ராமேசுவரம்: பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளதை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயில் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையிலும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். முன்னதாக இலங்கை பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு வந்து பகல் 12.00 மணியளவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை கொடி அசைத்து திறந்து வைத்து பாலத்தை நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து 12.30 மணியளவில் புறப்பட்டு நேராக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்கிறார்.
பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகள் குறித்து ராமநாதசுவாமி கோயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வழக்கம்போல ஏப்ரல் 06 அன்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்படும். காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன்பின் ஆறு கால பூஜைகள் நடைபெறும்.
இன்றைய தினத்தில் பிரதமர் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை திருக்கோயிலுக்குள் தரிசனம் மற்றும் தீர்த்த நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் மற்றும் தீர்த்த நீராட அனுமதிக்கப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு
பிரதமரின் வருகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, ராமேசுவரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும், அதுபோல ராமேசுவரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும், என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், நான்கு ரத வீதிகள், அக்னி தீர்த்தம் கடற்கரை, ஆலய வளாகம், பாம்பன் பாலம், மண்டபம் ஹெலிபேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஒரு கூடுதல் காவல் துறை இயக்குனர் மேற்பார்வையில் 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 14 காவல் கண்காணிப்பாளர்கள், 13 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 உதவி /துணை காவல் கண்காணிப்பாளர்கள் என 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.