தனியார் பள்ளி மாணவர்களை கவர்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி : மூடப்படும் நிலையிலிருந்து தரம் உயர்த்தும் அளவுக்கு முன்னேற்றிய தலைமை ஆசிரியை

By க.ராதாகிருஷ்ணன்

கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி ஐம்பதுக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையிலேயே செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2002-ம் ஆண்டில் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வெறும் ஐந்தாக குறைந்து மூடப்படும் நிலைக்குச் சென்றது.

இந்நிலையில் 2002-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார் விஜயலலிதா. பள்ளியில் இவர் மட்டுமே ஆசிரியையாக இருந்தபோதும் மனம் தளராமல் இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று பள்ளி வயதில் உள்ள குழந்தைகள், பிற பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் பேசி மாணவ, மாணவிகளை அழைத்துவரும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். இதனால், ஒரே ஆண்டில் ஐந்தாக இருந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்தது.

இப்பள்ளியில் பொறுப்பேற்றவுடன் ரூ.50 ஆயிரம் செலவுசெய்து பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், மின்விசிறி, பெயிண்டிங், கழிப்பிட வசதிகளை செய்துகொடுத்தார். மூடப்படும் நிலையில் இருந்த இப்பள்ளியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கை 64, 71, 78, 103 என அதிகரித்தது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாததால் தலைமையாசிரியை விஜயலலிதாவின் முயற்சியின் காரணமாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இப்பள்ளிக்கு இரு கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.4.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியை விஜயலலிதா, இவரது கணவர் சுதிர்குமார் ஆகியோரும் தலா ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினர்.

இதனுடன் மேலும் பலரிடம் நன்கொடை பெற்று புதிதாக அமைக்கப் பட்ட இரு வகுப்பறைகளிலும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் டைல்ஸ், மின்விசிறி, மாணவ, மாணவிகளுக்கு கற்பிப்பதற்கு வசதியாக படங்கள், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர், மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக கணினி, கழிப்பிடம் ஆகியவற்றை ஏற்படுத்தினார் விஜயலலிதா.

கற்பிக்கப்படும் கல்வி, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு காரணமாக ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. ஐந்தாறு ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பெற்றோர் சொந்த செலவில் ஆட்டோ வைத்து இப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் படித்த மாணவ, மாணவிகள் பலர் இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளதுடன், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை படித்த ஏராளமான மாணவ, மாணவிகளும் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளையும் சேர்த்து 7 வகுப்புகள் இருப்பதால் போதுமான கட்டிடம் இல்லாத நிலையில் பள்ளியை பார்வையிட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி, கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது பள்ளி மாணவர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ள நிலையில், கிராமக் கல்விக்குழு மூலம் இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முன்மொழிவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசி ரியை விஜயலலிதா கூறியபோது, “வீடு, வீடாகச் சென்று பெற்றோர்களை அணுகி யும், உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தும் மாணவர் சேர்க்கையை மேற்கொண்டோம். மாண வர்களுக்கு கவனத்துடன் தரமான கல்வி வழங்குவது, பள்ளி வளாகத்தை தூய் மையாகப் பராமரிப்பது போன்றவற்றை அறிந்த பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் பயின்ற தங்கள் குழந்தை களை இங்கு கொண்டு வந்து சேர்த்துள் ளனர்” என்றார் பெருமிதத்துடன்.

5-லிருந்து 217 ஆக உயர்ந்த மாணவர் எண்ணிக்கை

கடந்தாண்டு முதல் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது. மாண வர் சேர்க்கை 168 ஆக அதிகரித்தது. இந்தாண்டு இரண்டாம் வகுப்பில் ஆங் கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு மட்டும் 104 மாணவ, மாணவிகள் புதிதாகச் சேர்ந் துள்ளதால் மாணவர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது (5-ம் வகுப்பு முடித்து வெளியேறியவர்களை தவிர்த்து).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்