புதுடெல்லி: “டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த போது கூட்டணி பற்றி பேசவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றியே பேசினோம்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் இன்று (மார்ச் 26) காலையில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக நேற்று, அமித் ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், “2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” என்று பதிவிட்டிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே பேசப்பட்டது. ஆனால் அவற்றைப் புறந்தள்ளும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அமைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம். அதில் பிரதானமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எஸ்எஸ்ஏ திட்டத்தில் தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரினோம்.
அதேபோல், தமிழகம் இருமொழிக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதை தொடர்ந்து கடைபிடிக்க தடை இருக்கக் கூடாது என்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை தமிழகத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறை மாநிலமாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு தொடர்ந்து நீர் கிடைக்கும் விதமாக கோதாவரி காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதேபோல், ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியை விடுவித்து அத்திட்டம் முழுமை பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசு தடையாக உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணையை வலுப்படுத்த, நீர்த்தேக்க அளவை உயர்த்த கேரள அரசு உடன்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோம். தமிழக ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரினோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக டாஸ்மாக் முறைகேடு பற்றி எடுத்துரைத்தோம். அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம். தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்று கூறினோம்.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அவர், “எங்கள் சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது. அதில், முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேசினோம். ஒவ்வொரு பிரச்சினையையும் விரிவாக எடுத்துரைத்தோம்.
கூட்டணி பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி எல்லாம் தேர்தல் நெருக்கத்தில் பேசப்படும் விவகாரம். நாங்கள் இப்போது சென்று மக்கள் பிரச்சினைகளைப் பேச. நீங்களாகவே பத்திரிகை பரபரப்புக்காக கூட்டணி அமைந்தது என்றெல்லாம் சொல்கிறீர்கள். கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. எங்கள் கொள்கை எப்போதும் மாறாது. கூட்டணி என்பது சந்தர்ப்ப, சூழ்நிலைகள் பொருத்து அமையும்” என்று கூறிச் சென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago