தமிழகத்தை ஒட்டியே இருந்தாலும் பெரும்பாலும் புதுச்சேரி மாநில அரசியலானது தமிழகத்தைவிட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருக்கும். இப்போது அங்கிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரசும் பிரதானமாக இருக்கிறது. திமுக-வும் அதிமுக-வும் புதுச்சேரி அரசியலில் இரண்டாம்பட்சம் தான்.
புதுச்சேரியில் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இங்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்திருக்கிறது திமுக. இந்த நிலையில், அண்மையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, “இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராக இல்லை. 2026 தேர்தலில் திமுக 20 தொகுதிகளை கேட்டுப் பெறும். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் சிவா நமக்களித்த மினி பேட்டியிலிருந்து...
20 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொன்னதற்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தான் காரணமா?
» தருமபுரி அருகே கம்பைநல்லூரில் பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு: நடந்தது என்ன?
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று சொல்லி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் குறிப்பாக, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். மாஹே, ஏனாம் தொகுதிகளில் கிளைக் கழகத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களின் தாக்கம் புதுச்சேரியிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் திமுக-வில் வேட்பாளர்களாக நிற்பதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எல்லாம் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்கள். எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். அவர் காட்டுகின்ற வழியில் புதுச்சேரி திமுக தேர்தலை சந்திக்கும்.
அதேசமயம், புதுச்சேரி திமுக-வில் உள்ளவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதனால் எங்கள் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஆலோசனைகளை பெற்றோம். அதை தலைமைக்கு தெரியப்படுத்தி தலைவரிடத்தில் எடுத்துரைத்து புதுச்சேரியில் இண்டியா கூட்டணியில் 20 தொகுதிகளை பெறுவோம் என்றும் கூறினோம். செயற்குழுவின் முடிவை கட்சித் தலைவரிடத்தில் வலியுறுத்துவதற்காக உள்ளரங்கில் திமுக-வினர் மத்தியில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
20 தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு திமுக புதுச்சேரியில் பலம் பெற்றுள்ளதா?
புதுச்சேரியில் நான்கு முறை ஆட்சி அமைத்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்த இயக்கம் திமுக. அந்த இயக்கம் என்றும் வலுவாகத்தான் இருக்கும். புதுச்சேரி மாநிலத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவில் தமிழ்நாடு உள்ளதால் எங்கள் கட்சித் தலைவர் கொண்டு வந்துள்ள புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தொழில் புரட்சியில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தது, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் போன்ற முன்னோடித் திட்டங்களின் தாக்கம் புதுச்சேரி மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
அதனால் புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பணிகளைத்தான் திமுக முன்னெடுத்திருக்கிறது. அதில் சலசலப்புகள் வரத்தான் செய்யும். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்களுக்கான பணியை திமுக தொடர்ந்து செய்யும்.
ஓடாத வண்டி என இண்டியா கூட்டணியை சொல்கிறீர்களா... காங்கிரஸ் கட்சியை சொல்கிறீர்களா?
திமுக சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கை கோட்பாட்டில் தொடர்ந்து பயணம் செய்யுமே தவிர, கொள்கையற்றவர்களுடன் பயணிக்காது என்பதைத் தான் ஓடாத வண்டியில் திமுக பயணிக்காது என்று சொன்னேன். இந்த கருத்து கூட்டணியில் உள்ள யாரையும் குறிப்பிட்டு அல்ல.
புதுச்சேரியில் 2026 தேர்தலில் திமுக தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா?
இண்டியா கூட்டணியில் இருக்கும் திமுக தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. அதேபோல் புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்குமா அல்லது தற்போது அதிக எம்எல்ஏ-க்களை வைத்துள்ள திமுக தலைமை தாங்குமா என்றெல்லாம் கேள்விகளை எழுப்புகின்றனர்.
ஆனால் நான் வழக்கமாக சொல்வது போல், புதுச்சேரி மாநில திமுக-வானது எங்கள் கட்சித்தலைவர் கட்டளைப்படி தான் செயல்படும். ஒருவேளை, 2026-ல் இண்டியா கூட்டணிக்கு புதுச்சேரியில் தலைமை தாங்கும்படி எங்கள் தலைவர் சொன்னால் அதையும் வெற்றிகரமாக செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆளும் என்.ஆர்.காங்கிரசையோ, முதல்வர் ரங்கசாமியையோ திமுக அதிகம் விமர்சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? 2026-ல் கூட்டணி மாற்றம் ஏதேனும் ஏற்படுமோ?
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் இருக்கும் வரை கூட்டணி மாற்றத்திற்கு இடமில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் புதுச்சேரியில் இண்டியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணிதான் ஆளும் கட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் தோலுரித்து 2024 மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் 2026 தேர்தலிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago