மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான மயில் சிலை மாயம்: பக்தர்கள் அதிர்ச்சி; அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை

By க.சக்திவேல்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான மயில் சிலை மாயமானது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயில். இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோயிலில் இருந்த பல நூறாண்டுகள் பழமையான மயில் சிலை காணாமல் போயிருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த மயில் சிலை, இக்கோயிலின் தல வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையது.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மற்றும் திருநீற்றின் பெருமை குறித்து பார்வதி தேவி கேட்க, சிவபெருமான் விளக்கம் தருகிறார். அப்போது, மயில் ஒன்று தோகையை விரித்து ஆடும் அழகில், பார்வதி தேவி மெய்மறக்கிறார். கோபமடைந்த சிவன், ‘மயில் உருவம் பெறுவாய்’ என சாபமிடுகிறார். அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, மயில் வடிவம் எடுத்த பார்வதி தேவி, திருமயிலை (மயிலாப்பூர்) தலத்தில் புன்னை மரத்தின் கீழ் சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அம்பாளின் தவத்தில் மகிழ்ந்து, சிவன் சாப விமோசனம் அளித்தார் என்பது இக்கோயிலின் தல புராணமாகும்.

கோயிலின் தல விருட்சமான புன்னை மர நிழலில் அமைந் துள்ளது புன்னை வன நாதர் சன்னதி. மயில் வடிவிலான அம்பாள் தனது அலகில் மலரை ஏந்தியபடி, சிவனுக்கு பூஜை செய்யும் பழமையான சிலை, இந்த சன்னதியில் இருந்துள்ளது.

இந்த நிலையில், கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்கு முன்னதாக, திருப்பணி நடந்தபோது, புன்னை வன நாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை சேதமானதாக கூறி புதிய சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே நீதி மன்றம் விசாரித்துவரும் சிலை கடத்தல் வழக்கில் தன்னையும் இணைக்குமாறு அவர் கோரியி ருந்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த பழைய மயில் சிலை காணாமல்போய் 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புகார் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு குறித்து பதில் அளிப்பதற்காக, கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திடம் சில தகவல்களை இந்து சமய அறநிலைய ஆணையர் அலுவலகம் கேட்டுள்ளது. அந்த மனுவை தயாரிக்க கோயில் தரப்பில் விசாரணை மேற் கொண்டபோதுதான், புன்னை வன நாதர் சன்னதியில், அலகில் மலருடன் கூடிய மயில் சிலைக்கு பதிலாக, அலகில் பாம்புடன் கூடிய புதிய மயில் சிலை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய சிலை என்ன ஆனது என்பது குறித்த விவரங்கள் அதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, கோயில் வட்டாரத்தில் கூறப் படுவதாவது: கடந்த 2004-ல் கும்பாபிஷேகம் நடந்தபோது, கோயில் துணை ஆணையராக திருமகள் என்பவர் இருந்தார். அப்போது, பழமையான மயில் சிலையும், நவக்கிரகத்தில் இருந்த ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

தற்போது பழமையான மயில் சிலை என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கெனவே, இதுதொடர்பாக இந்து சமய அறநிலைய ஆணையரிடம் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

பழைய மயில் சிலையை புதைத்துவிட்டோம் என்கின்றனர். ஆனால், உண்மையிலேயே பழைய சிலை இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணை முடிந்ததும், மற்றொரு அறிக்கையை ஆணை யர் அலுவலகத்தில் அளிக்க உள்ளோம். பின்னர், ஆணையர் அலுவலகம் மூலம் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புராதனமான சிலை மாயமானது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகா ரத்தில் அறநிலையத் துறை முறையாக விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். இதில் முறை கேடுகள் நடந்திருந்தால், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 secs ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்