ரம்ஜான் பண்டிகை: தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்: அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

“எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்” என்று தன் அன்பர்களுக்குக் கூறியவர் அண்ணல் நபிகள் பெருமான்.

பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாகக்கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர். பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமானார். “தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு” என்று உழைப்பை மதித்திடும் உத்தமப் பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.

மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களைப் போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் என்றும் போற்றுகிறார்கள். அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

இபிஎஸ்: இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி, தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

``பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்’’ என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

`தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்’ என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்

வைகோ: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஒன்றே குலம்; ஒருவன் மட்டுமே இறைவன் என அறிவித்து, இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்தினார் அண்ணலார் முகமது நபி (ஸல்). ரமலானின் ஒவ்வொரு நாளிலும் மகத்தான யுத்தங்கள், மாபெரும் வெற்றி நிறைந்த சரித்திரங்கள், பெருமை மிக்க வேதங்கள் பல இறங்கியதும், பெருமானார் (ஸல்) பங்கேற்ற பத்ருப் போர் வரை, ஏராளமான படிப்பினைகளும் உண்டு.

காய்ந்த குடல்கள், காலியான வயிறு, பசியின் அகோரத்தைப் புரிய வைக்கின்ற ரமலான் மாதம் தருகின்ற படிப்பினை, வறியோர்க்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்பதாகும். அதன்படி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை: பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கென்று ஒரு கருத்தியலை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி தான் ஆட்சி செய்ய வேண்டும். இதன்மூலம் சிறுபான்மை மக்களுக்கு மதசுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மதச் சுதந்திரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. மதரீதியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடர்கிறது. சர்வதேச மதச் சுதந்திர சட்டத்தின் கீழ், மத சுதந்திர மீறல்களுக்காக இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிப்பதுடன், இத்தகைய மீறல்களில் ஈடுபடும் தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு தடைவிதிக்கும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீது பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டம் ஆகியவற்றை திணித்து மிகப்பெரிய அச்சுறுத்தலை பாஜகஅரசு கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.

சிறுபான்மையினர் எதிர்கொள்கிற ஆபத்திலிருந்து அவர்களை பாதுகாக்க தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நாடு முழுவதிலுமுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அனைத்து மக்களையும் ஜாதி, மத, பேதமில்லாமல் சமமாக கருதுவது தான் மதச்சார்பின்மை என்பதை ரமலான் செய்தியாக தமிழக காங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது. எனவே, இந்த ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்: வாழ்வில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் இரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் திருநாள் என்பது ஒரு புனிதமான அனுபவம் ஆகும். இஸ்லாம் எத்தகைய நன்னெறிகளை கற்பிக்கிறதோ, அவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் காலம் தான் இரமலான் திருநாள் ஆகும். இஸ்லாம் கற்பிக்கும் நன்னெறிகளில் முதன்மையானது மதுவை விலக்குதல் ஆகும். மது அருந்துவதும், மதுவை உற்பத்தி செய்து விற்பதும் சாத்தானின் செயல்கள் என்று நன்னெறி நூலான திருக்குர் ஆன் கூறுகிறது.

ஈகைத் திருநாளின் நோக்கம் என்பது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான். இஸ்லாம் மார்க்கமும் இதைத் தான் உணர்த்துகிறது. ஆனால், இந்த எண்ணங்களுக்கு மாறாக மது என்ற சாத்தானின் ஆதிக்கம் தான் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. மது அரக்கனை ஒழிக்கும் நாளில் தான் தமிழ்நாடு புனிதம் பெறும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும்; உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.

அன்புமணி ராமதாஸ்: ஈகைத் திருநாள் என்று போற்றப்படும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாம் போதிக்கும் இந்த நற்குணங்கள் அனைத்தும் உலகமெங்கும் நிறைய வேண்டும். உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறிக் கொண்டு இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எம். காதர் மொகிதீன்(இ.யூ.முஸ்லிம் லீக்): ரமலான் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும் உரித்தாகும். இஸ்லாமிய மார்க்கக் கடமையில் ஒன்றான நோன்பு, தனிமனித வாழ்வைச் செம்மைப்படுத்துவதோடு, நோன்பு மாதத்தில் ஏழைகளுக்குப் பங்கிட்டு அளிக்கும் கொடைகள் மூலம் சமுதாயத்தில் ஏழ்மை நீங்கி, அனைவரும் வளமோடு வாழ்வதற்கான வழியையும் திறந்துவிடுகிறது என்பதைப் பார்க்கிறோம்.

முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் திராவிட மாடல் நல்லாட்சியில் அனைத்து சமுதாய மக்களும் நோன்பை மதித்துப் போற்றி வருவதைப் பார்க்கும்போது, எல்லாரையும் மனதால் இணைக்கும் இந்தத் திராவிட மாடல் நல்லாட்சி எங்கணும் பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கக் கடமைப்பட்டவர்களாகி விடுகிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவனும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர், யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் உன்னதக் கொள்கைகளை நிலைநிறுத்தும் ரமலான் நோன்புத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். எல்லாமும் எல்லாரும் பெற்று இனிதாக வாழ்ந்திட வாழ்த்துவோம்.

இவ்வாறு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்