சென்னை: இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் இரண்டாவது நாளாக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், "இந்தியை தி.மு.க. ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று நம்மை நோக்கிக் கேட்பவர்களுக்கு, உங்களில் ஒருவனான நான் அன்போடு சொல்லக்கூடிய பதில், “இன்னமும் நீங்கள் அதைத் திணிப்பதால்தான், நாங்கள் அதனை எதிர்க்கிறோம்” என்பதே. திணிக்காவிட்டால், எதிர்க்கமாட்டோம். அதைத் தடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இந்தி எழுத்துகளை அழிக்கமாட்டோம். தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
“ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?'' என்று இங்கேயுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த உணர்வு நியாயமாக தமிழ் மீது இருந்திருக்க வேண்டும்.
நம்மைக் கேட்பதற்கு பதில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும், இந்தித் திணிப்பில் தீவிரமாக இருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடமும், “காசி தமிழ்ச் சங்கமம் என்று நடத்துகிறீர்களே, கும்பமேளா நடக்கிறதே, அதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் தென் மாநிலங்களில் இருந்தும் உத்தரப்பிரதேசம் செல்லும் பயணிகள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளில் பெயர்ப்பலகைகளை வைத்திருக்கிறீர்களா? இந்தியாவில் உள்ள மாநில மொழிகளைச் சமமாக மதித்து அறிவிப்புகளைச் செய்கிறீர்களா?” என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்?
தமிழ்ப் பகையையே கொள்கையாகக் கொண்டு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் இயக்கத்தில் இணைந்திருப்பவர்கள் தமிழுக்காக – தமிழர் நலனுக்காக எப்படி குரல் கொடுப்பார்கள்? திராவிட இயக்கத்திற்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது. தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாகக் கருதி அழித்ததில்லை. பிற மொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவற்றை விரட்டியடிக்கும் என்பதுதான் நமது பண்பாட்டு வரலாறு.
திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான பிட்டி. தியாகராயர், தனது இல்லத்திலேயே சமஸ்கிருதம் உள்ளிட்ட பாடங்களைப் படிக்க விரும்புகிறவர்களுக்கு சாதிபேதம் பார்க்காமல் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தவர்.
நீதிக்கட்சி ஆட்சியின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான அரசாணையைப் பிறப்பித்தவரும், இந்து அறநிலையச் சட்டத்தை உருவாக்கியவருமான பனகல் அரசர் இராமராய நிங்கர் சமஸ்கிருதத்தில் உரையாற்றக் கூடிய அளவிற்கு அந்த மொழியை அறிந்திருந்தவர்.
அந்த நீதிக்கட்சியின் தலைவராக இருந்த ஏ.டி.பன்னீர்செல்வமும், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களும், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து நின்று 1937 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மையாக நின்றனர். காரணம், சென்னை மாகாணத்தில் இருந்த பள்ளிகளில் ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி, வலிந்து திணித்ததால்தான்.
சென்னை மாகாணமாக இருந்த அன்றைய தமிழ்நாடெங்கும் ஆதிக்க இந்திக்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகள் நடத்தப்பட்டன. துறையூரில் 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமையேற்றவர் 28 வயது இளைஞரான அண்ணா.
அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றும்போது, “எந்த ஆட்சி வந்தாலும் சரி, தமிழர் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவைகள் சில உள்ளன” என்றார் அண்ணா. தமிழரின் ஜீவநாடியாக இருப்பதில் முதன்மையானது என்று அண்ணா குறிப்பிட்டது தமிழ்மொழியைத்தான்.
“நாம், தமிழர் என்பதைக் காட்டுவது தமிழ்மொழிதான். இதற்கு ஆபத்து வந்துவிட்டால் நமது ஒற்றுமை, கலை, நாகரிகம் யாவும் நாசம். ஆகவே தமிழைக் காப்பாற்றுங்கள்” என்று பெரியாரின் தளபதியான அண்ணா அறைகூவல் விடுத்தார்.
தாய்மொழியைக் காத்திட தமிழ்நாடு திரண்டது. இன்றைய தமிழ்நாட்டு பா.ஜ.க.வினர் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்து,‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமூக நீதித் தத்துவத்தைக் கொண்ட தமிழைப் பின்தள்ள நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள் அப்போதும் இருந்தார்கள்.
இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய அன்றைய ராஜாஜி அரசின் செயலை வரவேற்றதுடன், மேல்நிலை வகுப்புகளில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் தலையங்கங்கள் எழுதப்பட்டன.
காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, “வருணாசிரம தர்மம் காப்பாற்றப்படவும், கிராம ராஜ்ஜியம் ஏற்படவும் வடமொழியை– சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்” என்று கூறினார். இவற்றையெல்லாம் எதிர்த்துதான் பெரியார் தலைமையில் போராட்டக் களம் புகுந்தனர் தமிழர்கள்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை முதலில் நுழைத்து, அதனைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தையும் திணித்து, தமிழையும் தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசினுடைய திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு முழுவீச்சாக இன்றைக்கு எதிர்க்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தைத் திராவிட இயக்கத் தலைவர்கள் அன்றைக்கே வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.
மறைமலையடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழவேள் உமா மகேசுவரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பலரும் தாய்மொழியைக் காப்பதற்காக, பெரியார் முன்னெடுத்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு அறப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான நான் இன்று (பிப்ரவரி 25) இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியின் முன்னெடுப்பில், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பேரணியாகச் சென்று, ஒன்றிய அரசின் அலுவலகங்களின் முன்பாக, மும்மொழிக் கொள்கையையும் – இந்தித் திணிப்பையும் – யு.ஜி.சி. விதிமுறைகள் திருத்தத்தையும் எதிர்த்து கண்டன முழக்கமிட்டுஆர்ப்பாட்டம் நடத்திய செய்திகளை தொலைக்காட்சிகள் வாயிலாகப் பார்க்க முடிந்தது. ஆதிக்க இந்திக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்திருக்கிறது தமிழ்நாட்டின் மாணவப் பட்டாளம்.
தாய்மொழியாம் தமிழைக் காத்திட ஊர்தோறும் மாணவர்களுடன் மாணவிகளும் பங்கேற்க நடந்துள்ள எழுச்சிமிக்க கண்டனப் பேரணி , அன்று ‘தமிழர் பெரும்படை’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை அழகிரியும்– மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் முன்னின்று திருச்சி முதல் சென்னை வரை நடத்திய நெடும்பயணத்தை நினைவூட்டுவதாக இருந்தது.
ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்திய கண்டனப் பேரணி என்பது, சென்னை சவுகார்பேட்டை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் 1938ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று ஆண்களும் பெண்களுமாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இன்றைய பதிப்பு போல இருந்தது. அப்போது நடந்த போராட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீத்தம்மாள் ஆகிய 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீத்தம்மாள் தனது மூன்று வயது மகள் மங்கையர்க்கரசி, ஒரு வயது மகன் நச்சினார்க்கினியன் ஆகியோருடன் கைதாகி சிறை சென்றார் என்பது திராவிட இயக்கத்தின் தியாக வரலாறு.
ஆண்–பெண் பேதமின்றி தமிழ்மொழி காத்திட சிறைபுகுந்த மன உறுதிமிக்க அந்தப் போராட்ட உணர்வு இன்றைக்கும் தேவைப்படுகிறது என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசின் தொடர்ச்சியான தமிழ் விரோத செயல்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. 1938ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் கழக முன்னோடியான என்.வி.நடராசனின் துணைவியார் புவனேஸ்வரி, தன் கைக்குழந்தையான சோமசுந்தரத்துடன் கைதாகி சிறை சென்றார். அந்தக் குழந்தை சோமசுந்தரம்தான், பின்னாளில் என்.வி.என்.சோமு என அறியப்பட்ட கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஒன்றிய இணையமைச்சராகவும் இருந்தவர்.
பிறக்கும்போதே தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் சேர்த்து ஊட்டப்பட்டவர்கள் நாம். இறக்கும் வரையில் தமிழ் உணர்வு அழியாது. தமிழை அழிக்க நினைப்பவர்களையும் விடமாட்டோம்.
இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், 1937ல் தொடங்கி 1939 வரை நடந்த முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில், தமிழைக் காப்பதற்காக சிறைக் கொடுமைக்குள்ளாகி, உடல்நலிவுற்ற நிலையிலும் மன்னிப்பு கேட்க மறுத்து, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்தி, களம் புகுவோம். சட்டத்தின் முன்பும் நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழைக் காப்போம்.!
மொழிப்போரில் பெரியார் மீது வழக்குத் தொடரப்பட்ட போது, நீதிமன்றத்தில் அவர் வழக்காடவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணவப் போக்கையும், சட்டத்தை வளைக்கக்கூடிய சக்திகளின் செயல்பாடுகளையும் தன் துணிவுமிக்க வார்த்தைகளால் அடையாளம்காட்டிவிட்டு, நீதிபதியைப் பார்த்து பெரியார் சொன்னார், “கோர்ட்டார் அவர்கள் திருப்தி அடையும் வகையில் தங்களால் எவ்வளவு அதிக சிறைத் தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வகையில் சிறையில் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இடமுண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாய்க் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு நியாயமான இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காக கஷ்ட நஷ்டத்தை அடைதல் எனும் விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்றார் துணிச்சலாக!
அன்று பெரியார் சொன்னதைத்தான் பின்னாளில் அண்ணா சொன்னார். அதன்பின் கருணாநிதி சொன்னார். சொன்னபடி செய்தார்கள் நம் தலைவர்கள். ஆதிக்க ழொழிகளிடமிருந்து தமிழைப் பாதுகாத்தார்கள். இருமொழிக் கொள்கையால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு, சிறப்பான வேலைவாய்ப்புகள் எனத்தமிழ்நாடு இன்று உயர்ந்து நிற்கிறது. தாழ்ந்த தமிழகத்தை நிமிர்த்தி உயர்த்தியது திராவிட இயக்கம். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வஞ்சகத்தைத் தொடர்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம்.
வஞ்சகத்தை எதிர்த்திடவும், வளமான தமிழ்நாட்டைப் பாதுகாத்திடவும், மாநில உரிமைக்கான குரலுடன் தாய்மொழி காத்திடும் முழக்கத்தையும் முன்னிறுத்துவோம். ஆதிக்க மொழியால் இந்திய மொழிகள் பல அழிக்கப்பட்ட வரலாற்றைப் பார்ப்போம்.!" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago