''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்'' - ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி சக்தி புகழ்வாணி அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார். மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க அதில் தம்மால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியுமா? என்ற அச்சமும், பதட்டமும் சக்தி புகழ்வாணிக்கு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, அதைத் தொடர்ந்து மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, நேற்று புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

ஒருபுறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும்.

மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது.

அதற்காக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. மாணவர்கொல்லி நீட் தேர்வை திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.

நீட் தேர்வுக்காக ஏற்கெனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்