சாதாரண காவல் நிலையத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாத ’லோக் ஆயுக்தா’ மசோதா: சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம் பேட்டி

By மு.அப்துல் முத்தலீஃப்

வலுவாக இயங்கக்கூடிய முக்கிய அதிகாரங்கள் அகற்றப்பட்டு, சாதாரண காவல் நிலையத்துக்கு உள்ள அதிகாரம் கூட இல்லாத, லோக் ஆயுக்தாவில் என்னென்ன அம்சங்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டது என்பது குறித்த ஓர் அலசல்.

லோக் ஆயுக்தா சட்டம் வேறு வழியில்லாமல் உச்ச நீதிமன்ற கெடுவால் ஜூலை 9-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா சட்டம் எப்படி இருக்கவேண்டும், என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டும், அதன் அதிகார எல்லை, அதன் தலைவரின் அதிகாரம், மற்ற மாநிலங்களில் உள்ள சிறப்புத்தன்மை போன்றவை குறித்து இதற்கு முன்னர் பதிவிடப்பட்டது.

லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமல்படுத்தும்போது அதை நீர்த்துப் போகச்செய்யும் வேலைகள் நடக்கும், வேண்டுமென்றே லோக் ஆயுக்தாவை ஒன்றுமில்லாத சாதாரண அமைப்பு போன்று அரசின் கீழ் இயங்கும் அமைப்பாக மாற்றும் நடவடிக்கை வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

லோக் ஆயுக்தா தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது குறித்தும், விவாதம் இல்லாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்தும் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

லோக் ஆயுக்தா குறித்து ஏற்கெனவே நம் இணைய தளத்தில் பதிவு செய்த சட்டப்பஞ்சாயத்து இயக்க நிர்வாகி செந்தில் ஆறுமுகத்திடம் மீண்டும் லோக்பால் மசோதா குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

லோக் ஆயுக்தா மசோதா ஏன் இவ்வளவு அதிகாரமற்ற அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது?

லோக் ஆயுக்தாவின் பிரதான அம்சமே ஊழல் ஒழிப்பு. ஊழல் ஒழிப்புக்கான முக்கிய பிரச்சினையே சொத்துக் குவிப்பதில் தான் ஆரம்பமாகிறது. சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய அமைச்சர்கள் அச்சம் அடைந்துள்ளதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

கேரளா, கர்நாடகா மற்றும் சமீபத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றிய இமாச்சல் பிரதேசத்தில்கூட சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யும் மசோதா உள்ளது. ஆனால் தமிழகத்தில் வசதியாக இந்த பகுதியை நீக்கி விட்டார்கள்.

லோக் ஆயுக்தா’வில் என்னென்ன முக்கியப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன?

மொத்தம் நான்கு வகையான பகுதிகள் லோக் ஆயுக்தாவுக்கு உள்ளன. இதில் நாம் ஏற்கெனவே இப்படி நடக்க வாய்ப்புண்டு என்று கூறியிருந்தோம் அதுபோன்றே நடந்துள்ளது. தலைவர், உறுப்பினர்கள் நியமனம், அதிகார வரம்பு, அமைச்சர்கள் முதல்வர் மீதான அதிகாரம் என பல அம்சங்கள் தூக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றாக விளக்க முடியுமா?

முதலில் தலைவர், நிர்வாகிகளை நியமிக்கும் பிரச்சினை வருகிறது. யாரை நியமிப்பது என்பதில் நீதிபதிகள் தலைவர்களாக நியமிக்கப்படுபவர்கள் என்பது மட்டும் அல்லாமல் ஊழல் ஒழிப்பில் பல பத்தாண்டுகள் செயல்பட்டவரையும் தலைவராக நியமிக்கலாம் என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் அரசு கைகாட்டலாம். தங்களுக்கு வேண்டிய நபர்கள் தலைமைக்கு வர வாய்ப்புள்ளது. தேர்வு செய்யும் அதிகாரத்தையும் முதல்வர் தனக்கு கீழ் வைத்துக்கொள்கிறார். முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் என மூன்றுபேரில் இரண்டுபேர் ஆளுங்கட்சிக்கு சாதகமான ஆட்களை தேர்வு செய்யவே வாய்ப்பு.

அடுத்த அதிகாரக் குறைப்பு என்ன?

தற்போதுள்ள லோக் ஆயுக்தா சாதாரண காவல் நிலையத்துக்கு உள்ள அதிகாரம்கூட இல்லாத அமைப்புதான், விசாரணை நடத்த மட்டுமே அனுமதி, வழக்கு தொடர அனுமதி இல்லை. ஒரு அமைச்சர் மீது புகார் என்றால் விசாரணை நடத்தி அவருக்கு மேல் உள்ள முதல்வரிடம் பரிந்துரைக்க மட்டுமே முடியும்.

வழக்கு தொடர அனுமதி இல்லை. பரிந்துரை செய்து முதல்வருக்கு அனுப்பிய பின்னர் என்ன ஆனது என்று கூட கேட்க முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறைக்கூட விசாரணை நடத்தி வழக்குப் போடும். ஆனால் அந்த அதிகாரம் கூட லோக் ஆயுக்தாவுக்கு இல்லை.

மற்ற மாநிலங்களில் என்ன அதிகாரம் உள்ளது? இங்கு எப்படி இருக்க வேண்டும்?

மற்ற மாநிலங்களில் விசாரணைக் குழு, சிறப்பு நீதிமன்றம் உள்ளதுபோல் இங்கும் அமைக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களால் ஏற்பட்ட இழப்பீட்டை வசூலிக்கும் அதிகாரம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்வது ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. அது கொண்டு வரப்பட வேண்டும்.

தவறாக வழக்கு தொடர்ந்திருந்தால் சிறைத்தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் மற்ற மாநிலங்களில் உள்ளதா?

உள்ளது, இவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள நல்ல அம்சங்களைத் தூக்கிவிட்டு, இது போன்ற அம்சங்களை மட்டும் விரிவாக விளக்கியுள்ளனர்.

அபராதம், சிறைத்தண்டனை ஆகியவற்றை யார் தீர்மானிப்பது?

லோக் ஆயுக்தாவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். லோக் ஆயுக்தா தீர்ப்பு கொடுக்க முடியாது. புகார் அளித்தவர் மீது வழக்குப் போட்டது தவறு என்று வழக்குப் போடலாம். இதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

பொது நோக்கோடு வழக்கு போடும் போடும் நபர்கள் தோற்றால் அபராதம், தண்டனை, வெற்றி பெற்றால் என்ன நடவடிக்கை?

வெற்றி பெற்றால் ஒன்றும் இல்லை. வழக்குக்கு ஆகும் செலவு கூட இல்லை. இது பொதுநோக்கோடு செயல்படுபவர்கள் மீது செலுத்தப்படும் மறைமுக மிரட்டல். ஆனால் வழக்கு போடும் அரசு ஊழியருக்கு வழக்கு செலவு உட்பட அரசே பார்த்துக்கொள்ளும்.

லோக் ஆயுக்தாவின் பெரிய பலவீனம் என்ன?

மேற்சொன்ன நான்கு அம்சங்கள், தலைவர் மற்ற நிர்வாகிகள் நியமனத்திலேயே லோக் ஆயுக்தாவின் அதிகாரம் பிடுங்கப்பட்டுவிட்டது. தலைவர் நியமனத்தில் நீதிபதி அல்லாதவர் என திருத்தம், லோக் ஆயுக்தாவை பராமரிக்க இணைச் செயலாளர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி. செயலாளராக மாநில அரசு கொடுக்கும் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அனைத்துமே லோக் ஆயுக்தாவின் அதிகாரத்தை மாநில அரசு கைக்குள் வைக்கும் ஒரு நடைமுறை.

வேறு முக்கியக் குறுக்கீடு என்ன?

காண்ட்ராக்ட், டெண்டர், பணி நியமனம், பணிமாற்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றை லோக் ஆயுக்தா விசாரிக்காது என்ற விலக்கு லஞ்ச அமைப்பைப் பாதுகாக்கவே செய்யும். காண்ட்ராக்ட், டெண்டர், பணி நியமனத்தில்தான் முறைகேடுகளுக்கு வழியுண்டு. அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது என்றால் பிறகு லோக் ஆயுக்தா எதைத்தான் விசாரிக்கும்.

அதே போன்று லாவகமாக இன்னொரு வேலையையும் செய்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் குறித்த ஊழல் விசாரணை லோக் ஆயுக்தா வரம்புக்குள் வராது என்று அறிவித்துள்ளனர். அதற்கு அதில் கூறப்பட்டுள்ள காரணம், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழலை விசாரிக்க தனி அமைப்பு உள்ளது என்கின்றனர்.

ஆனால் அந்த ஆணையத்தின் சட்டத்தை எடுத்துப் பார்த்தால் உள்ளாட்சி அமைப்புகளின் மீது புகார் வந்தால் அதற்குரிய விசாரிக்கும் அமைப்புக்கு (லோக் ஆயுக்தாவுக்கு அல்லது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு) அனுப்ப வேண்டும் என்று உள்ளது. இதுவே மிகப்பெரும் முரண்பாடு ஆகும்.

லோக் ஆயுக்தாவில் இதுதவிர வேறு என்ன முரண்பாடு உள்ளது?

ஊழலை விசாரிப்பதில் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், கடை நிலை ஊழியர்கள் என வித்தியாசம் விதிவிலக்கு ஏன்? லஞ்ச ஒழிப்புத்துறை ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது மறுகட்டமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்: மாநில அரசின் குறுக்கீடு அதிகமுள்ள லஞ்ச ஒழிப்புத்துறையை, லோக் ஆயுக்தாவின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையை ஒழித்துவிட்டு, அதன் பணிகளை முழுமையாக லோக் ஆயுக்தாவே செய்யும் என்று கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டும் இல்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையை லோக் ஆயுக்தாவிற்கு ஒரு இணையான துறையாக தொடர வழி செய்கிறது தமிழக லோக் ஆயுக்தா சட்டம். இது சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் போக்கில் உள்ளது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறைக்காவது போலீஸ் உண்டு, அவர்கள் வழக்குத்தொடர முடியும், லோக் ஆயுக்தாவுக்கு அந்த அதிகாரம் கூட இல்லாமல் பிடுங்கப்பட்டுள்ளது.

முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான ஊழல் புகார்கள் லோக் ஆயுக்தாவால் விசாரிக்கப்பட்டு, போதிய ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கித் தரும்வரையான பணிகளை லோக் ஆயுக்தா செய்ய முடியாது.

அதாவது, தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் விசாரணைப் பிரிவு(Inquiry Wing) மட்டுமே உள்ளது வழக்கு தொடரும் பிரிவு(Prosecution Wing) கிடையாது. இப்போதுள்ள சட்டப்படி ( CHAPTER 6,பிரிவு 7(a)) , லோக் ஆயுக்தாவின் விசாரணையில் அமைச்சர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெரியவந்தாலும், அதுகுறித்தான விசாரணை அறிக்கையை முதல்வருக்கு அனுப்பி வைக்கும் பரிந்துரைப் பணியை மட்டுமே லோக் ஆயுக்தா செய்யும்.

முதல்வர் மீதான விசாரணை அறிக்கையை (அவர் ஊழல் செய்திருக்கிறார் என்ற ஆதாரங்களோடு) ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். உயரதிகாரிகள் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தப் பரிந்துரை அறிக்கை மீது ஆளுநரோ, முதல்வரோ, அரசோ என்ன நடவடிக்கை எடுக்கும், எப்போது நடவடிக்கை எடுக்கும்.? எடுக்காவிட்டால் லோக் ஆயுக்தா என்ன செய்யும் என்ற எந்தக் கேள்விக்கும் இந்த சட்டத்தில் பதில் இல்லை.

மற்ற மாநிலங்களில் இதுபோன்றுதான் உள்ளதா? நீங்கள் சொல்லும் சிறப்பு பிரிவு உண்டா?

பக்கத்து மாநிலங்களான கர்நாடகா(Chapter14), கேரளா (Chapter15) மற்றும் சமீபத்தில்(2015) லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவந்த இமாச்சலப் பிரதேசம் (பிரிவு 4) போன்ற பல மாநிலங்களின் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழக்கு தொடரும் பிரிவு உள்ளது. விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து ஊழல்வாதிகளுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அம்மாநிலச் சட்டத்தில் வழிவகை உள்ளது.

மற்ற மாநிலங்களில் லோக் ஆயுக்தாவின் அதிகாரம், நமது மாநிலத்தில் பிடுங்கப்பட்ட முக்கிய அதிகாரம் என்ன?

ஊழல் புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்களை பதவி விலகச் சொல்லிப் பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் லோக் ஆயுக்தா சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ( தமிழக லோக் ஆயுக்தா சட்டம் 2018, பிரிவு 26 ) முதல்வர், அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் புகாரானாது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அப்புகாரில் முகாந்திரம் உள்ளது என்று லோக் ஆயுக்தா கருதுமானால் அம்முதல்வரையோ, அமைச்சரையோ, பதவியிலிருந்து விலகச் சொல்லி பரிந்துரை அளிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவிற்கு அளிக்கப்படாதது ஏன்?

யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா பரிந்துரைக்கலாம் என்ற பட்டியலிலிருந்து முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் விலக்கு கொடுக்கப்பட்டது ஏன் ? ( அரசு ஊழியர்களின் மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருந்தால் அவர்களை தற்காலிக பணிநீக்கம், இடமாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்கு அதிகாரம் உள்ளது). கர்நாடக லோக் ஆயுக்தா சட்டத்தில் முதல்வர், அமைச்சர்களை பதவி விலகச் சொல்லப் பரிந்துரைக்கும் சட்டப்பிரிவும் (பிரிவு 13) உள்ளது.

வேறு முக்கிய அம்சம்  நீக்கப்பட்டுள்ளதா?

Suo Motu அதிகாரம், தானே முன்வந்து லஞ்ச, ஊழல் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது( suo Motu), அமைச்சர்கள், உயரதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை செய்வது(ரெய்டு) போன்ற அவசியமான அதிகாரங்கள் குறித்த விவரங்கள் தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் இல்லை.

சொத்துவிவரம் தாக்கல் முதல்வர், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் போன்றவர்களின், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்கு ஒரு முறை உதாரணத்திற்கு (ஆண்டுக்கு ஒருமுறை) தாக்கல் செய்யவேண்டும் என்ற பிரிவு, பல மாநிலங்களில் உள்ளது. தமிழக சட்டத்தில் இது இல்லை.

சேவை குறைபாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம், பல மாநிலங்களில் (ஆந்திரா, கர்நாடகா) லோக் ஆயுக்தாவானது அரசு தரும் சேவைகளில் (குடிநீர், மின்சார இணைப்ப மற்றும் பிற) ஏற்படும் குறைபாடுகள் குறித்து விசாரிக்கும் ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தில் இப்பிரிவே இல்லை.

மற்ற மாநிலங்களில் உள்ள 15 அம்சங்களை எடுத்து அதில் உள்ள 4 அம்சங்களை மட்டும் நீக்கிவிட்டனர். இவைதான் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

லஞ்ச-ஊழலை ஒழிக்க வலுவான லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உட்பட அனைத்து ஊழல் ஒழிப்பு அமைப்புகளும் ஓங்கிக் குரல் கொடுத்தன. ஆனால், நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டமானது ஆட்சியாளர்களைப் பாதுகாக்க, அவர்களின் ஊழல்களை மூடிமறைக்கக் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டமாகவே உள்ளது.

ஆகவே இதுகுறித்து அனைத்து அமைப்புகளுடன், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பொதுநல வழக்கு தொடரவும், பெரிய அளவில் பிரச்சாரம் மூலம் அழுத்தம் தரவும் முடிவெடுக்க உள்ளோம்.’’

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்