலை வாங்கும் நாடுகள் இதனை எதற்கு பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கருத்து கேட்டபோது:

‘‘மாத்திரைகளின் மீது வரும் ஜெலட்டின் உறையைத் தயாரிக்க விலங்கு இறைச்சியில் இருந்து கிடைக்கும் மூலப்பொருளே பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில நாடுகளில் ஜெலட்டின் உறையைத் தயாரிக்க விலங்கு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், அந்த நாடுகளில் பப்பாளி பாலில் இருந்து ஜெலட்டின் உறை தயாரிக்கப்படுகிறது. அதற்காகத் தான் நம் நாட்டில் இருந்து பப்பாளிப் பாலை சில வெளி நாடுகள் வாங்குகின்றன என்று கருதுகிறேன்.

பொதுவாக பப்பாளிப் பாலில் வைட்டமின் ஏ சத்து இருக்கிறது. அத்துடன் பித்தத்தை சீரமைக்கும் பண்பும் பப்பாளிப் பாலில் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது’’ என்றார் மருத்துவர் சிவராமன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்