“வெற்று விளம்பரங்கள், ஸ்டிக்கர்கள் நிறைந்தது தமிழக பட்ஜெட்” - எல்.முருகன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "பல்வேறு திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதி பெயரை சூட்டினால் அது திமுகவின் வெற்றியாகி விடுமா? வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான்" என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026-ல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன. தொழிற்பூங்காக்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள், தொழிற்பேட்டைகள் என பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும்தான் உள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவித்தால் போதுமா? திட்டங்களை செயல்படுத்துவது எப்போது?

பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் 57 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். அதேசமயம் அடுத்த ஓராண்டில் 40 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறுகிறார். இதை எப்படி அவர் செய்யப்போகிறார்?

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசு செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தை 4 ஆண்டு காலம் முடக்கி வைத்துவிட்டு ஆட்சி முடியும் நிலையில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறுவது, புதிய இளம் வாக்காளர்களை கவர்வதற்கான கேலிக்கூத்தே தவிர, இதனை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

மாநில சுயாட்சி பற்றி வாய்கிழிய பேசி வரும் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் பேச மறுக்கின்றனர். தமிழில் கவர்ச்சியான பெயர் வைத்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? எதையும் செயல்படுத்த வேண்டாமா?

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தீர்கள். அது இன்னமும் வெற்று அறிவிப்பாக இருக்கிறது. திட்டங்களுக்கு பெயர் சூட்டுவதில் வித்தகர்களான திமுகவினர், அதனை செயல்படுத்துவதில் 'எத்தர்கள்'. கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை? அதில் ஒன்று இரண்டாவது செயல்படுகிறதா என்பதை விளக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு அள்ளி வீசிய வாக்குறுதிகளில், அறிவிக்கப்பட்ட ஒன்றிரெண்டு கூட வெற்று அறிவிப்புகளாகவே இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஸ்டிக்கர் ஒட்டுவதில் பெயர் எடுத்த திமுகவினர் மற்றவர்கள் செய்த பணிகளில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி வருவது ஊர் அறிந்த ஒன்று. அதைத் தான் இப்போதும் செய்துள்ளனர்.

தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கை இதற்கு தகுந்த எடுத்துக்காட்டு. உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழகம் எந்தநிலையில் இருக்கிறது என்பதை அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. பல ஆண்டுகளாகவே தமிழகம் பல மாநிலங்களுக்கும் முன்னோடியாகவே திகழ்ந்து வருகிறது. சமூக முன்னேற்றம், தொழில் மேம்பாடு பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம் என பல்வேறு குறியீடுகளிலும் பல்லாண்டுகளாக தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தில் தான் இருந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல.

தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள் ஒவ்வொரு தமிழரும்தான். தமிழ்நாடும், தமிழரும் இதற்காக பெருமைப்பட முடியும். ராஜாஜி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலங்களில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளை தமிழகம் என்றென்றும் மறக்க முடியாது. இதற்கு, இதுவரை தமிழகத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பும் உள்ளது.

ஆனால், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் திராவிட மாடல் அரசு இதற்கு எப்படி பெருமைப்பட முடியும். திமுக அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன? இந்த நான்கு ஆண்டுகளில் இந்த சாதனை பட்டியல் வந்து விட்டதா? இதற்கு முன்பு பல ஆண்டுகள் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்தபோதும் இதே சாதனைப் புள்ளிகள் இருந்ததே?

உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் பல சாதனைகள் கைநழுவிப் போய் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் உத்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் முந்திக் கொள்ளும் சூழல்தான் ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழக மக்களின் சாதனைகளையும் உழைப்பையும் திருடி திராவிட மாடல் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் அது உங்கள் சாதனையாகி விடுமா?

பல்வேறு திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையான மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டினால் அது திமுகவின் வெற்றியாகி விடுமா? தமிழ்நாட்டின் வறுமை நிலை 1.64 % என்று பெருமைப்படுகிறீர்கள். ஆனால் கேரளாவில் இது 0.8 % ஆக இருக்கிறதே? தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டி சொந்தக் கட்சியினர் கொள்ளையடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து மதுவை வாங்கி, அரசு மதுக் கடைகளை நடத்தி, அதன் மூலம் திமுகவைச் சேர்ந்த ஒரு சில குடும்பங்கள் கோடியில் புரளும் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது.

டாஸ்மாக்கில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதும் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. தாங்கள் செய்த மோசடிகளை மக்களின் பார்வையிலிருந்து திசை திருப்பிட, ரூபாய் குறியீட்டை மாற்றி குழப்ப அரசியலில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 'டாஸ்மாக் ஊழல்' பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கூட ஊழல் புகாரில் சிறை சென்று வருபவர்களை தியாகியாக்கி, பிறகு அவர்களை அமைச்சராக்கி, மேலும் மேலும் ஊழல் செய்து பணம் குவிப்பதையே திமுக தலைமை விரும்புகிறது. மீதமிருக்கும் ஓராண்டில் எவ்வளவு சுரண்ட முடியும் என்பது மட்டுமே திமுகவினரின் கணக்காக இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை பற்றி இந்த அரசுக்கு என்ன கவலை இருக்க முடியும்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்