ராமேஸ்வரம்: “இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பாம்பனில் அமைந்துள்ள பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து இன்று காலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, நண்பகல் சுமார் 12.20 மணி அளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தடைந்தார்.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், கார் மூலம் பாம்பனில் உள்ள நெடுஞ்சாலை பாலத்துக்கு சென்றார். மண்டபத்தில் இருந்து பாம்பன் சாலை பாலம் வரையிலான சாலையின் இருபுறமும் மக்கள் மற்றும் பாஜகவினர் திரண்டு, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் 1 மணியளவில் பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர், ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
» சென்னை: வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம், செல்போன் திருடிய தம்பதி கைது
» நீலகிரியில் 56 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
ராமர் பாலத்தை தரிசித்தேன்: முன்னதாக, இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தார். அப்போது கடலில் அமைக்கப்பட்டுள்ள ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து பாரத்ததையும், ராம நவமி நாளான இன்று அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலக வடிவில் படர்ந்த நேரமும் ஒரே நேரத்தில் நடந்ததையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்தார்.
அந்தப் பதிவில் பிரதமர் மோடி, “இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் ஒருசேர கிடைத்தது. பகவான் ஸ்ரீராமரின் அருள் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாம்பன் ரயில் பாலத்தின் பின்னணி: 15-ம் நூற்றாண்டில் ராமேஸ்வரத்தை சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது. தொடர்ந்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக கடல் நீர் நிலையாக ஏற்பட்டு ராமேஸ்வரம் தனித் தீவாக உருவானதாக தமிழக அரசால் 1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் பாலம்: “கி.பி.1639-ல் திருமலை நாயக்கரின் தளபதி இராமபையன் மற்றும் தளவாய் சேதுபதி இடையே போர் நடந்தது. அப்போது, பாம்பனில் தளவாய் சேதுபதி ஒளிந்து கொண்டார். அவரைப் பிடிக்க மண்டபம் பாம்பன் இடையே தனது படை வீரர்களைக் கொண்டு மரத்திலான பாலம் கட்டிச் சென்று தளபதி இராமபையன், தளவாய் சேதுபதியை கைது செய்துள்ளார். இவ்வாறு மண்டபம் பாம்பன் இடையே முதன்முதலாக தளபதி இராமபையனால் சிறிய அளவிலான ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பாலம்: 19-ம் நூற்றாண்டிலேயே 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேயர்களால் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு கைவிடப்பட்டது. கி.பி.1837-ல், குருசடைத் தீவு பகுதியிலிருந்து பாம்பனுக்கு அருகே கடலில் இங்கிலாந்து பொறியியல் நிபுணர்கள் ஒரு கால்வாய் வெட்டி சிறிய ரக கப்பல்கள் செல்ல வழி வகுத்தனர்.
பின்னர் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையே கீழே கப்பலும் மேலே ரயிலும் செல்லக்கூடிய ஒரு பாலத்தைக் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்தவும் கி.பி.1911-ல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. கி.பி. 1911 ஜூன் மாதம் வேலை தொடங்கி கி.பி.1913 ஜூலை மாதம் வேலை முடிவடைந்தது.
நாற்பது அடி நீளமுள்ள 145 தூண்களைக் கொண்ட பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ தூரம் ஆகும். இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் இந்தப் பாலம் மணற்கல்லுடன் கூடிய கடல் பாறையில் 6,740 அடி நீளத்தில் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடிதான். கப்பல்கள் செல்ல வழி விடும் தூக்குப்பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்ட 4,000 டன் சிமென்ட் 1,36,000 கனசதுரஅடி களிமண் 1,800 கனசதுரஅடி மணல் 80,000 கன சதுரஅடி அளவுள்ள பெரும்பாறைகள்,2,600 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
போட் மெயில்: பாம்பன் பாலத்தில் முதல் ரயில் 1914 பிப்ரவரி 24 அன்று இயக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காகவே ஆரம்ப காலங்களில் பயன்பட்ட இப்பாலம் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னாருக்கு சிறு கப்பல் மூலம் பயணித்து, அங்கிருந்து மீண்டும் கொழும்புவுக்கு செல்லுமாறு ரயில் சேவை அமைக்கப்பட்டது.இதை போட் மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர்.
புயலில் சேதமடைந்த பாலம்: 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது இப்பாலம் சேதமடைந்தது. உடனே 45 நாட்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. 2007-ல் மதுரை முதல் ராமேசுவரம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, பாம்பன் பாலத்தின் குறுகிய தண்டவாளங்கள் நீக்கப்பட்டு அகல ரயில் பாதையாக நமது பொறியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது.
பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா கடந்த 28.01.2014 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இப்படி நூற்றாண்டு பாரம்பரியத்தையும், பல வரலாற்றுச் சுவடுகளையும் கொண்ட பாம்பன் ரயில் பாலத்துக்கு விடைகொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் ரயில் பாலம்: பழைய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலம் 2019 மார்ச் 1-ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.535 கோடி மதிப்பில் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
காலத்தின் தேவைக்கேற்ப புதிய பாம்பன் செங்குத்து ரயில் பாலம் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில், இன்று ராம நவமி நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். பாம்பனில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் 100 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் என்று ரயில்வே பாலம் கட்டுமான நிறுவன ஆலோசகர் கூறியுள்ளார். பாம்பன் பாலத்தில் தற்போது 75 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நடுப்பகுதியில் மட்டும் 50 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். பழைய பாம்பன் பாலத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
Historic Moment!
— Southern Railway (@GMSRailway) April 6, 2025
Hon'ble Prime Minister Shri Narendra Modi flags off the first train on the iconic #NewPambanBridge marking a new era in India's railway infrastructure!@PMOIndia @narendramodi @AshwiniVaishnaw @RailMinIndia #IndianRailways #SouthernRailway pic.twitter.com/621rNFNpEq
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago