மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் 

By செய்திப்பிரிவு

சென்னை: “சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது” என்று சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிரான தனித்தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசியதாவது: “வேற்றுமையில் ஒற்றுமைகண்டு நாட்டுமக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டின் மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய நாட்டை ஆளும் அரசும், இத்தகைய உணர்வு கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும்.

ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசானது தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாக செய்து வருகிறது. எதை செய்தாலும், குறிப்பிட்டத் தரப்பை வஞ்சிக்கும் வகையில்தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது.

இந்தியைத் திணித்து, இந்திப் பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது.

நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கையானது அடித்தட்டு மக்களை பாதிப்பதாக அமைந்ததை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் கொண்டு வரப்படும், வக்பு வாரிய சட்டத் திருத்தமானது சிறுபான்மையின இஸ்லாமிய மக்களை வஞ்சிப்பதாக அமைந்ததை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய மத்திய பாஜக கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரவினை கடந்த 8.8.2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும், மத்திய அரசின் சட்டத்திருத்தங்கள் இருந்ததால், அதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.

எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்த சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் ஏற்படும். வக்பு சட்டத்தை மத்திய அரசு திருத்த நினைக்கிறது. இதன்மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரிய கட்டமைப்புகள் மாற்றப்பட்டு அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது.

இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும். வக்பு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம், நில அளவையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வக்பு நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வக்பு வாரியத்திடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து இந்த சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாக கருதப்படாது என்று இந்த சட்டம் கூறுகிறது.

இது அரசுக்கு சொத்துகளை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு குறையாமல் இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு நபர் மட்டும் வக்பு அறிவிக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்பு சொத்துகளை செல்லாதவை என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. இஸ்லாமிய மக்களின் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை, சேர்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது.

இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும். வக்பு சொத்துக்களை பதிவு செய்யும் முன்பு மாவட்ட ஆட்சியர் சரிபார்க்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இது அரசு இந்த சொத்துக்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதாக முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது. வக்பு வாரிய சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவதாகும். வக்பு பயனர் என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது.

இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துக்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள், இனி வக்பு என கருதப்படமாட்டாது. இத்தகைய பிரிவுகள் முஸ்லிம் சமூகங்களின் எதிர்ப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை அதிகரிப்பதாக, மத்திய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.

இது சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளைப் பாதிப்பதாகவும் இருக்கிறது. இதனை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் 30.9.2024 அன்று தமிழக அரசு தெளிவாக கூறியிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருக்கக் கூடிய திமுக உறுப்பினர்களான ஆ.ராசா, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கடுமையாக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். திமுக மட்டுமின்றி இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திருத்தங்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு நிராகரித்திருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்நிலையில், வக்பு திருத்த சட்டமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இந்த சட்டத்துக்கு எதிராக நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரமென்று நான் கருதுகிறேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிரான மதசுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் இருக்கின்றன.

இந்த திருத்த சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்படவிடாமல் முடக்கிவிடும். எனவே, நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மதநல்லிணக்கம், அனைவருக்குமான அரசியல் என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தீர்மானம்: இந்திய திருநாட்டில் மதநல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு, அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்புகளுக்கு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்துகிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்