அமைதிக்கு பேர் போன செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருப்பது அதிமுக-வுக்குள் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ‘இந்து தமிழ் திசை’க்கு செங்கோட்டையன் அளித்த நேர்காணலில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைப்பது தொடர்பான பேச்சு நடக்கிறது” என உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் - இபிஎஸ்சை சந்தித்தது உண்மைதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
“நீக்கப்பட்டவர்களைச் சேர்க்க வாய்ப்பே இல்லை. இதுவிஷமாக முன்னாள் அமைச்சர்கள் என்னை சந்திக்கவில்லை” என்று பொதுவெளியில் மறுத்து வந்த இபிஎஸ்சுக்கு, செங்கோட்டையனின் இந்த விளக்கம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த நேர்காணல் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், தற்போது இபிஎஸ்சுக்கு நடந்த பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.
இதற்கு, “எங்களை உருவாக்கிய தலைவர்களான எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்கள் அழைப்பிதழிலும், மேடையிலும் இல்லாததால், என் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், இந்த விழாவில் பங்கேற்கவில்லை” என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதோடு, சென்னையில் நடந்த டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழா நிகழ்வையும் புறக்கணித்து, தலைமைக்கு எதிரான தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
» முருகனின் அருள் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும்: தைப்பூசத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து
» சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு
தனது இந்த நடவடிக்கைகள் மூலம் செங்கோட்டையன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாரா அல்லது கட்சி தலைமைக்கு எதிராக தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளாரா என்பது தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை முன் நிறுத்தி, செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் இந்த ‘உரிமைக்குரல்’ மாநிலம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் மத்தியில், ‘உரத்த குரலாக’ பரவி, விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஈரோடு கே.வி.ராமலிங்கமும், இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்துள்ளதையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கூடவே, இந்த நிகழ்வு தொடர்பாக, டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர் ரகுபதியின் கருத்துகள், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அதிருப்தி குரல் என பல தொடர்வினைகள் வெளியாகி பரபரப்புக்கு தூபம் போட்டுள்ளது.
இதற்கு நேரடியாக பதில் தராத இபிஎஸ், “அது கட்சி நிகழ்ச்சி அல்ல” என்ற எளிமையான ஒரு பதிலை ஜெயக்குமார் மூலம் சொல்லி கடந்து போயிருக்கிறார். செங்கோட்டையன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஈரோடு அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ஜெயலலிதா மறைவிற்கு பின் தன்னைத் தேடி வந்த தலைமை பதவியை தவிர்த்தவர் செங்கோட்டையன்.
அவருக்கும் இபிஎஸ்சுக்கும் இடையே, தற்போது சுமுக உறவு இல்லை என்பது உண்மை. முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, இபிஎஸ் தன்னிடம் கலந்து கொள்வதில்லை என்ற வருத்தம் தொடர்கிறது. இதனால், சென்னை வரும்போது, தலைமைக்கழகத்திற்கு செல்வதைக்கூட தவிர்த்து விடுகிறார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் கூட இவரின் கருத்துக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதோடு, இபிஎஸ்சுக்கான பாராட்டு விழா தொடர்பாக எந்த தகவலையும் செங்கோட்டையனுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலில், இபிஎஸ் புகழ்பாடும் விழாவாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழா அழைப்பிதழை பார்த்தாலே அது தெரியவரும். இவற்றின் உச்சமாக, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை விழா மேடையிலாவது சேர்க்க வேண்டும் என தான் சொல்லி அனுப்பியும், அதனை புறக்கணித்தது, கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்தியதால், விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இந்த காரணத்தை வெளிப்படையாக தெரிவித்த பிறகும், இபிஎஸ் அல்லது வேலுமணி போன்றோர் அவரிடம் பேசி சமாதானப்படுத்த இதுவரை முயற்சி எடுக்கவில்லை.
இப்படியாக, அவருக்கு அதிருப்தி ஏற்படுத்தும் பல சம்பவங்கள், காரணங்கள் தொடர்ந்தாலும், இபிஎஸ்சுக்கு எதிராக கொடி பிடிக்கும் மனநிலையில் தற்போது செங்கோட்டையன் இல்லை. தன்னை அடையாளப்படுத்திய கட்சியின் நலன் மட்டுமே அவருக்கு முதன்மையாக உள்ளது.
அவர் அடுத்து என்ன நடவடிக்கை எடுத்தாலும், அது தனிப்பட்ட தனது அதிருப்தி அல்லது ஆதாயம் என்பதைத் தாண்டி, கட்சியின் நலன் சார்ந்ததாகவே இருக்கும்” என்று தெரிவித்தனர் அவர்கள். செங்கோட்டையன் தொடர்ந்து எரிமலையாக வெடிக்கப் போகிறாரா அல்லது பனிமலையாய் உருகும் நேரத்திற்காக காத்திருக்கப் போகிறாரா என்பது அவரது அடுத்த அசைவுகளில் தெரிய வரும்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago