தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக-வினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், புதுச்சேரியில் புதிதாக மதுபான ஆலைகளுக்கு அனுமதியளித்ததில் மெகா ஊழல் நடந்திருப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கர்ஜித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த போதே, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்எல்ஏ-க்களும் பாஜக ஆதரவு சுயேச்சைகளும் இதை எதிர்த்தன. புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதியளித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என துணை நிலை ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தது காங்கிரஸ்.
இத்தனை பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில் திடீரென அனைத்துக் கட்சிகளும் கப்சிப் ஆகின. கடந்த 13-ம் தேதி பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “6 புதிய மதுபான பாட்டிலிங் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதியளித்திருப்பதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி வரைக்கும் வருமானம் கிடைக்கும்.
5 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்” என்றார். இதைக் கேட்டுக்கொண்டு பேரவையில் அத்தனை எம்எல்ஏ-க்களும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். இந்த நிலையில், புதிய மதுபான ஆலைகளுக்கு ரூ.15 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், “புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதியளித்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் ஒரு சிலருக்கு சாதகமாக விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். இந்த ஆலைகளை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவில்லை.
புதுச்சேரியில் ஏற்கெனவே கடல் நீர் உட்புகுந்து விட்டது. இந்த நிலையில், புதிய மதுபான ஆலைகளால் பெருமளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். ஆலைகளின் கழிவு நீரால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை அமைக்க அனுமதிப்பதில்லை என்ற அரசின் முந்தைய உத்தரவை அப்பட்டமாக மீறி இருக்கிறார்கள்.
ஆக, மதுபான ஆலை அதிபர்களிடம் கையூட்டு பெறுவதற்காகவே முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர்களும் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். ஒரு ஆலைக்கு ரூ.10 கோடி வரைக்கும் கைமாறி இருப்பதாக பாஜக எம்எல்ஏ-வான கல்யாணசுந்தரமே சொல்லி இருக்கிறார். அதனால் தான் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தோம். ஆனால், இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
புதிய மதுபான ஆலைகளால் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்கிறார் முதல்வர். ஆனால், ஏற்கெனவே புதுச்சேரியில் உள்ள 8 மதுபான ஆலைகளிலும் அதிகபட்சமே 40 சதவீத அளவுக்குத்தான் உற்பத்தி நடக்கிறது. இந்த நிலையில், புதிதாக எதற்காக 6 ஆலைகளை தொடங்க வேண்டும்? ஒரு ஆலைக்கு 100 பேருக்கு வேலை கொடுத்தால்கூட மொத்தமே 600 பேருக்குத்தான் வேலைவாய்ப்புக் கிடைக்கும். ஆனால், 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் முதல்வர்.
உண்மையாகவே அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டுமானால் மதுக்கடைகள், மதுபான ஆலைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் அத்தனை எளிதில் விடப்போவதில்லை. நீதிமன்றம் வரைக்கும் சென்றாவது புதிய மதுபான ஆலைகள் வருவதை தடுத்தே தீருவோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago