தமிழகத்தில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஏரி, குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. பல ஊர்களில் குடிநீருக்கே மக்கள் அலையவேண்டிய நிலை நீடிக்கிறது. கடந்த மாதம் தண்ணீர் இன்றி மேட்டூர் அணையை திறக்க முடியாததால் இந்த ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி நடக்கவில்லை.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வருகிறது.
வீணான 142 டிஎம்சி நீர்
கடந்த 2005-ல் மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியதால், வினாடிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அந்த ஆண்டில் மட்டும் 142 டிஎம்சி தண்ணீர், கடலில் கலந்தது. அடுத்து 2006-ம் ஆண்டிலும் அணை முழுமையாக நிரம்பி வழிந்தது.
கடந்த 2013-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அணை நிரம்பி விட்டது., கர்நாடகாவில் இருந்தும் விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடிக்கும் மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இவ்வளவு தண்ணீர் கிடைத்தும், நம்மால் அதை தேக்கிவைக்க முடியவில்லை.
கொள்ளிடம் வழியாக உபரி நீர் முழுவதும் கடலுக்கு திருப்பிவிடப்பட்டது. அதே நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் கடைமடைப் பகுதி விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 19 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்ததாக கூறப்படுகிறது.
அதுபோலவே, இந்த ஆண்டும் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. எதிர்பார்க்கப்பட்டதை விடவும் வேகமாக மேட்டூர் அணை நிரம்யுள்ளது. இந்த அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் முழுமையாக திறக்கப்படுகிறது.
வீணாகும் தண்ணீர்
உபரி நீர் திறப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக சேமிக்க முடியாத சூழல் ஏற்படும் என நீர் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்து இருந்தால் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை விவசாயிகள் தொடங்கி இருப்பார்கள். குறிப்பாக 90 அடியை அணை எட்டியவுடனேயே அணையை திறந்திருக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அவ்வாறு திறந்து இருந்தால், தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடக்கும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிறுசிறு நீர்நிலைகளை நிரப்ப முடியும். இவை நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கும். முன்கூட்டியே அணையை திறக்காததால் வெளியேற்றப்படும் உபரி நீரை, வீணாக கடலை நோக்கித் திருப்பி விடும் சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை முன்னாள் பொறியாளர் வீரப்பன் கூறுகையில் ‘‘இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் கர்நாடகா கூடுதல் தண்ணீர் திறந்து விடுகிறது. அங்குள்ள அணைகள் நிரம்பி விட்டதால் உபரி நீர் முழுவதும் பெருக்கெடுத்து வருவதால் மேட்டூர் அணையும் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் முன்கூட்டியே நிரம்பி விட்டது.
அணைக்கு வரும் நீரின் அளவை கணக்கில் எடுத்து முன்கூட்டியே தமிழக அரசு அணையை திறந்திருக்க வேண்டும். இதன் மூலம் கல்லணைக்கு முன் கூட்டியே தண்ணீர் சென்றிருக்கும், இதற்குள்ளாக டெல்டா பாசனப்பகுதிகள் முழுவதும் காவிரி நீர் சென்றிருக்கும். பின்னர் உபரி நீரை பாசன குளங்கள், ஏரிகளில் சேமிக்க முடியும். அணையை காலதாமதமாக திறந்ததால் தண்ணீர் முழுவதும் தற்போது வீணாக கடலில் சென்று கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குளங்கள், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் சென்று சேராத சூழல் உள்ளது. முறைப்படி முன்கூட்டியே தூர் வாரி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தற்போது தண்ணீர் வந்து விட்ட நிலையில் வேறு வழியில்லை. மோட்டர் பம்ப் செட் மூலம் தண்ணீரை இறைத்து குளங்கள், ஏரிகளில் நிரப்பலாம். இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வீணாகவே வாய்ப்பு.
கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தேக்கி வைக்க முடியாமல் 100 டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீர் வீணாக கூடிய வாய்ப்பு உள்ளது. கொள்ளிடத்தில் இருந்து தண்ணீரை பிரித்து வீராணம் ஏரிக்கு அனுப்பினால் அந்த ஏரியை உடனடியாக நிரம்ப முடியும். இதன் மூலம் பாசனத்திற்கு மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட அந்த ஏரியால் குடிநீர் வசதி பெறும் பகுதிகள் பயனடையும்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago