திமுக-வில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி வருவதால் சீனியர்கள் எல்லாம் ஜெர்க் ஆகி வருகிறார்கள். அந்த வகையில், ஈரோடு மாவட்ட திமுக-வின் அதிகார மையாக இருந்து வரும் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களையும் இந்த அச்சம் சூழ்ந்துள்ளது.
ஈரோடு முத்துசாமிக்கு 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட திமுக வாய்ப்பளித்தது. இருமுறையும் தோற்றுப்போன முத்துசாமி, 2021 தேர்தலில், விட்ட இடத்தைப் பிடித்து அமைச்சரவையிலும் அங்கமானார். அதன் பிறகு திமுக-வில் முத்துசாமிக்கு தரப்பட்ட முக்கியத்துவமானது பலரது கண்களை உறுத்தியது.
அதேசமயம், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தனக்கு யாரெல்லாம் சவாலாக இருப்பார்களோ அவர்களை எல்லாம் முத்துசாமி மெல்ல ஓரங்கட்டியதாகச் சொல்வார்கள். ஒன்றுபட்ட ஈரோடு மாவட்ட திமுக செயலாளராக இருந்த என்.கே.கே.பி.ராஜவின் பதவி பறிக்கப்பட்டு, ஈரோடு வடக்கு, தெற்கு என மாவட்ட திமுக இரண்டாக பிரிக்கப்பட்டது. தெற்கு மாவட்டத்துக்கு செயலாளர் ஆனார் முத்துசாமி.
முத்துசாமிக்கு போட்டியாக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 2021-ல் அறிமுகமே இல்லாத பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் சொற்ப ஓட்டில் தோற்றதும் இயல்பாக நடந்தது இல்லை என்பார்கள். அந்தத் தேர்தலில் மாவட்டத்தில் 2 இடங்களில் மட்டுமே திமுக வென்றதால், போட்டியின்றி அமைச்சருமானார் முத்துசாமி. மக்களவைத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை கூட்டணிக்கு தள்ளிவிட ஒரு முயற்சி நடந்தது.
ஆனால் சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை, தொகுதியை திமுக-வுக்கு ஒதுக்கி இளைஞரணி துணை அமைப்பாளரான பிரகாஷை எம்.பி ஆக்கியது கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு திமுக-வில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சிய முத்துசாமிக்கு, பிரகாஷின் வரவு அத்தனை விருப்பமானதாக இல்லை. அதேசமயம் உதயநிதியின் நேரடி தேர்வு, அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டவர்களின் அன்புக்குரியவர் என்பதால் பிரகாஷ் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளார்.
ஈவிகேஎஸ் மறைவுக்குப் பின், ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசிடம் கேட்டுப்பெற்ற திமுக தலைமை, தேமுதிக வரவான வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக்கி வெற்றி பெற வைத்துள்ளது. தொண்டர்களிடம் நெருக்கம் பாராட்டுபவர் என்பதால் சந்திரகுமாரின் ‘என்ட்ரி’ முத்துசாமிக்கு சங்கடத்தை உண்டாக்கலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள். அதேசமயம்
முத்துசாமியின் அரவணைப்பில் வளர்வதையே சந்திரகுமார் விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், முத்துசாமியின் தெற்கு மாவட்டத்தில் இருந்து பெருந்துறை தொகுதியையும், வடக்கு மாவட்டத்தில் இருந்து பவானி தொகுதியையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்டத்தை உருவாக்கியுள்ள திமுக தலைமை, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தைச் செயலாளராக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, செங்கோட்டையனை எதிர்த்து அரசியல் செய்த தோப்பு வெங்கடாசலத்தின் வரவும், முத்துசாமிக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்றே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீண்டும் ‘ஆக்டீவ்’ அரசியலுக்கு வருகிறார், அந்தியூர் தொகுதியில் போட்டியிட தயாராகிறார் என்ற தகவலும் ஈரோடு திமுக வட்டாரத்தை தற்போது பரபரப்பாக்கி உள்ளது.
இதுகுறித்து முத்துசாமியின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் அமைச்சர் செய்யமாட்டார். எதையுமே விதிகளுக்கு உட்பட்டே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இது கட்சியினர் சிலருக்கு பிடிப்பதில்லை. அதனால் ஏதேதோ கட்டுக்கதைகளை அள்ளிவிடுகிறார்கள். ஆனால், அமைச்சரின் அரசியல் அனுபவத்தையும், செயல்பாடுகளையும் தலைவர் நான்கு உணர்ந்திருக்கிறார். அதனால் இந்த சலசலப்புகளால் சலனப்படாமல் இருக்கிறார் அமைச்சர்” என்றனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது அரசியலுக்கு மட்டும் பொருந்தாதா என்ன!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago