தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி மருத்துவர்களுக்கே ஆச்சர்யமாக உள்ளார். அவரது மனோதிடம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.
தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் உள்ள பலரது வயது கருணாநிதின் அரசியல் அனுபவம், இத்தனை நீண்டகால அரசியல் அனுபவம் பெற்ற தலைவர்கள் தற்போது தமிழகத்தில் இடதுசாரி கட்சித்தலைவர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்ற சிலரே உள்ளனர்.
திராவிடர் கழகத்தில் ஆரம்பித்து, அண்ணாவுடன் ஒன்றாக திமுக ஆரம்பித்தபோது பயணித்து முதல் பொதுத்தேர்தலை திமுக சந்தித்த 1957 சட்டப்பேரவைத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும்( இடையில் ஒரேதடவை போட்டியிடவில்லை) போட்டியிட்டு தோல்வியே சந்திக்காத ஒரு அரசியல் தலைவர் கருணாநிதி மட்டுமே.
தமிழக அரசியலில் 70 ஆண்டுகளுக்கு மேல் பல மூத்த தலைவர்களுடன் அரசியல் செய்த தமிழகம் தாண்டி இந்திய அரசியலிலும் மிக மூத்த தலைவர் என்ற புகழ்பெற்றவர் கருணாநிதி. தொண்டர்களால் கலைஞர் என்று அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதியின் அரசியல் அனுபவம் தமிழக அரசியல் இயக்கத்தோடு ஒன்றியது.
அவரது வாழ்க்கை வரலாறான நெஞ்சுக்கு நீதியின் அத்தனை பாகங்களும் தமிழக அரசியலின் அத்தனை காலக்கட்டங்களையும் கூறும் ஒரு புத்தக தொகுப்பாகும். பசவபுன்னையா எழுதிய அருண் ஷோரியின் அவதூறுக்கு பதில், பி.ராமமூர்த்தி எழுதிய திராவிட இயக்க வரலாறு, ஈ.எம்.எஸ், ரொமிலா தாப்பர், பிபன் சந்திர போஸ், ஸ்மித் சர்க்கார், இர்பான் ஹபீப், அமர்த்தியா சென் போன்றோர் வரிசையில் 20-ம் நூற்றாண்டு தமிழக அரசியலை அவரது அனுபவத்தோடு கூறியிருப்பார்.
ஈ.எம்.எஸ்.இடதுசாரி தலைவர்களில் அதிகம் அரசியல் கட்டுரைகள், வரலாற்றியல் ரீதியான புத்தகங்களை எழுதியவர். அவரளவுக்கு அரசியல் மொழி, இலக்கியம் என அதிக அளவில் எழுதிய தமிழக தலைவர் கருணாநிதி. அவரது குறளோவியம் எந்த காலத்திலும் அவர் பெயரை பறைச்சாற்றும் பதிவு. எழுத முடியாமல் போனபோது வாயால் சொல்லச்சொல்ல அதை மற்றவர் மூலம் எழுத வைத்தவர்.
எந்த காலத்திலும் முயன்று பார்க்கும் பிடிவாத குணம் கொண்டவர், கடும் உழைப்பாளி, புதுமைகளை தன் வசப்படுத்திக் கொண்டவர். இன்று பேஸ்புக், ட்விட்டரில் பல அரசியல் தலைவர்கள் வாழ்க்கையை நடத்தினாலும், முதன்முதலில் இணையத்தை தன் வசப்படுத்திய தலைவர் கருணாநிதி மட்டுமே. முகநூலில் முதன்முதலில் நுழைந்த தலைவர் கருணாநிதி மட்டுமே.
வாழ்க்கையே போராட்டமாக, போராட்டமே வாழ்க்கையாக இருந்த கருணாநிதி சந்தித்த அரசியல் ரீதியான வெற்றி தோல்விகள் அவரை பக்குவப்படுத்தின. 13 ஆண்டுகாலம் அரசியல் வனவாசம், தொடர் தோல்வி அவரை துவண்டுப் போகச்செய்யவில்லை. மாறாக 1989-ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.
வாழ்க்கையில் அவர் சந்தித்த விபத்துகள் ஏராளம். 1968-ல் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டபோது கண்ணில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை எடுக்க வேண்டியதானது. அந்த வலி அவருக்கு வாழ்நாள் முழுதும் இருந்தும் அதனுடன் சேர்ந்தே பயணப்பட்டு தனது வழக்கமான படிக்கும்பணி, எழுத்துப்பணிகளை ஆற்றிவந்தார்.
அரசியல் எதிரிகளால் தாக்கப்பட்டு கால்வாய் ஓரம் வீசப்பட்டு உயிருக்கு போராடி பிழைத்துள்ளார். கல்லக்குடி போராட்டத்தில் ரயில் மறியலின்போது ரயிலை இயக்கி தங்களை பயமுறுத்தவேண்டும் என்பதற்காக அருகில் கொண்டுவந்து நிறுத்திய அந்த தருணத்தைப்பற்றி நெஞ்சுக்கு நீதியில் எழுதும்போது, ரயிலை எங்கள் மீது ஏற்றுவதுபோல் வேகமாக இயக்கி கொண்டு வந்தார்கள்.
எங்கள் மீது ரயில் ஏறி விடும் முதல்பலியாக நான் களப்பலியாவேன் என்று நினைத்தேன், ஆனால் எங்கள் அஞ்சா நெஞ்சுறுதி கண்டு அருகில் சில அடி தூரத்தில் ரயிலை நிறுத்தி விட்டார்கள் என்று எழுதியிருப்பார். பின்னர் வேறொரு சந்தர்ப்பத்தில் திமுக ஆட்சியை பிடித்த ஒரு கட்டத்தில் அண்ணா பேசும்போது தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும், அமைச்சர் பதவி என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதுபவன் தம்பி கருணாநிதி என்று கல்லக்குடி போராட்டத்தை பற்றி குறிப்பிட்டு பேசியிருப்பார்.
அனைத்து துறைகளிலும் தடம்பதித்த அவர் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலனுக்காக தான் ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோதும் ஆற்றிய பணிகள் ஏராளம்.
பல முன்னுதாரண செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கருணாநிதி ஜனநாயக எண்ணம் கொண்டவராக அடுத்தவர்களை மதிக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர். கட்சிக்காரர்களை மாவட்டந்தோறும் கருணாநிதி சந்திப்பார்.
கட்சிக்குள் பூசலில் உள்ளவர்களை அரைமணி நேரம் பேசினால் போதும், மாற்று எண்ணம் கொண்டோரும் மனம் மகிழ்ந்து செல்லும்போது, கட்சிப்பணியை சந்தோஷத்துடன் செய்ய கிளம்பி விடுவார்கள். தலைவருக்குரிய பண்புடன் விளங்கிய கருணாநிதியின் தலைமை உள்ளது என்ற எண்ணம் திமுக தொண்டர்களை தமிழகம் முழுதும் வேகமாக இயக்கியது.
தனது தளராத விடாப்பிடியான போராடும் குணத்தை தற்போது உடல் நலிவுற்ற நிலையிலும் கருணாநிதி காட்டி வருகிறார். நேற்றிரவு அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்து குடும்பத்தார் அனைவரும் கோபாலபுரத்தில் குவிந்தனர். ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது என மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள். கனிமொழி ஒருபக்கம் அழ அனைவரும் அழ ஆரம்பிக்க ஸ்டாலினுக்கும் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.
தமிழக மக்கள் அன்றுதான் ஸ்டாலின் கண்ணீர் வடிப்பதை பார்த்தார்கள். பின்னர் அனைவரும் முடிவெடுத்து காவிரி மருத்துவமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிச்சென்றனர். அங்கு உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட்டது.
ஆச்சர்யமூட்டும் வகையில் அவர் உடனடியாக அதை கிரகித்துக்கொண்டார். அவரது ரத்த அழுத்தம் சீரானது. போராடும் அவர் குணத்தை தா.பாண்டியனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இயற்கை அவரை வெல்ல அவருடன் போராடுகிறது என்று சொல்லலாம். தனது வில் பவரால் அவர் உடல் நலம் தேறி வருவதை மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
அவர் நலம் பெறவேண்டும் என்று திமுக தொண்டர்கள் தாண்டிய பலரது வேண்டுதலின் பலன் அவரை காக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago