சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிச.4-ம் தேதியன்று, “சூரியமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். அப்போது அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள அனைவரது கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்,” என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்தது. இந்நிலையில், இந்த தடையை நீக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பி-யுமான ரவீந்திரநாத், பெங்களூரு வா.புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், “அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இதுதொடர்பான விசாரணையை தொடரலாம். ஆனால் இந்த மனுக்களை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முழு திருப்தியடைந்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும்,” எனக் கூறி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலைக் கருத்தில் கொண்டு தனது விசாரணையை விரைவுபடுத்தும் வகையில் காலக்கெடுவை நிர்ணயம் செய்யக் கோரி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago