சென்னை: தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழி கொள்கையை கடைப்பிடிக்கிறோம் என பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "உலகத்திலேயே இதுவரை ஒரு மொழிக்காக போராட்டங்களை நடத்தி உயிர்களை தியாகம் செய்த இனம் நமது தமிழ் இனம். இருமொழி கொள்கையின் சிறப்பை மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளார். தமிழ் மொழிக்கு அதிமுக மிகப்பெரிய தொண்டை ஆற்றியுள்ளது.
இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. அதேநேரம் கல்விக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசின் வழிகாட்டுதல், நிபந்தனையில் மாநில அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதேபோல, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நா.எழிலன் (திமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), ஆளுர் ஷாநவாஸ் (விசிக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட்), கு.சின்னப்பா (மதிமுக), அப்துல் சமது (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோரும் இருமொழி கொள்கையை ஆதரித்து பேசினர்.
» 2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
எதிர்கட்சித் தலைவர்... தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கு இருமொழிக்கொள்கை குறித்து பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன. எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியை எதிர்க்கட்சி துணைத் தலைவர் தந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் டெல்லிக்கு சென்றிருப்பதாகவும், அங்கு யாரை சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இதுகுறித்து அவர் அங்கே வலியுறுத்த வேண்டும்.
தமிழும் ஆங்கிலமும்தான் தமிழகத்தின் இருமொழிக்கொள்கை. அதை விட்டுத்தர மாட்டோம். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம். இது பணப்பிரச்சினை அல்ல. நம் இனப்பிரச்சினை.
நம் தமிழை, தமிழினத்தை, தமிழக மாணவர்களை, இளைய சமுதாயத்தை காக்கும் பிரச்சினை. இந்த ஆட்சியில், சமூகநீதியும் தமிழ்மொழி காப்பும் இரு கண்கள். உலகளாவிய பரப்பில் நமது தமிழ் மக்கள் வாழவும், ஆளுமை செலுத்தவும், உயர்த்தவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழிவகுத்த கொள்கை இந்த இருமொழி கொள்கைதான்.
எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம். இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள் நாம். யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை. இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம்.
பண்பாட்டு அழிப்பாக அமையும்: இந்தி மொழி திணிப்பு என்பது, ஒரு மொழி திணிப்பு மட்டுமல்ல. பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால்தான் இதில் உறுதியாக இருக்கிறோம். இந்த மொழி திணிப்பின் மூலம் மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தன்மையைக் காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அப்போதுதான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago