“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பதற்காக ஐசிடி (இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) என்ற பாடத்திட்டத்தை அமல்படுத்தி, கம்பியூட்டர் லேப் அமைக்கவும், பயிற்றுநர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கி வருகிறது.
அதன்படி தமிழகத்துக்கு 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் ரூ.434 கோடியை ஆண்டு தோறும் ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகையில் 14,663 பள்ளிகளில் ரூ.15 ஆயிரம் மதிப்பூதியத்தில் கணினி அறிவியல் முடித்த கம்பியூட்டர் பயிற்றுநர்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக பள்ளிக் கல்வித்துறை அதைச் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
கருணாநிதி முதல்வராக இருந்த போது 2010-ல் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியலை தனிப்பாடமாக கொண்டு வந்தார். இதை நம்பி, கணினி அறிவியல் படித்த பட்டதாரி இளைஞர்கள் 60 ஆயிரம் பேர், பி.எட் படித்தனர். ஆனால், அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தால் கணினி அறிவியல் தனிப்பாடம் பள்ளிகளில் இடம் பெறவில்லை. இதனால் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பி.எட் முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகள் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், ஸ்டாலின் முதல்வராக வந்ததும் தங்களது பிரச்சினை தீர வழிபிறக்கும் தங்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் என எண்ணிய பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு போராட்டக் களமே மிஞ்சியது. இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெ.குமரேசன் நம்மிடம் வேதனையுடன் பேசினார்.
“கலைஞர் முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் தனிப்பாடமாக கணினி அறிவியலை கொண்டு வந்தாலும் அதற்கான பாடத்திட்டம் கொண்டுவரப்படவில்லை. இந்த நிலையில் தான் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஐசிடி பாடத்திட்டம் அமல்படுத்துவதற்கு, லேப்களை அமைக்கவும் கணினி பயிற்றுநர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கியது.
அதன்படி பள்ளிகளில் கம்பியூட்டர் லேப்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பயிற்றுநர்களை நியமிக்கவில்லை. மாறாக, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப் பெயரில் பணி வழங்கப்பட்டது. ஐசிடி ஆய்வாளர் என்ற பெயரில் பணியமர்த்தாமல் அவர்களை நிர்வாக ஆய்வாளர்கள் என பணியமர்த்தி உள்ளனர். அவர்கள் இன்று எமிஸ் பணியைத் தான் மேற்கொள்கின்றனர். மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் நடத்துவதில்லை.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸை நேரில் சந்தித்து முறையிட்டும் எந்தப் பயனுமில்லை. வேலையில்லாத எங்களுக்கு பெண் தர மறுக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் திருமணமாகாமல் இருக்கிறோம். மத்திய அரசின் நிதியை முறையாக தமிழக அரசு பயன்படுத்தவில்லை; கணினி அறிவியல் பயிற்றுநர்களை நியமிக்கவில்லை என்பதற்கான ஆர்டிஐ தகவல்கள் அடங்கிய 700 பக்க ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், தமிழகத்தில் கணினி அறிவியல் தனிப்பாடமாக பள்ளிகளில் இல்லாததால், எங்களால் ஆசிரியர் தகுதித் (டெட்) தேர்வும் எழுத முடியாது. எனவே, பள்ளிகளில் கணினி அறிவியலை தனிப்பாடமாக கொண்டு வரவேண்டும். அரசுப் பள்ளிகளில், முறையாக கணினி அறிவியல் படித்தவர்களை கணினி பயிற்றுநர்களாக நியமிக்க வேண்டும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கணினி அறிவியல் தனிப்பாடமாக உள்ளது. கணினி ஆசிரியர்களுக்கு அங்கு தகுந்த ஊதியமும் வழங்கப்படுகிறது.
சர்வதேச அளவில் மென்பொருள் துறையில் தமிழர்களே அதிகளவு கோலோச்சி வருகின்றனர். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் கணினி அறிவியலை தனிப்பாடமாக பள்ளிகளில் கொண்டு வந்து, பி.எட் முடித்த கணினி அறிவியல் பட்டதாரி இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்” என்று சொன்னார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago