அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமையலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில் அண்ணாமலை மாற்றம் என்று வரும் செய்திகளும் தமிழக பாஜக வட்டாரத்தை பரபரப்பாக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பேட்டியிலிருந்து...
தன்னை இபிஎஸ் சந்தித்த பிறகு, 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிவிட்டார் அமித் ஷா. அது அதிமுக அங்கம் வகிக்கும் தேஜகூ ஆட்சியா? - அமித் ஷா இரண்டாவது முறை சொன்னபோது, “அதிமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்கியிருக்கிறது. உரிய நேரத்தில் அறிவிப்பு வரும்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. அக்கட்சியின் தலைவர்கள் உள்துறை அமைச்சரவைச் சந்தித்தனர். தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காக சந்தித்ததாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
திமுக உள்ளிட்ட கட்சியினரும் சந்திக்கிறார்கள். திமுக அமைச்சர்கள் சந்தித்து கோரிக்கை வைக்கிறார்கள். அப்படித்தான் பழனிசாமியும் சந்தித்திருக்கிறார். அமித் ஷா பாஜக-வின் முக்கியமான தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றி அவருக்கு அக்கறை இருக்கத்தானே செய்யும். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை மாற்ற வேண்டும் என்கிற திட்டம் அவரிடம் இருக்காதா? எனவே, அவருடைய அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக-வின் தயவு தேவை என்று பாஜக மேலிடம் கருதுகிறதா? - 1967-ல் காமராஜரைத் தோற்கடிக்கவே கூட்டணி தேவைப்பட்டது. ராஜாஜி அந்தக் கூட்டணியை உருவாக்கினார். இன்று வரை கூட்டணி ஓடிக்கொண்டே இருக்கிறது. கயிறு இழுக்கும் போட்டியில் ஒரு பக்கம் 10 பேர், இன்னொரு பக்கம் 4 பேர் என இழுக்க முடியுமா? அது ஒரு கான்செப்ட்.
» பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
» மே.வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் குளிர்பானம் வழங்கிய முஸ்லிம்கள்
திமுக தனியாக நின்று வெற்றி பெற முடியுமா? தமிழகத்தில் எல்லாக் கட்சிகளும் கூட்டணி இல்லாமல் நிற்க முடியுமா? அப்படி நடந்தால், எங்கள் தலைவர்களும் அதை முடிவு செய்வார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகளைக் கூட்டினால் 10-12 சதவீதம் வந்துவிடுகிறது. கூட்டணியின் பலம்தானே வெற்றியைத் தருகிறது. எனவே, கூட்டணியை ஏற்படுத்துவது தவறு கிடையாது.
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுகளின் பின்னணியில் அண்ணாமலை மாற்றப்படலாம் எனவும் ஊகங்கள் கிளம்பியுள்ளனவே? - மாற்றப்படுவார், நீக்கப்படுவார், ராஜினாமா செய்துவிட்டார் என்று ஆளாளுக்கு ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு தேசிய கட்சியில் என்ன நடைமுறையோ அது நடக்கும். அரசியல் வானில் பாஜக உயர்ந்துள்ளதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். இது ஒரு தேசிய கட்சி. நிச்சயமாக மேலிடம் வழிகாட்டும்.
கூட்டணிக்காக அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக அழுத்தம் கொடுக்கிறதாமே? - இதுபோன்ற கருத்தை அதிமுக-வில் யாராவது சொல்லியிருக்கிறார்களா? அவர்கள் எதுவும் சொல்லவில்லை. பிறகு ஏன் ஊகத்துக்கு இடம் கொடுக்க வேண்டும்?
2026-ல் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையில் தான் போட்டி என்று விஜய் சொன்னது பற்றி..? - இவருக்கும் அவருக்கும்தான் போட்டி என்றால், மற்ற கட்சிகள் எதுவுமே இல்லையா? மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 23 சதவீதம், தே.ஜ.கூட்டணி 18.6 சதவீதம், நாதக 8.3 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. ஏறத்தாழ 50 சதவீத வாக்குகள் வாங்கிய கட்சிகள் ஒன்றுமே இல்லையா? இரண்டரைக் கோடி வாக்குகளைப் பெற்ற கட்சிகள் எல்லாம் ஜீரோவா? கட்டுக்கதை அளக்கிறார்களா? கற்பனையில் பேசி மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா?
கூட்டணிக்கு சீமானும் வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா? - திமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்கிறார் சீமான். திமுக-வை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் என்கிறார் பழனிசாமி. மக்கள் விரோத திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்று நாங்களும் சொல்கிறோம். ஒன்றுபட்ட உணர்வுள்ள வாக்குகள் சிதறாமல் ஒரு வெற்றியை உருவாக்க முடியுமா என்று சிந்திக்கலாம். எதிர்ப்பு வாக்குகள் சிதறினால், மக்கள் யாரை எதிர்த்து வாக்களிக்கிறார்களோ அவர்கள் ஜெயித்துவிடுகிறார்கள்.
ஆளுங்கட்சி 40 சதவீதம், எதிர்க்கட்சிகள் 60 சதவீதம் என்றால், பெரும்பான்மையாக வாக்களிக்கும் மக்கள் தோற்றுவிடுகிறார்கள். சீமானின் சிந்தனையும் பாஜக-வின் சிந்தனையும் வேறு என்றாலும் அரசியல் களத்தில் எப்படி அமையும் என்று ஜோதிடம் கணிக்க முடியாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago