‘சிவசேனா, ஜேடியு வழியில் அதிமுக கபளீகரமாகும்’ - இபிஎஸ்ஸுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: “கடந்த காலங்களில் மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு பாஜக கூட்டணி வைத்தது, பிஹாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பாஜகவால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதைப் போல அதிமுகவையும் அமித்ஷா கபளீகரம் செய்கிற முயற்சிக்கு எடப்பாடி பலியாகி இருக்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியை அமைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணியை அறிவித்திருக்கிறார். பலமுறை தள்ளி வைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 3 மணிக்குத் தான் நடைபெற்றது.

அதற்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பு மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்ட பேனர் மூன்று முறை மாற்றப்பட்டது. முதலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், பிறகு தமிழக பாஜக கூட்டம் என்றும், இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் மாற்றப்பட்டு மிகுந்த குழப்பத்திற்கிடையே அமித்ஷா நடுநாயகமாக அமர்த்தப்பட்டு ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமி, இன்னொரு பக்கம் அண்ணாமலை அமர்ந்திருக்க கூட்டணியை அமித்ஷா அறிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்தாரே தவிர, வேறு எந்த விவரமும் வெளியிடாமலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பு தரப்படாமலும், அப்படி பேசினால் பத்திரிகையாளர்களின் நெருக்கடியான கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்ற நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து அமித்ஷா வேகமாக வெளியேறினார்.

பாஜக, அதிமுக கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருப்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த காலங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கு எதிராகவும், அதன் முன்னணி தலைவர்களுக்கு எதிராகவும் தொடுத்த தாக்குதல்கள், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் பல பேட்டிகளின் வாயிலாக தொலைக்காட்சிகள் மூலம் ஆதாரத்துடன் வெளிவந்தது தமிழக அரசியல் களத்தில் இனி தீவிரமாக பேசப்படுகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, அதிமுகவில் அமைச்சராக இருந்து பாஜகவில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் புதிய பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளாக, அண்ணாமலையின் திராவிட இயக்க எதிர்ப்பு, குறிப்பாக, அதிமுகவுக்கு எதிராக பேசிய அண்ணாமலை இனி தொடர்ந்து அதே குற்றச்சாட்டுகளை கூறுவாரா ? தமிழகத்தில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது ? கூட்டணியின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணியா ?

அதிமுக தலைமையிலான கூட்டணியா? வேறு என்ன பெயர் கொண்டு அழைப்பது என்ற பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்து விட்டன. கடந்த காலங்களில் மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு பாஜக கூட்டணி வைத்தது, பிஹாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட ஐக்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பாஜகவால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதைப் போல அதிமுகவையும் அமித்ஷா கபளீகரம் செய்கிற முயற்சிக்கு எடப்பாடி பலியாகி இருக்கிறார்.

பாஜக, அதிமுக கூட்டணி அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு கொள்கையற்ற கூட்டணி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. பாஜகவின் செயல் திட்டங்களில் பலவற்றை அதிமுக ஏற்கப் போகிறதா ? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பு, மும்மொழி திட்டம் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிக்கும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை திறப்பது, மக்களவை தொகுதி சீரமைப்பில் தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பு, நிதிப் பகிர்வில் தமிழகம் புறக்கணிப்பு;

வெள்ள நிவாரண நிதியில் பழிவாங்கும் போக்கு, மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2132 கோடி வழங்காததால் 8 மாதங்களாக ஊதியம் தர முடியாத நெருக்கடி, இதனால் 40 லட்சம் மாணவர்கள் பாதிப்பு, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே கலாச்சாரம், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை பறிக்கும் வக்பு சட்டத் திருத்தம், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை சட்ட திருத்தம், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி மறுப்பு;

10 ஆண்டுகாலமாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத நிலை என தமிழக விரோத பாஜக அரசின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி அவர் விளக்கம் அளிக்கவில்லையெனில், பாஜக - அதிமுக சந்தர்ப்பவாத தமிழக விரோத கூட்டணிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2013 முதல் 2024 வரை கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 2014-ல் நடைபெற்ற ஒரு தேர்தலைத் தவிர, அனைத்து தேர்தல்களிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளன. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல், ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்கள் என அனைத்திலும் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்றால், தமிழக உரிமைகளை பாதுகாக்கிற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துகிற மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள். தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்த தலைமை மீது தமிழக மக்கள் அளவற்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இண்டியா கூட்டணி என்பது தமிழக நலன் சார்ந்த கொள்கை கூட்டணி. இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருமித்த குரலில் செயல்பட்டு வருகிறது.

எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகும். அதேநேரத்தில், அரசியல் சுயநலத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிமுக, இன்றைக்கு பாஜகவிடம் சரணடைந்து அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் படுதோல்வியடையச் செய்து நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்