தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானம் குறித்து பேசும்போது திமுக – பாஜக உறுப்பினர்களிடையே கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொண்டு வந்த அரசு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர். ஆனால், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனம் மட்டும் எதிராகப் பேசினார். உறுப்பினர்களின் விவாதம் வருமாறு:
பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: இஸ்லாமிய சமூகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களும், பெண்களும் முன்னேற வேண்டும் என்பதற்காகவே வக்பு வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: மதத்தின் அடையாளமாகக் கருதப்படும் வாரியத்தில் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களை புகுத்துவது எந்தவகையில் நியாயம்? இஸ்லாமியர்களின் சொத்துகளைப் பாதுகாக்க கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் நீர்த்துப் போகும் வகையில் தற்போது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வானதி சீனிவாசன்: வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலிருந்து புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அக்குழு பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்புதான் அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
அமைச்சர் ரகுபதி: நாடு முழுவதும் பெயரளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு ஆட்சேபனைகளை ஏற்காமல், ஆதரவாளர்கள் அளித்த பரிந்துரைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.
வானதி சீனிவாசன்: ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததைப்போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
அமைச்சர் ரகுபதி: நாடாளுமன்றத்தில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு எந்தவித விவாதமுமின்றி நீங்களே தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளீர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கூட்டுக்குழு கூட்டத்தில் திமுக எம்.பி. அப்துல்லாவை பேச அனுமதிக்கவில்லை. ஆனால், இங்கு நீங்கள் பேச பேரவைத் தலைவர் கூடுதல் நேரம் தந்தார். இந்தப் பேரவையில் உங்களைப் பேச அனுமதிக்கிறோம்.
வானதி சீனிவாசன்: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரும் போது அதன் செயலாக்கம் பற்றி யோசிக்க வேண்டும். மாநில அரசைப் போலவே மத்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது.
பேரவைத் தலைவர் அப்பாவு: இந்தப் பேரவையில் கொண்டு வரப்பட்ட இருமொழிக் கொள்கை தொடர்பான தீர்மானத்தைத்தான் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது.
வானதி சீனிவாசன்: மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்கிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
வெளிநடப்பு செய்தபிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வக்பு திருத்த சட்டத்தின்படி முஸ்லீம் சமூகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை சமூக நீதி பேசும் திமுக அரசு மறந்துவிட்டது. அதேபோல் பெண்களுக்கான ஒதுக்கீட்டையும் பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்போது, தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு மாநகராட்சியோ, ஊராட்சியோ எதிராக தீர்மானம் போட்டால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. தமிழக சட்டப்பேரவையின் மாண்பை திமுகவின் அரசியலுக்காக குறைத்துவிடக்கூடாது.
மத்திய அரசுத் திட்டங்களில் சிறுபான்மை, பெரும்பான்மையைப் பிரித்து பார்ப்பதில்லை. திமுகவினர் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago