கட்சித் தலைமையின் எண்ணமறிந்து, அதற்கேற்ப அதிரடியான கருத்துகளை பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பவர் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார். அண்மையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ‘இரும்பு மனிதர்’ என்று சொன்னதன் மூலம் பாஜக-வினரையும் திகைக்க வைத்த உதயகுமாரிடம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்காக பேசியதிலிருந்து...
மக்களவைத் தேர்தலில், அதிமுக தோல்விக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
தமிழ்நாட்டின் உரிமைகளை பெறுவதற்கு தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்த காரணத்தை முன்னிறுத்தி, அவர்களோடு கூட்டணி இல்லாமல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தோம். ஆனால், கால அவகாசம் குறைவாக இருந்ததால், இதனை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. அதோடு, எங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காததும், பின்னடைவுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
பாஜக-வை விட்டு விலகினால், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நம்மிடம் வரும் என்று பழனிசாமி போட்ட கணக்கு தப்பாகி விட்டதோ?
அவர் போடும் கணக்கு எப்போதுமே தப்பாகாது. உப்பு விற்க போகும்போது, மழை பெய்தால் உப்பு கரைந்து விடும். அந்த சூழலில், மழை மீது தவறா, உப்பு வியாபாரி மீது தவறா என்று விவாதிக்க முடியாது. அதே போல், உமி விற்கும்போது காற்றடித்தால், அதற்கு உமி மீதோ, காற்று மீதோ தவறு என்று கூற முடியாது. மழை பெய்யாமல், காற்றடிக்காமல் இருந்திருந்தால், இந்த வியாபாரத்தில் வெற்றி பெற்று பெரிய சாதனை செய்திருக்கலாம். இதனை காலச்சூழ்நிலை தான் முடிவு செய்கிறது. இந்த வியூகத்தில் சில பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். இது காலம் செய்த கோலமே தவிர வியூகத்தில் தவறு கிடையாது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற குரல் நிர்வாகிகளிடம் இருந்து எழுவதாக செங்கோட்டையன் முன்பு சொல்லி இருந்தார். இப்போதும் அந்தக் குரல்கள் ஒலிக்கின்றனவா?
ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால், ஐந்து பார்வைகள் இருக்கும். அதுபோல, கருத்துகள் பலவாறு இருப்பதும் உண்மைதான். அதை மூடி மறைக்க வேண்டியதில்லை. அவரவர் கருத்துகளை சொல்வதற்கு கட்சியில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிமுக-வின் எதிர்காலத்தை இபிஎஸ் இடம் தொண்டர்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால், பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக இருந்து இபிஎஸ் எங்களை வழி நடத்துகிறார்.
தனக்கு எதிராகச் செயல்பட்ட ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து உள்ளிட்டவர்களை ஜெயலலிதாவே மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். அவரின் மறுவடிவம் என்று நீங்கள் போற்றும் இபிஎஸ், அவரின் வழியில் செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம் தானே?
நீங்கள் சொன்ன பட்டியலில் உள்ள யாரும் தலைமை பதவிக்கு உரிமை கோரவில்லை. கடைக் கோடியில் இருக்கிற தொண்டரையும் நேரில் சந்தித்துப் பேசும் தன்மை கொண்டவராக இபிஎஸ் விளங்குகிறார். அப்படிப்பட்டவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்கிறார் என்றால், அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. இதை எல்லோரும் புரிந்திருக்கிறார்கள்.
எந்தத் தியாகத்துக்கும் தயார் என்று வெளிப்படையாக ஓபிஎஸ் சொன்ன பிறகும் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பது சரிதானா?
தலைமைக் கழகத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட காரணங்களுடன், இதற்கு இபிஎஸ் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டார். இருப்பினும், இபிஎஸ் தலைமையில் அதிமுக-வுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை மட்டும் அவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், அதிமுக-வுக்கு தொடர்ந்து தோல்வி ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் யார்... செயல்பட்டவர்கள் யார்... அதற்கு உறுதுணையாக இருந்தது யார் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். அதோடு, வெற்றி, தோல்வி மட்டுமே ஒரு இயக்கத்தின் வலிமையை வெளிப்படுத்தாது.
கடந்த காலங்களில் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டுள்ளதா?
பொதுவாக, பக்கத்து வீட்டுக்காரர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றும் தவறு இல்லையே. இது மனிதநேயத்தின் அடிப்படைதானே. நம்மைச் சுற்றி இருக்கிற எல்லோரும், நன்றாக இருந்தால் தான், நாம் நன்றாக இருக்க முடியும் என்று நினைப்பது தவறில்லையே. அந்த அர்த்தத்தில் தான் இதனைப் பார்க்க வேண்டும்.
ஓபிஎஸ், டிடிவி ஆகியோரின் பலத்தை உணர்ந்து தான் அவர்களுக்கு பாஜக முக்கியத்துவம் தருகிறதா?
யாருக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க பொதுச்செயலாளருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது. அதனால் அவர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. இந்தச் சூழலில், ஆந்திராவில் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள், கர்நாடகாவில் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்று விவாதிக்க முடியாது.
இபிஸ் சந்தித்துவிட்டு வந்த பிறகு அமித் ஷாவை ‘இரும்பு மனிதர்’ என்று பாராட்டி இருக்கிறீர்களே..?
ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக அதிமுக பாடுபடும் என்பதை இந்த சந்திப்பு நிரூபித்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து பேசும்போது அமித் ஷாஜியை நான் இரும்பு மனிதர் என்று சொல்லி இருக்கிறேன். பாஜக கூட்டணியில் இருக்கும் போது, ராமநாதபுரத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை தொடக்க விழாவில், அமித் ஷாஜி முன்னிலையில், நான் அவரை இரும்பு மனிதர் என்று குறிப்பிட்டேன். அப்போது நீங்கள் அதை பிரசுரிக்கவில்லை. இன்றைக்கு அவரவர்கள் தேவைக்காக இதை பெரிது படுத்துகிறார்கள்.
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா சொல்லியிருக்கிறாரே..?
இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு மற்றும் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் உரிய விளக்கம் அளித்துவிட்டனர். எனவே, அவர்கள் தெரிவித்த கருத்தை விவாதமாக்கக் கூடாது. தமிழ்நாடு ஆபத்தில் இருக்கிறது. அதனை மீட்க வேண்டும்.
நீட், ஜிஎஸ்டி, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாஜக மீது தமிழக மக்களுக்கு கோபம் இருக்கிறதா?
உங்களுக்குத் தெரியாததா, எனக்குத் தெரியப்போகிறது.
சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உரிய வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா?
நான்காண்டு விவாதங்களை எடுத்துப் பார்த்தால் சட்டசபையில் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு எவ்வளவு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பது தெரியவரும். எதிர்கட்சித்தலைவர் உட்பட நாங்கள் எழுப்பும் கேள்விகள், கோரிக்கைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு, ஆளுங்கட்சியினர் அளிக்கும் பதில்கள் மட்டும் தொலைக்காட்சிகளில் வெளியாகிறது.
சட்டப்பேரவையில் முக்கியமான விவாதங்களில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று முதல்வர் சட்டசபையில் பேசும்போது காவலர் கொலை செய்யப்படுகிறார். இதைப் பற்றி பேசினால், எங்களை வெளியேற்றி விடுகின்றனர்.
நான் பதிளிக்கும் போது, பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பதில்லை என்று உதயநிதி வருத்தப்பட்டுச் சொன்னாரே..?
பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் செயல் இது. எங்களை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, எங்கள் மீது குறை சொல்வது சரியானதல்ல.
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பாஜக, பாமக கட்சிகளின் ஆதரவை பெற முடியாதது உங்களுக்குத் தோல்விதானே?
இதில் தோல்வி என்பது கிடையாது. சபாநாயகரின் அணுகுமுறையை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இதில், எல்லா கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை.
கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே..?
தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் ஒப்புதலோடு, 1974-ல், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன்பின் வி.பி.சிங் முதல் மன்மோகன்சிங் வரை பிரதமர்களை நாங்கள்தான் உருவாக்கினோம் என மார்தட்டிய திமுக, அவர்களது அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பிடித்தது. அப்போது கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இப்போதும் நான்கு ஆண்டுகளாக மறந்துபோன கச்சத்தீவு மீட்பு கோரிக்கை, தேர்தலுக்காக தீர்மானமாக மாறியுள்ளது.
இப்படி தீர்மானம் போடுவதால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதால் தான், கச்சத்தீவை மீட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தமிழக வருவாய்துறையும் ஒரு மனுதாரராக உள்ள நிலையில், சிறந்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்தி தீர்வு காணச் செய்ய வேண்டும்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் திமுக கொண்டுவந்த தீர்மானத்தை அதிமுக-வும் ஆதரித்திருக்கிறதே?
தமிழக மக்களின் உரிமைக்கான தீர்மானங்களை அதிமுக ஆதரிக்கும். ஆனால், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, தீர்மானம் மட்டும் போடும் நாடகத்தை திமுக நடத்தக்கூடாது. பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பார்க்காமல், திசைதிருப்பவும், அதன் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் திமுக-வினர் குறியாக உள்ளனர்.
ஓட்டு அரசியலுக்காகத்தான் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்திருக்கிறதா திமுக அரசு?
மூக்கையா தேவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கடந்த வாரம் சட்டசபையில் நான் கோரிக்கை வைத்தேன். எங்களது கோரிக்கையின் அடிப்படையில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு தான்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago