“அவர்களுக்குள் இரண்டாம் இடத்துக்கே போட்டி!” - அதிமுக, தவெக குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே, இப்போது இரண்டாவது இடத்துக்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 29) மாலை சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இஸ்லாமியரை வஞ்சிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, நம்முடைய அரசின் நிலைப்பாட்டை நாம் தெளிவாக அறிவித்திருக்கிறோம்.ஆனால், தீர்மானத்தில் கூட எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று உங்களுக்கு தெரியும்.

இரவோடு இரவாகத் திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றார் ஒருவர், அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். இந்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் அமித்ஷா-வைச் சந்தித்திருக்கிறார், இதுதான் முக்கியம். மறுநாள் இந்தத் தீர்மானத்தை நாம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்தும் சட்டமன்றத்துக்கு வரவில்லை. இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான். இதில் வேடிக்கை என்ன என்றால், இன்றைக்கு கூட மாலையில் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். அடுத்து நாங்கள்தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி .

இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே, இப்போது இரண்டாவது இடத்துக்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் (அதிமுக, தவெக) போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்துக்கு வரப்போகிறோம்; நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு, மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்.

எனவே, இந்தத் தீர்மானத்தை கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்து, அவர் டெல்லிக்குப் பறந்து, இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இருக்கும் ஒரு பொறுப்பில் இருக்கும் அமைச்சரைச் சந்தித்து வருகிறார். எனவே, அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ன செய்வது என்று முழிக்கிறார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் வருகிறதே, ஏற்கெனவே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை மொத்தமாகப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அந்தக் கட்சியுடன் தொடர்பு வேண்டாம் என்று நாம் அறிவித்திருக்கிறோம்.

இருந்தாலும் இன்றைக்கு டெல்லிக்கு சென்று இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதே, இப்போது என்ன செய்வது? இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்று சட்டமன்றத்தில் நடைபெறும் காட்சிகளை எல்லாம் பார்க்கிறோம். ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். வெளியில் செல்கிறார்கள்; யாரிடமோ போனில் பேசிவிட்டு வருகிறார்கள்.

என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்குப் பிறகு, ஒப்புக்கு என்று சொல்வார்களே, அதுபோன்று நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.அப்போது நான் அதற்கெல்லாம் நன்றி சொல்லிப் பேசினேன். அப்போது, இதே அவையில் ஏற்கெனவே இருமொழிக் கொள்கை பிரச்சினை பற்றி பேசியபோது, மும்மொழிக் கொள்கை வேண்டாம். இருமொழிக் கொள்கைதான் தமிழகத்துக்குத் தேவை என்று ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து பேசினோம். அப்போது நான் சொன்னேன், ஒருவர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்.

அந்தச் செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது. யாரைச் சந்திக்க சென்றிருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது. அவ்வாறு செல்கிறபோது, எதுவேண்டுமானாலும் பேசுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் கூட்டணி அமைக்கிறீர்களோ, அமைக்கவில்லையோ, அது உங்கள் சொந்தக் கட்சி பிரச்சினை. அதில் எனக்கு சம்பந்தம் இல்லை.

ஆனால், தமிழக பிரச்சினையாக இருக்கும் இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்திப் பேசிவிட்டு வாருங்கள், நீங்கள் இங்கே ஆதரித்தால் மட்டும் போதாது. அங்கு பேசிவிட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவரும் பேசிவிட்டு, மறுநாள் சென்னை திரும்பியிருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள், இருமொழிக் கொள்கைப் பற்றி பேசிவிட்டீர்களா? இருமொழிக் கொள்கைப் பற்றி அழுத்தமாகப் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார்.

தமிழக மக்களின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொன்னேன். அதேபோல, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்சினை குறித்தும் நீங்கள் பேச வேண்டும். மறுபடியும் டெல்லிக்கு சென்று பேசிவிட்டு வர வேண்டும் என்று சொன்னேன். இந்த நிலையில்தான் இன்றைக்கு எதிர்க்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும், அதை எதிர்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான் திமுக” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்