மின்சார ரயில் படியில் தொங்கியவாறு பயணித்தவர்கள் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து: பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி; 70 அடி தூரத்துக்கு உடல்கள் இழுத்து செல்லப்பட்ட சோகம்- படுகாயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை

By கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை கடற்கரை - திருமால்பூர் மின்சார ரயில் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது, படியில் தொங்கியபடி வந்த பயணிகள் அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதினர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர் பயணம் செய்வதால் காலை, மாலை நேரங்களில் ரயில்களில் கடும் நெரிசல் காணப்படும். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் படிகள் மற்றும் ஜன்னல்களில் தொங்கியபடி செல்வார்கள்.

இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து நேற்று காலை 7.35 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில், திருமால்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால், ரயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் இளைஞர்கள் பலர் ரயில் படியில் தொங்கியபடி பயணித்தனர்.

விபத்து நடந்தது எப்படி?

இதற்கிடையில், கோடம்பாக்கம் -  மாம்பலம் இடையே மின்சார ரயில் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின் கம்பி நேற்று காலை அறுந்து விழுந்தது. இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், கடற்கரை - திருமால்பூர் மின்சார ரயில் காலை 8.25 மணி அளவில் பரங்கிமலை ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்குள் நுழைந்தது. அப்போது, தண்டவாளத்தை ஒட்டியிருந்த  தடுப்புச் சுவரில் முதல் பெட்டியின் படியில் தொங்கியபடி சென்றவர்கள்  பலமாக மோதினர். இதில் நிலைதடுமாறிய அவர்கள், ரயிலுக்கும் தடுப்புச் சுவருக்கும் இடையில் சிக்கி, ரயிலுடன் சுமார் 70 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்த கோர விபத்தில், கல்லூரி மாணவர் சிவக்குமார் (19), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியியல் பட்டதாரி நவீன்குமார் (25) ஆகிய இருவரும் தண்டவாளத்தில் விழுந்து தலை துண்டிக்கப்பட்டு இறந்தனர். பள்ளி மாணவர் பரத் (16) உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த விக்னேஷ் (19), நரேஷ் (20), விஜயகுமார் (19), ஸ்ரீவத்ஸன் (18), யாஷர் (23) உள்ளிட்ட 7 பேர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே ஒருவர் இறந்தார்.

இதற்கிடையில், விபத்து காரணமாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. விபத்து நடந்த 4-வது நடைமேடையில் சுமார் 70 அடி தூரத்

துக்கு ரத்தக் கறை காணப்பட்டது. செல்போன், டிஃபன் பாக்ஸ், குடிநீர் பாட்டில்கள், கைக்குட்டை, பேக், காலணிகள் போன்றவை தண்டவாளம் முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில் ஆய்வு  நடத்தினர். பின்னர், இறந்தவர்களின் உறவினர் களுக்கு தகவல் கொடுத்தனர். இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது, அங்குள்ள பயணிகளை கண் கலங்க வைத்தது.

ஆட்சியர் ஆய்வு

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் நவீன்குலாத்தி, ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பீரேந்திரகுமார், மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன், ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப்  பிறகு, 10 மணி அளவில்  திருமால்பூருக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

அமைச்சர் ஆறுதல்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவக் குழு வினருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், உயிரிழந்தவர்களின் பெற் றோர், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்ட வசமானது. அதிர்ச்சி அளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் நட

வடிக்கை எடுக்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். சுகா தாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்போது உடனிருந்தார்.

2 நாளில் 6 பேர் பலி

பரங்கிமலையில் தொடர்ந்து 2-வது நாளாக விபத்து நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார விரைவு ரயில், பரங்கிமலை அருகே சென்றது. அந்த ரயிலிலும் பலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் தோளில் மாட்டியிருந்த பை, எதிர்பாராதவிதமாக அருகே உள்ள தடுப்புச் சுவரில் மாட்டியது. இதில் நிலைகுலைந்த அவர், தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு இளைஞரும் சக்கரத்தில் சிக்கி இறந்தார். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் முத்துராஜ் (24), சென்னை சேலையூரைச் சேர்ந்த 

விக்னேஷ்வர் (23) என்பது தெரியவந்தது. பரங்கிமலையில் 2 நாட்களில் 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் சிவக்குமார், நவீன்குமார், பரத் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

மேலும்