“கல்விச் சீரழிவை ஏற்படுத்தும் திமுக அரசு” - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கான பாடத் திட்டத்தை வகுக்காமல் இருப்பதும், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கல்வியே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் கல்வி அறிவைப் பெறும் வகையிலான திட்டங்கள் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரேயான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள், மிதி வண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது பாடப் புத்தகங்களே தாமதமாக கிடைக்கக்கூடிய அவவ நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய மாணவ, மாணவியருக்கு கணினி வழிக் கல்வி முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்தத் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு பள்ளியிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வத்தை அமைத்து, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கணினிக் கல்வியைக் கற்றுத் தருவதாகும்.

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசால் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், இதனைப் பராமரிக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இருப்பினும், தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கணினிக் கல்வி கற்றுத் தரப்படுவதில்லை என்றும், கணினி அறிவியல் என்ற பாடத் திட்டமே வகுக்கப்படவில்லை என்றும், இந்த ஆய்வகம் அலுவலகப் பணிகள் மற்றும் வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் கணினிக் கல்வி பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

6,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கணினிக் கல்வி கற்பிக்க வேண்டுமென்ற நிலையில், கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் பட்டம் பெறாத 1,200 கணினி ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக அடிப்படையில் திமுக அரசு நியமித்துள்ளது என்றால், இந்தத் திட்டம் பெயருக்காக செயல்படுத்தப்படுகிறது என்றுதான் பொருள்.

அதே சமயத்தில், மத்திய கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதலே கற்றுத் தரப்படுகிறது. மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கான பாடத் திட்டத்தை வகுக்காமல் இருப்பதும், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை தனியார் பள்ளிகளுக்கு மடைமாற்றம் செய்யும் முயற்சியாகும்.

திமுக அரசின் இந்தச் செயல் ஏழையெளிய மாணவ மாணவியரின் எதிர்காலத்தை சிதைப்பதற்குச் சமம். இந்தத் திட்டத்தினை உரிய முறையில் திமுக அரசு நிறைவேற்றியிருந்தால், கிட்டத்தட்ட 6000 கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். இதையும் திமுக அரசு கெடுத்துவிட்டது. திமுக அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நிதிச் சீரழிவு, நீர் மேலாண்மை சீரழிவு என்ற வரிசையில் கல்விச் சீரழிவை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

அழியாச் செல்வமாம் கல்வியை ஏழையெளிய மாணவ, மாணவியர் பெற வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி, இனி வருங்காலங்களிலாவது, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள்மூலம் கற்பிக்க முதல்வர் ஆவன செய்ய வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்