ஈஷா யோகா சிவராத்திரி விழாவால் வனச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு: ஆய்வுக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவால் இயற்கை வனச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருகின்றனர். இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை வனச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க 7 லட்சம் பேருக்கு மேல் திரண்டதால் ஏற்பட்ட கழிவுநீர் வனப்பகுதிகளை மட்டுமின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியுள்ளது. விடிய, விடிய நடைபெறும் நிகழ்வில் அரசு நிர்ணயம் செய்துள்ள 45 டெசிபல் ஒலி அளவை விட விதிகளை மீறி அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஈஷா யோகா மையத்தில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் வனச்சூழலை பாதிக்கும் வகையிலும், ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் வகையிலும் சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது என ஈஷா யோகா மையத்துக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், “ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சிவராத்திரி விழாவில் எந்தவொரு சட்டவிதிகளும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறது,” என்றார்.

ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “தனது நிலத்தை ரூ.100 கோடிக்கு வாங்க மறுத்ததால் மனுதாரர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டும் சிவராத்திரி நெருங்கும் தருவாயில் இதுபோல வழக்குத் தொடர்ந்தார். சிவராத்திரி விழா நிகழ்வின்போது எந்த விதிமீறலும் மீறப்படுவதில்லை,” என்றார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “சிவராத்திரி நிகழ்வில் விதிமீறல்கள் இருந்தால் அரசு வேடிக்கைப் பார்க்காது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். சிவராத்திரி விழாவில் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்,” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்.24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்