பாமக ஆட்சிக்கு வந்தால் சிபிஎஸ்இ முறையில் கல்வி: ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது சமச்சீர் கல்வி அல்ல சமரசக் கல்வி. இதன் மூலம் என்னை போன்ற கல்வியாளர்களை ஏமாற்ற முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது: திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சியாக, பாமக 2016-ல் தமிழகத்தில் ஆட்சியில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு பின் வாக்கு எண்ணிக்கையின்போது பாமக 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்ற செய்திகள் ஊடகத்தில் வெளியிடப்படும்போது, மதுவிலக்கை கூறியே ஆட்சியை பிடித்துவிட்டார்கள் என அனைவராலும் பேசப்படும்.

எம்ஜிஆர் என்ற பெரிய சக்தி உருவாக்கிய கட்சியான அதிமுக, திமுகவுக்கு மாற்று கட்சியாக விளங்குவது மட்டும்தான் அக்கட்சியின் பலம். ஏன் என்றால், அக்கட்சி தற்போது ஜெயலலிதா என்ற சர்வாதிகாரியின் கையில் சிக்கி உள்ளது. திமுகவும் வயது முதிர்வின் காரணமாக வேறு தலைவரை எதிர் நோக்கியுள்ளது. ஆனால், அந்த இடத்திற்கு வருவதற்காக அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டுள்ளதால், அக்கட்சியினரே யார் தலைமை பொறுப்புக்கு சரியானவர்கள் என அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. அதனால், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக பாமக விளங்குகிறது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், ‘தமிழகத்தில் அமல்படுத்தியுள்ளது சமச்சீர் கல்வி அல்ல, சமரசக் கல்வி. என்னை போன்ற கல்வியாளர்களை ஏமாற்றும் விதமாக சமச்சீர் கல்வி உள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை தேவை. அதற்கு, சிபிஎஸ்இ கல்வி முறைதான் சிறந்தது. ஏனென்றால், நாட்டின் முக்கிய நகரங்களில் இவ்வாறான கல்வி முறைதான் நடைமுறையில் உள்ளது. மேலும், கிராமப்பகுதியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவன் கூட சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியும். அதேநேரம், இந்த கல்வி முறையால் தமிழ் மொழி அழியாது’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE