சென்னை: “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பாஜக இதை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அதையும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று சென்னையில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியது: “மறைந்த முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும் , ‘இஸ்லாமியர்கள் வேறு; தான் வேறு’ என்று எப்போதும் நினைத்ததில்லை. ‘எனக்கு நன்றி சொல்லி உங்களிடமிருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’ என்றுதான் அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவரின் வழித்தடத்தில்தான், நம்முடைய இன்றைய திராவிட மாடல் ஆட்சியும் செயல்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை கடந்த 4 ஆண்டு ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அண்மையில்கூட, தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறோம். இஸ்லாமிய மக்களுக்கான நம்முடைய திராவிட மாடல் அரசு முத்தாய்ப்பான பல திட்டங்களை செய்திருக்கிறது. இப்படி இஸ்லாமிய பெருமக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலை மேம்படுத்தும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்களைக் காக்கும் காவல் அரணாக இருப்பது திமுக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும், நம்முடைய தமிழகத்தில் மத ரீதியான வன்முறைகள் ஏற்படாமல், காத்து வரும் அரசாக நம்முடைய திமுக அரசு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், இந்த குடியுரிமை திருச்சத் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த கட்சிதான் அதிமுக. குடியுரிமைத் திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால், திமுக-வும் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.
ஆனால், அன்றைக்கு முதல்வராக இருந்த பழனிசாமி என்ன கேட்டார்? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு முஸ்லீம் கூட பாதிக்கப்பட மாட்டார், யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார். இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இப்போது அவர், எந்தக் கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர் விழாவில் கலந்துக்கொள்கிறார். ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு அந்த குற்றவுணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இஃப்தார் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், இது தனிமனித உரிமையை பறிப்பது என்று மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது திமுகதான். இப்போது கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பாஜக இதை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அதையும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது திமுக-வும் அதன் கூட்டணிக்கட்சிகளும்.
ஒருவேளை அது சட்டமானால், அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக போராடுவோம். உங்களுக்குத் துணையாக எப்போதும் இருப்போம். இப்படி இஸ்லாமியர் உரிமையை காப்பாற்றுகின்றவர்களாக செயல்படுபவர்கள் நாங்கள். இஸ்லாமியர் உரிமைக்கு போராடுகின்றவர்கள், வாதாடுகின்றவர்கள்தான் இப்படியான விழாக்களில் கலந்துக்கொள்ள தகுதி படைத்தவர்கள்.
அந்த தகுதியோடு உள்ளார்ந்த அன்போடு சகோதர உணர்வோடு நாங்கள் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம், பங்கெடுக்கிறோம். சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை அரசின் மூலமாக தொடர்ந்து நிறைவேற்றுவோம். அதே நேரத்தில், இஸ்லாமியரின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி அவர்களுக்கு காவல் அரணாக விளங்கும் இயக்கமாக திமுக எந்நாளும் இருக்கும். இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துகளை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago