மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக பாஜக தலைவராக வந்திருக்கிறார் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன். வந்ததுமே முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு காலணி வாங்கித் தந்து அணியவைத்து அவரது சபதத்தை தற்காலிகமாக முடித்துவைத்திருக்கிறார்.
ஒருவிதமான அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் ஈர்க்கவே, கட்சி விதிகளை எல்லாம் தளர்த்தி நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கி இருக்கிறது பாஜக தலைமை என்று சொல்லப்படும் நிலையில், தலைவரான பிறகு ‘இந்து தமிழ் திசை’க்கு பிரத்யேக பேட்டியளித்தார் நாகேந்திரன். மிகவும் கவனமாகவே கேள்விகளை எதிர்கொண்டவர், சிக்கலான சில கேள்விகளை தனக்கே உரிய அரசியல் முதிர்ச்சியுடன் நாசூக்காக தவிர்த்துவிட்டே பேசினார். இனி, அவரது பேட்டி...
அதிமுக-வில் ஜெ.பேரவை மாநிலச் செயலாளர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சர் என பதவிகளை வகித்த நீங்கள், தமிழக பாஜக தலைவராக வந்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
பாஜக-வின் தமிழ்நாடு தலைவரானதை நான் பெருமையாக உணர்கிறேன். உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டது எனக்கு கிடைத்த பெரும்பேறு.
» தெலங்கானா மாநிலத்தில் காரில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
» அம்பேத்கரின் திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இல்லை: கார்கே குற்றச்சாட்டு
திராவிடக் கட்சியிலிருந்து வந்த நீங்கள் அதற்கு நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட பாஜக-வின் தலைவராக தேசிய தலைமை நினைப்பதை சாதிக்க முடியும் என நம்புகிறீர்களா?
நேரெதிர் கொள்கைகளா? உறுதியாக இல்லை. மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை தமிழக பாஜக-வால் சாதித்துக் காட்ட முடியும்.
பொன்னார், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பாஜக-வில் கடுமையாக உழைத்து தங்களுக்கான இடத்தைப் பிடித்தவர்கள். அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு நீங்கள் தலைவரானதன் ரகசியம் என்ன?
ஜனநாயகம் உள்ள கட்சி பாஜக என்பதற்கு நீங்கள் அளித்துள்ள பட்டியலே உதாரணம். பல தலைவர்களை உருவாக்கும் கட்சி பாஜக என்பதைத் தான் பாஜக-வின் அமைப்பு உணர்த்துகிறது. நீங்கள் சொன்னவர்களை நான் ‘பின்னுக்கு’த் தள்ளவில்லை. மாறாக, அவர்கள் தான் என்னைத் தலைவராக்க ‘முன்னுக்கு’ வந்தார்கள்.
முன்னாள் அதிமுக நிர்வாகியான நீங்கள் பாஜக தலைவராக வந்திருப்பது பாஜக-வுக்கு பலம் சேர்க்கும் என நம்புகிறீர்களா?
பாஜக-வின் பலம் அதன் கொள்கைகளும், அதன் தொண்டர்களும் தான். இந்த இரண்டும் தான் தற்போது எனக்குள் சேர்ந்துள்ளது.
இபிஎஸ் தலைமையால் அதிமுக இழந்திருக்கும் முக்குலத்தோர் வாக்குகளை தன் பக்கம் ஈர்க்கவே உங்களை பாஜக தலைவராக அங்கீகரித்திருக்கிறது பாஜக தலைமை என்கிறார்களே?
பாஜக என்றைக்குமே சாதி ரீதியாக தலைவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. தகுதியின் அடிப்படையிலும், தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் மட்டுமே அனைத்து நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களைப் பார்த்தே மக்கள் வாக்களிக்கிறார்கள்.
தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பாஜக-வில் தீவிர உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற கட்சியின் அடிப்படை விதியை உங்களுக்காகவே தளர்த்தி இருக்கிறார்களோ..?
இது உண்மை இல்லை. ஆந்திரா, கேரளா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் தேசிய தலைமை விதிவிலக்கை அளித்திருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் சில மாவட்ட தலைவர்களுக்கான விதிகளில் விதிவிலக்கு அளித்திருக்கிறோம். இது வழக்கமான நடைமுறை தான்.
கடந்த காலங்களில் அண்ணாமலையின் அதிரடிகள் தான் தமிழகத்தில் பாஜக-வுக்கு தனித்துவமான இடத்தைத் தந்துள்ளது. மிதவாதியான உங்களிடம் அந்த அதிரடிகளை எதிர்பார்க்கலாமா?
அண்ணாமலை மிகச் சிறப்பாக பணியாற்றினார் என்பது சரியே. ஆனால், ஒவ்வொரு தலைவரின் காலகட்டத்திலும் பாஜக வளர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு தலைவரும் தங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவார்கள். அனைவரின் இலக்கும் கட்சியின் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை அமைப்பதே.
முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பங்களிப்பை கட்சிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்?
அண்ணாமலையின் பங்களிப்பு தமிழக பாஜக-வில் தொடர்ந்து இருக்கும். அனைவரும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோம்.
அதிமுக முக்கிய தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் கூட்டணி முடிவால் இனி நீர்த்துப் போகும் என்கிறார்களே..?
சட்டம் தன் கடமையை செய்யும்.
சிறுபான்மை மக்கள் அதிகமுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த உங்களுக்கு இதுவரை அந்த மக்களும் வாக்களித்து வந்திருக்கிறார்கள். வக்பு சட்டமும் அமலான நிலையில் பாஜக தலைவராக வந்திருக்கும் உங்களால் அவர்களின் அபிமானத்தை மீண்டும் பெறமுடியும் என நம்புகிறீர்களா?
நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையானது ‘சப் கே சாத் சப்கா விகாஸ்’ எனப்படும் அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி என்பது தான். இதன்படி, நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் பாஜக-வின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களால் பயனடைந்துள்ளார்கள். ஆகையால் அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினரும் பாஜக அணிக்கு வாக்களிக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் நெல்லைச் சீமையிலும் அந்த மக்கள் என் மீதான அபிமானத்தை எப்போதும் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு இம்முறை நடிகர் விஜய் பெரும் சவாலாக இருப்பார் போலிருக்கிறதே... அதைச் சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
விஜயின் கட்சி தற்போது தான் துவக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாகவே சவால், சமாளிப்பு என்பதெல்லாம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.
தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த என்ன மாதிரியான வியூகங்களை வைத்திருக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, மக்களை மதுவுக்கு அடிமையாக்கும் அரசின் செயல்பாடுகள், போதைப் பொருட்களால் சீரழிக்கப்படும் இளைய தலைமுறை என, திமுக அரசின் தோல்வியை கூட்டணி கட்சியினருடன் இணைந்து தமிழக மக்களிடம் எடுத்துச் சென்று திமுக-வை வீழ்த்துவோம்.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சை திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி பகிரங்கமாக கண்டித்ததையும் அதனைத் தொடர்ந்து பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தவறிழைத்தது அமைச்சர்; தண்டிக்க வேண்டியது முதலமைச்சர். அது நடக்கவில்லை. அதைவிடுத்து, கட்சித் தலைவர் பொன்முடியை பொறுப்பை வீட்டு நீக்கி இருப்பதை நடவடிக்கை என்று கூறுவது வேடிக்கை.
அன்புமணி பாஜக கூட்டணியை விரும்புகிறார். ஆனால், ராமதாஸ் அதை விரும்பாததால் தான் அமித் ஷா சென்னை வந்த சமயம் பார்த்து அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்களே..?
யூகங்களுக்கும், வதந்திகளுக்கும் நான் பதில் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.
திமுக ஆட்சிக்கு எதிராக நீங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள். அதேபோல், வக்பு திருத்த மசோதா, மும்மொழிக் கொள்கை, நீட் விவகாரம் என பாஜக அணிக்கும் இந்தத் தேர்தலில் சவால்கள் நிறைய இருக்கிறதே..?
கண்டிப்பாக இல்லை. திணிக்கப்படாத இந்தி, நீதிமன்ற உத்தரவால் நடத்தப்படும் நீட், இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வக்பு சட்டத் திருத்தம். இவற்றையெல்லாம் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இது உங்களைப் போல் அனைவருக்கும் இறுதியில் தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.
அதிமுக தனது வலுவை இழந்துவிட்டதால் தான் கூட்டணி ஆட்சி என பாஜக இழுத்த இழுப்புக்கு வந்திருக்கிறது என்று சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?
இதுவும் உண்மை இல்லை. அதிமுக வலுவான கட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதற்காக, பாஜக யாரையும் இழுக்க வேண்டிய அவசியமும் இல்லை. திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்குவதற்காக அமைந்துள்ள எங்கள் கூட்டணி அதன் நோக்கத்தில் வெற்றி பெறுவது உறுதி.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் சீமான், விஜய் கட்சிகளை உங்கள் பக்கம் இழுக்கும் திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதே இப்போதைய எங்களின் ஒரே குறிக்கோள். அந்த வகையில் திமுக ஆட்சியை அகற்ற தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை வரவேற்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை எப்போது துவக்குகிறீர்கள்?
இது குறித்து விரைவில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பேசி ஆலோசனை செய்து முடிவெடுப்போம். எங்களது முதல் பிரச்சாரக் கூட்டமே பிரம்மாண்டமாக அமைய இருக்கிறது.
பாஜக-வை தமிழகத்தில் மேலும் வளர்க்க அமைப்பு ரீதியாக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? தமிழக பாஜக-வின் பிரிவுகளை மாற்றி அமைப்பீர்களா... புதிய நிர்வாகிகள் நியமனம் இருக்குமா?
ஆம். கட்டமைப்பில் கவனம் செலுத்தும் கட்சி பாஜக. ஆற்றல் மிக்க நிர்வாகிகளை நியமித்து, வாக்குச் சாவடி குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே கட்டமைப்பின் பலம் என்பதையும் நான் அறிவேன். அமைப்பின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கட்சியில் உள்ள அனைவரும் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுகின்றனர். அவரவரின் திறமைக்கேற்ப பொறுப்புகள் வழங்கப்பட்டு, கட்சியை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தம்பிதுரை மத்திய அமைச்சராகலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் அதிமுக-வுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க பரிந்துரைப்பீர்களா?
இது குறித்து பாஜக தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago