வில்லங்கப் பேச்சால் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவரிடமிருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மூத்த அமைச்சரான பொன்முடியின் கட்சி பதவியை பறித்தது மற்றவர்களுக்கான எச்சரிக்கை. அந்த வகையில் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கட்சிக்கு ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும் பொன்முடியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவுக்கு தந்திருப்பது பல்வேறு ஊகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.
இதன் மூலம் சில விஷயங்களை திமுக தலைமை சொல்லாமல் சொல்லி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சிவாவை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் கட்சியின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பதாகச் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
திமுக மூத்த அமைச்சர்களின் ஒருவர் கே.என்.நேரு. இவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதி எம்பி-யாக இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி தொடங்கி 3 நாட்கள், அமைச்சர் நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன், மற்றும் அருண் நேரு ஆகியோரை குறிவைத்து அமலாக்க துறை அதிரடி ரெய்டுகளை நடத்தியது.
இதன் முடிவில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக உறுதிப்படுத்தி இருக்கும் அமலாக்கத்துறை, இதில் அமைச்சர் நேருவுக்கும் அவரது மகன் அருண் நேருவுக்கும் உள்ள தொடர்புகளையும் பட்டியலிட்டுள்ளது. இதனிடையே, அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
» 2025 ஏப்ரல் வரை 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கிய சீனா: பின்னணி என்ன?
» விண்வெளி சுற்றுப் பயணத்தை முடித்து பூமி திரும்பிய காதலியை வரவேற்ற ஜெப் பெசோஸ்
நேருவை குறிவைத்து அமலாக்கத்துறை இத்தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலையில், இதுகுறித்து திமுக தலைமையிலிருந்து சம்பிரதாயமாகக் கூட எவ்வித கண்டன அறிக்கையும் வெளியாகவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட போது திமுக பொங்கி எழுந்து கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போதும் திமுக தலைமை பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால், அவரை விட சீனியரான கே.என்.நேருவை குறிவைத்து அமலாக்கத்துறை காட்டி வரும் அதிரடிகளுக்கு திமுக தலைமை எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. நேருவுக்கு ஆதரவாக திமுக-வில் உள்ள சட்ட அமைச்சர், அமைப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கூட வாய் திறக்கவில்லை. நேருவை அமலாக்கத்துறை நடவடிக்கை விவகாரத்தில் இப்படி ஒரேயடியாய் கைவிட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.
நேருவை கண்டுகொள்ளாதது ஒருபுறமிருக்க, திருச்சி அரசியலில் அவரோடு எதிரும் புதிருமாய் நிற்கும் திருச்சி சிவா எம்பி-யை துணை பொதுச்செயலாளர் பதவியில் இந்த நேரம் பார்த்து அமர்த்தி இருப்பதும் நேரு விசுவாசிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. ஏற்கெனவே ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் நேருவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதை மூன்றாகப் பிரித்து உதயநிதியின் நண்பரான அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டார். அத்துடன் நேருவுக்கு இணையாக அன்பில் மகேஸுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது திருச்சி சிவாவுக்கு தலைமைக் கழக பதவி வழங்கப்பட்டிருப்பதால் திமுக-வில் நேருவுக்கான முக்கியத்துவம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த போதே, “யாரையும் நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க போல. பாலாஜி மாதிரி நம்மாள எல்லாம் ஜெயிலுக்குப் போகமுடியாதுப்பா” என்று தனது சகாக்கள் மத்தியில் ஜாலியாகப் பேசிய நேரு, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தன் பக்கம் திரும்பாமல் இருக்க ஒருசில தற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இது சம்பந்தமாக சிலர் தலைமையிடம் ஏடாகூடமாகப் போட்டுக் கொடுக்கவே, அதுகுறித்து தலைமைக்கு நேரு தன்னிலை விளக்கமும் அளித்ததாகச் சொல்கிறார்கள். நேரு விவகாரத்தில் தலைமை மவுனம் காப்பதன் பின்னணியோடு இந்த விவகாரங்களையும் இப்போது முடிச்சுப்போட்டுப் பேசுகிறார்கள்.
ஆனால் நேரு ஆதரவாளர்களோ, “எப்போதும் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்கும் நேரு, நெருக்கடிகளுக்கு அஞ்சாதவர். எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சாமல் திமுக-வுக்கும் தலைவருக்கும் பக்கபலமாக நிற்பார். திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தாலும் நேருவை முதன்மைச் செயலாளராக்கி அழகு பார்த்தவர் ஸ்டாலின்.
அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தொடர்பாக நேருவிடம் ஆறுதலாக பேசிய ஸ்டாலின், தொடர் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விசாரித்தபடி தான் இருக்கிறார். இதையெல்லாம் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேருவை திமுக தலைமை என்றைக்கும் கைவிடாது. அவருக்கான முக்கியத்துவமும் குறையாது” என்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுபவர் என்று பேர் வாங்கியே பழக்கப்பட்ட நேருவுக்கும் இது போறாத காலம் தான் போலிருக்கிறது!
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago