சென்னை: “9-வது நிதிக் குழுவில், தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பகிர்வு விகிதம் 7 சதவீதம் என்றால், தற்போது 15-வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைவாக வந்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு வரவேண்டிய 2.63 லட்சம் கோடி ரூபாய் இதுவரை கிடைக்காததால் தமிழகத்துக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு வந்திருக்கிறது. மாநில அரசு வாங்கும் கடனில் 32 சதவீதம் இந்த தொகை மட்டும் வருகிறது” என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.”
இது குறித்து அவர் மேலும், “மத்திய அரசின் நிதி பகிர்வைப் பொறுத்தமட்டில், அடுத்தடுத்து வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நிதிக்குழுவிலும் தொடர்ந்து தமிழகத்துக்கான பங்கினை குறைத்துக் கொண்டு வந்துள்ளனர். 9-வது நிதிக்குழுவில், தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பகிர்வு விகிதம் 7 சதவீதம் என்றால், தற்போது 15-வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைவாக வந்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு வரவேண்டிய 2.63 லட்சம் கோடி ரூபாய் இதுவரை கிடைக்காததால் தமிழகத்துக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு வந்திருக்கிறது.
மாநில அரசு வாங்கும் கடனில் 32 சதவீதம் இந்த தொகை மட்டும் வருகிறது. நிதிக்குழுவின் நிதி பகிர்வில் தமிழகத்துக்கு இந்த தொகை கிடைத்திருந்தால், கடன் அதிகமாக வாங்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. நாட்டின் மக்கள் தொகையில் 6.1 சதவீதம் உள்ள தமிழகத்துக்கு 4.079 சதவீதம் கொடுக்கப்படுகிறது. இந்திய அளவில் மூன்றாவது குறைவான நிதி பெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. தமிழக அரசு அளித்திருக்கும் நிதி நிலை அறிக்கைக்கும், மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிதி நிலை அறிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை இந்தியாவின் ஒருசில மாநிலங்களுக்கு மட்டுமான நிதி நிலை அறிக்கையாக அமைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களுக்கு மட்டுமான நிதி நிலை அறிக்கையாக மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையாக அமைந்திருக்கிறது. ஆனால், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, தமிழகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் நன்மை செய்யும் நோக்கில் அமைந்திருக்கும் நிதி நிலை அறிக்கை. அதுமட்டுமல்ல, அனைத்துப் பகுதிகளையும் சமமாக பாவித்து, தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் தேவையான உரிய வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க முதல்வர் வழிகாட்டியாக இருந்தார்.
அதன் காரணமாகவே தமிழக நிதி நிலை அறிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனர். அதேபோல், நம் உயிரினும் மேலான தமிழ் மொழியைவிட, வடமொழிக்கும், இந்தி ஆகிய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் மத்திய அரசு ஒருபுறம் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பழங்குடி மக்கள் பேசக்கூடிய பழங்குடி மொழிக்கும் உரிய கவனம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு பரிணமித்திருக்கிறது. இதை தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் கவனித்துப் பார்க்க முடியும்.
மத்திய அரசு கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கியிருக்கும் நிதி 19,068 கோடி ரூபாய் மட்டும்தான். ஆனால், உத்தரப் பிரதேசத்துக்கு 2025-26 இந்த ஓராண்டுக்கு மட்டும் மத்திய அரசு ஒதுக்க உத்தேசித்துள்ள தொகை, அதே 19,858 கோடி ரூபாய். அதாவது தமிழகத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு கொடுக்கும் தொகையை ஓரே ஆண்டில் உ.பிக்கு மத்திய அரசு வழங்குகிறது. இதை வைத்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கும், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கைக்குமான வேறுபாட்டை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
இப்படி நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்தாலும்கூட, இந்தியாவிலேயே மிக அதிக மதிப்பீட்டிலான சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவியின்றி, தன்னுடைய சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு தமிழ்நாடு செய்லபடுத்த ஆரம்பித்தது. முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்திய பின்னர்தான், தமிழகத்துக்கான மத்திய அரசின் பங்கினை வழங்கியது.
அதுமட்டுமின்றி, எதிர்கால தலைமுறைகளின் வளர்ச்சிக்காக, மித அதிவேக ரயில் (Semi HighSpeed) ரயில்வே அமைப்பான மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு Regional Rapid Transport System மற்றும் உயர் போக்குவரத்து அமைப்பை உருவாக்கி, ரயில்வே வளர்ச்சிக் குறித்து சிந்தித்து செயலாற்றி தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை நடப்பு ஆண்டுக்கான வரவு செலவு குறித்த புள்ளி விவரங்களைக் கொண்டதாக அமையவில்லை. எதிர்கால தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்கான வலுவான அடித்தளம் அமைத்திடும் உயரிய நோக்கங்களை உள்ளடக்கியது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago