மக்கள் பிரதிநிதிகளை மக்கள் எளிதில் சந்தித்து தங்களது குறைகளைச் சொல்லத்தான் அனைத்துத் தொகுதிகளிலும் எம்எல்ஏ அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால், எம்எல்ஏ அலுவலகத்துக்குச் சென்றால் அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காது; அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிடும் என யாரோ கிளப்பிவிட்ட சென்டிமென்ட் புரளியை நம்பி சுமார் 4 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் எண்ணெய் காப்பு மண்டபம் அருகே எம்எல்ஏ அலுவலகம் 2001 பிப்ரவரி 22-ல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வாக இருந்தவர் அதிமுக-வைச் சேர்ந்த தாமரைக்கனி.
அதிமுக சார்பில் 4 முறையும், சுயேச்சையாக ஒரு முறையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வென்றவர் தாமரைக்கனி. புதிதாக திறக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்துக்குள் முதல் ஆளாக அடியெடுத்து வைத்த தாமரைக்கனிக்கு, 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை. மாறாக அவரது மகன் இன்பத்தமிழனுக்கு வாய்ப்பளித்து அவரை அமைச்சராகவும் ஆக்கினார். மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட தாமரைக்கனி மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.
அமைச்சராக எம்எல்ஏ அலுவலகத்தில் கால்பதித்த இன்பத்தமிழனுக்கு 2006 தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இதேபோல், இந்த அலுவலகத்தை பயன்படுத்திய எம்எல்ஏ-க்கள் ராமசாமி (சிபிஐ), பொன்னுபாண்டியன் (சிபிஐ), சந்திரபிரபா (அதிமுக) ஆகியோருக்கும் அடுத்து வந்த தேர்தல்களில் சீட் கிடைக்கவில்லை.
» சிறந்த பட்டு விவசாயிகள், நூற்பாளர்களுக்கு பரிசு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
» ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ அலுவலகத்துக்குள் யார் அடியெடுத்து வைத்தாலும் அவர்களுக்கு, அடுத்த தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காமல் அரசியல் அடையாளத்தை தொலைத்துவிடுவார்கள் என்ற சென்டிமென்டை பரப்பிவிட்டார்கள்.
இதனால், இப்போது இங்கு எம்எல்ஏ-வாக இருக்கும் அதிமுக-வைச் சேர்ந்த மான்ராஜ், எம்எல்ஏ அலுவலகம் பக்கம் போகவே யோசித்துக் கொண்டு தனது சொந்த அலுவலகத்தில் அமர்ந்து மக்களைச் சந்தித்து வருவதாகச் சொல்கிறார்கள். தமிழகம் முழுவதும் எம்எல்ஏ அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் அமைக்கும் திட்டத்தை 2022-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதற்காக, பேரவைச் செயலகத் துறை சார்பாக 234 எம்எல்ஏ அலுவலகங்களுக்கும் கணினிகள், மேஜைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இதுவரை இ-சேவை மையம் தொடங்கப்படவில்லை.
சென்டிமென்ட் காரணமாகத்தான் எம்எல்ஏ அலுவலகத்துப் பக்கம் போகாமல் இருக்கிறீர்களா என மான்ராஜிடம் கேட்டதற்கு, “எம்எல்ஏ அலுவலகத்தை எந்த எம்எல்ஏ-வும் முழுமையாகப் பயன்படுத்துவது இல்லை. எனது தொகுதியின் எம்எல்ஏ அலுவலகம் ஊருக்கு வெளியே இருப்பதால் மக்கள் அங்கு வந்து போவது சிரமமாக இருக்கிறது.
அதனால் மாவட்ட நீதிமன்றம் எதிரே பொதுப்பணித்துறை இடத்தில் புதிதாக எம்எல்ஏ அலுவலகம் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளேன். தற்போது எனது சொந்த அலுவலகத்தில் தினசரி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன்.
மற்றபடி, எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்றால் அடுத்த தேர்தலில் சீட் கிடைக்காது என்று சொல்லப்படுவது குறித்து எனக்கெதுவும் தெரியாதுங்க” என்றார். எம்எல்ஏ அலுவலகத்துப் பக்கம் போகாட்டியும் பரவாயில்ல... தொகுதி பக்கம் போகாம இருந்துடாதீங்க எம்எல்ஏ சார்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago