“நான் பெண்ணாக இருப்பதால் அதிகாரிகள் எனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறீர்களா?” பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு இப்படிப் பொங்கி இருக்கிறார் கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் சுந்தரி ராஜா. 2021-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள்.
இதில் 31 வார்டுகளை தன் வசம் வைத்திருக்கிறது திமுக. 5 வார்டுகளை திமுக கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ளன. 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது விசுவாசியான சுந்தரி ராஜாவை மேயர் வேட்பாளராக நிறுத்தினார்.
இவரை எதிர்த்து கடலூர் திமுக எம்எல்ஏ-வான கோ.ஐயப்பனின் விசுவாசியான கீதா குணசேகரனும் திமுக போட்டி வேட்பாளராக கோதாவில் குதித்தார். முடிவில், சுந்தரி ராஜாவே மேயரானார். மேயர் தேர்தல் முடிந்த பிறகும் திமுக கோஷ்டி பூசல் அடங்கவில்லை. ஐயப்பன் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் மேயர் சுந்தரி ராஜாவுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர்.
அவர்களை சமாளிக்க முடியாமல் மேயர் திணறினார். இதையடுத்து இருதரப்பையும் அழைத்துப் பேசி மத்தியஸ்தம் செய்து அனுப்பி வைத்தது திமுக தலைமை. அதன் பிறகு உட்கட்சி புகைச்சல் கொஞ்சம் அடங்கிய நிலையில், மேயருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் முட்டிக் கொண்டது.
» அதிரடிக்கு வரிந்துகட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - IPL 2025
» அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்து
இந்த நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டவர்கள் வந்திருந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் யாரும் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
இதனால் கடுப்பான மேயர் சுந்தரி ராஜா, “மாநகராட்சி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடப்பதாக அதிகாரிகள் சொன்னதால் தான் நான் இங்கு வந்தேன். என்னை வரச் சொல்லிவிட்டு அதிகாரிகள் யாரும் வரவில்லையா?” என்று அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் சூடாக கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் வரவில்லை என்றபோதும், “பணிகளை தொடங்க எவ்வித தடங்கலும் வரக்கூடாது என்பதற்காக நானே அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அடிக்கல்லை நாட்டினார் மேயர். எல்லாம் முடிந்த பிறகு மாநகராட்சி உதவி பொறியாளர் பாரதி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.
அவர்களை பார்த்ததும் ஒட்டுமொத்தக் கோபத்தையும் கொட்டிய மேயர், “மாநகராட்சி சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை தெரிவிக்கிறீர்கள். நீங்கள் சொன்ன நேரத்துக்கு நான் ஸ்பாட்டுக்கு வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. பெண் மேயர் என்பதால் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறீர்களா?” எனக் கொந்தளித்தார்.
“இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்” என உதவி பொறியாளர் பாரதி அப்போதைக்கு சமாளித்தாலும், அதிகாரிகளுக்கு எதிராக மேயர் சுந்தரி ராஜா கோபப்பட்ட விவகாரம் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் இன்னமும் பேசுபொருளாக இருக்கிறது.
இது குறித்து மேயர் சுந்தரி ராஜாவிடம் பேசினோம். அதிகாரிகள் மீதான ஆதங்கம் குறையாமல் பேசிய அவர், “மாநகராட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் எந்த நேரத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்களோ அந்த நேரத்துக்கு நான் தவறாமல் அந்த இடத்துக்குச் சென்று விடுகிறேன். ஆனால், அதிகாரிகள் அந்த நேரத்துக்கு அங்கு வருவதில்லை. தாமதமாகத்தான் வருகிறார்கள்.
ஒன்றல்ல... ரெண்டல்ல இதுவரைக்கும் 5 நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் இப்படி நடந்திருக்கிறார்கள். மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். ஆனால், அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுப்பது வேதனையாக இருக்கிறது” என்றார்.
மேயர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குச் செல்லாமல் இருப்பது ஏன் என்று மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனுவிடம் கேட்டதற்கு, “ சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல அப்படி நடந்துவிட்டது. இனிமேல் இது சரிசெய்யப்படும்” என்றார். அதிகாரிகள் மீதான மேயரின் வருத்தம் குறித்து கடலூர் எம்எல்ஏ-வான கோ.ஐயப்பனிடம் கேட்டதற்கு, “இதுபற்றி நான் ஒன்றும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார்.
“மேயர் நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் போறது இருக்கட்டும்... மாநகராட்சியில் மேலாளர், செயற்பொறியாளர், நகர்நல அலுவலர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் காலியாவே இருக்கு. அதைக் கொஞ்சம் நிரப்பச் சொல்லுங்க சார்” என்கிறார்கள் கடலூர் மாநகராட்சி மக்கள்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago