‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’- டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட இந்த எக்ஸ் தள பதிவு மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கு கட்டியம் கூறி இருக்கிறது.
அமித் ஷா உடனான 45 நிமிட சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, இபிஎஸ். “இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. தேர்தல் நெருங்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாறும்” என்று மட்டும் சொன்னார்.
2021-ல் பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததே தோல்விக்கு காரணம் என்று அதிமுக தரப்பில் குரல் எழுந்தது. இதையடுத்து பாஜக கூட்டணியை உதறிய அதிமுக தலைமை, 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தல் முடிவுகள், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற படிப்பினையை இரண்டு கட்சிகளுக்கும் உணர்த்தியது. இதனால், அதிமுக தயவு தேவை என பாஜக தரப்பிலும், பாஜக தயவு தேவை என அதிமுக தரப்பிலும் மறைமுகமாக பேச ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில், அமித் ஷாவுக்கு கிடைத்த அறிக்கைகள் அனைத்தும் அதிமுக-வை உள்ளடக்கிய வலிமையான கூட்டணியை அமைத்தால் தான் திமுக-வை வீழ்த்த முடியும் என்பதுதான். தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என தேசிய அளவில் ஒரு அணியை திமுக கட்டமைப்பதையும் அமித் ஷா விரும்பவில்லை. இதன் பின்னணியிலேயே அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு நடந்துள்ளது என்கின்றனர் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “2021-ல் டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணி சேர்க்காமல், வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அமித் ஷாவிடம் வாக்குறுதி கொடுத்து தோல்வியை தழுவினார் இபிஎஸ். 2024-ல் அதிமுக கூட்டணிக்கான சமாதானத்தை மறுதலித்து, ‘அதிமுக அல்லாத என்டிஏ கூட்டணி எம்பி-க்கள் மக்களவைக்கு வருவார்கள்’ என்று உறுதி கொடுத்து தோல்வியை தழுவினார் அண்ணாமலை.
இந்த இருவருக்குமான ஈகோ யுத்தத்தால், தமிழகத்தில் திமுக கூட்டணி வீழ்த்த முடியாத சக்தியாக பலம் பெற்று வருவதை உணர்ந்த அமித் ஷா, இந்த இருவரையும் தவிர்த்துவிட்டு மற்றவர்கள் மூலம் கூட்டணிக்கான வேலைகளைத் தொடங்கினார். இதற்கு தடையாக இருந்தால், அண்ணாமலை, இபிஎஸ் ஆகிய இருவரின் தலைமையை மாற்றவும் திட்டங்கள் தயாராகின.
லண்டன் பயணத்திற்கு பிறகு இதை உணர்ந்த அண்ணாமலை, தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு அதிமுக விஷயத்தில் தனது அணுகுமுறையை மாற்றினார். அதேபோல், ‘பாஜக-வுடன் 2026, 2029 தேர்தல்களில் கூட்டணி இல்லை’ என்று முழங்கிய இபிஎஸ், ‘திமுக மட்டுமே எதிரி’ என்று அண்மையில் மாற்றிப் பேசினார். பாஜக-வை கடுமையாக எதிர்த்து வந்த ஜெயக்குமார் மவுனிக்கப்பட்டார்.
அடுத்த கட்டமாக, பாஜக கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோரையும் அழைத்துக் கொண்டு அமித் ஷாவை சந்தித்துப் பேசி, ‘வேறு வழியில்லை’ என்ற நிலையை அவர்களுக்கும் உணர்த்தியுள்ளார் இபிஎஸ். பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் பக்கம் வரும் என்ற இபிஎஸ்ஸின் கனவு பொய்த்துப் போனது. தவெக-வுடன் கூட்டணி என்ற அதிமுக-வின் அடுத்த எதிர்பார்ப்பும் தகர்ந்து போனது.
அதோடு, அதிமுக கூட்டணியில் நாதக கலந்துவிடாமல் இருக்க திமுக தரப்பில் எடுக்கப்பட்ட சில மறைமுக முயற்சிகள் அந்தக் கேட்டையும் அடைத்துவிட்டன. ராஜ்யசபா சீட் விஷயத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்து திமுக கூட்டணிக்கு பயணிக்க தேமுதிக-வும் தயாரானது. இது போன்ற தொடர் பின்னடைவுகளை அடுத்தே மீண்டும் பாஜக-வுடன் கைகோக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் இபிஎஸ்” என்றனர்.
இதனிடையே, அமித் ஷா உடனான இந்த சந்திப்பில் இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி கணக்குகளும் அலசப்பட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அதிமுக-வின் வாக்கு வங்கி 20.46 சதவீதமாக சரிந்துள்ளது. பாஜக-வின் வாக்கு வங்கி தனிப்பட்ட முறையில் 11.22 சதவீதமாகவும், தமிழக என்டிஏ-யின் வாக்கு வங்கி 18 சதவீதமாகவும் உள்ளது.
2026-ல் இந்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றாலும், தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சிதான் என்ற அழுத்தமும் அமித் ஷா மூலம் அதிமுக-வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இதற்கெல்லாம் தலையாட்டி இருக்கும் அதிமுக தலைமை, அண்ணாமலைக்கு மாற்றாக தமிழகத்தில் பொறுப்புக்குழுவை அமைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும், ஓபிஎஸ், டிடிவி விவகாரங்களில் தங்களை நிர்பந்திக்கக் கூடாது, திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என தங்கள் தரப்பிலிருந்தும் கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இரு தரப்பிலும் இணக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஜுலைக்கு பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவும், இரு கட்சிகளும் இணைந்து ஆளும் திமுக-வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி தேர்தல் களத்திற்கு தொண்டர்களை தயார்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலையும் கோட்டைவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதால் மீண்டும் பாஜக-வுடன் கைகோக்க துணிந்திருக்கிறார் இபிஎஸ். ஆனால், அமித் ஷா என்ன கணக்கு வைத்திருக்கிறாரோ யாருக்குத் தெரியும்?
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago