கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் புதிய வீடுகள்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். ஊரக வளர்ச்சித் துறை குறித்து பேசுகையில், “குடிசையில்லா தமிழகம் அமைந்திட வேண்டும் என்ற மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெருங்கனவை நினைவுவகையில், கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன், சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள், அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு 6,100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் 2200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மேலும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்புக்கென ஒவ்வொரு ஆண்டும் மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து உரிய நிதி ஒதுக்கிட முடிவு செய்து, 2025-26 ஆம் ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஊரகப் பகுதிகளில் வாழும் விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டப்பட்டு, தற்போது சீரமைக்க முடியாமல் மிகவும் பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித் தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் புதிய வீடுகள் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

தமிழகத்தின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு பெற்றிடும் வகையில், பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-IIன் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் 2,329 கிராம ஊராட்சிகளில் 1,087 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் 40.87 கோடி மனிதசக்தி நாட்கள், 13,392 கோடி ரூபாய் செலவினத்தில் எய்தப்பட்டுள்ளது. ஆனால், 2024-25 ஆம் ஆண்டில் 27-11-2024 முதல் 11-03-2025 வரை வேலைசெய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 2,839 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் 957 கோடி ரூபாய் பொருட்கூறுக்கான நிதி என மொத்தம் 3,796 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

இந்த நிலுவைத் தொகையை உடனே விடுவித்திட தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 29,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்