வேல்முருகன் செயல்பாட்டுக்கு முதல்வர் வேதனை; மாண்பைக் கடைபிடிக்க அப்பாவு அறிவுறுத்தல்: சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகனின் நேற்றைய செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பேரவை மாண்பை கடைபிடிக்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, தமிழக அரசின் மொழிக்கொள்கை மற்றும் கல்விக்கொள்கை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அதிமுக ஆட்சியில் ஒரு துறைசார்ந்த ஆள் தேர்வு நடத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அதற்குப் பதில் அளித்து பேசிய அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், "வேல்முருகன் பொத்தாம்பொதுவாக பேசுகிறார். அவர் அவையில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அதனால் அவரது கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றார். அப்போது பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவையை நடத்தினார்.

இதற்கு பதில் அளிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இருக்கையில் இருந்தவாறு வேல்முருகன் முறையிட்டார். ஆனால், ‘’விவாதம் நீள்கிறது, இன்னும் நிறையபேர் பேச வேண்டும்’’ எனக்கூறி, மயிலாடுதுறை திமுக எம்எல்ஏ நிவேதா முருகனை பேச அழைத்தார். உடனே இருக்கையில் இருந்து எழுந்த வேல்முருகன், தனக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கி சென்று கூச்சலிட்டார். அந்த சமயத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கைக்கு வந்து அமர்ந்தார்.

வேல்முருகனை இருக்கையில் அமருமாறு அறிவுறுத்திய அப்பாவு, அதிமுக ஆட்சி குறித்த வேல்முருகனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் கருத்துக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்குமாறு வேல்முருகன் கூச்சலிட்டார். அப்போது "உங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியுமா" என அமைச்சர் சேகர்பாபு கூற, அவர் முன்பு சென்று வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சேகர்பாபுவுக்கு ஆதரவாக மற்ற அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வேல்முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகபிரசங்கித்தனமான பேச்சு: அப்போது, அனைவரும் அமைதி காக்கும்படி கோரிய பேரவைத் தலைவர் அப்பாவு, வேல்முருகனை இருக்கையில் அமரச் சொன்னார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் எழுந்து, "பேரவைத் தலைவர் இருக்கை அருகில் வந்து மிரட்டும் தொணியில் பேசி, அவையை மீறிய செயலில் ஈடுபட்டது வேதனை அளிக்கிறது. அவை விதியை மீறி அதிகபிரசங்கித்தனமாகப் பேசுகிறார். அவையில் வேல்முருகன் கோபமாகப் பேசினாலும், அதில் குணம் இருக்கும் என்பதால் அவரது பேச்சை அமர்ந்து கேட்பேன். அவையில் கைநீட்டி கூச்சலிடுவது முறையற்ற செயல். அதை அவர் திருத்திக்கொள்ள வேண்டும். அவர் மீது பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு, "முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று எப்போதும் கூறியதில்லை. அமைச்சர்களிடம் கை நீட்டி பேசியது நாகரீகமற்ற செயல். கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்று நடந்ததில்லை. இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து சபை மாண்பை குலைக்கும் வகையில் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இனிமேல் இதுபோன்று யார் நடந்துகொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

வேல்முருகன் விளக்கம்: பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பின்பற்றப்படவில்லை. எஸ்.ஐ தேர்வுகளில் ஒருவரைக்கூட மேற்கூறிய இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யவில்லை. தமிழ் மொழியை தமிழகத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, பயிற்று மொழியாக கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தான் குறிப்பிட்டேன்.

ஆனால், நான் என்ன பேச வருகிறேன் என்பதையே புரிந்து கொள்ளாமல், அதிமுகவினரும், அதிமுகவில் இருந்து திமுக அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவும் கூச்சலிட்டனர். மக்களவையில் பேச வாய்ப்பளிக்குமாறு இருக்கையில் இருந்து எழுந்து சென்று, அவைத் தலைவரிடம் முறையிடுவது போன்றுதான் இங்கும் செய்தேன். முதல்வரும் எனது செயலை தவறாகப் புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது.

அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் செய்யத் தவறியதை நான் சுட்டிக்காட்டி செய்ய வைத்தேன். அதை பேரவையில் நேற்று பேசினேன். அதை இரு கட்சிகளாலும் ஏற்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்