மாணவி லோகேஸ்வரி பலியான விவகாரம்; பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி: போலி பயிற்சியாளருக்கு உடந்தையாக இருந்த 5 பேரிடம் விசாரணை

By த.சத்தியசீலன்

கோவையில் தனியார் கல்லூரி மாணவி பலியான விவகாரத்தில், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. போலி பயிற்சியாளருக்கு உடந்தையாக இருந்த 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள நரசீபுரத்தில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைப் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அப்போது, இயற்கைச் சீற்றங்களால் பேரிடர் ஏற்படும்போது, எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்வது என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன்படி, கல்லூரி வளாகத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடத்தில், ஏறி இறங்குவதற்கு வசதியாக மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் கயிறு கட்டப்பட்டது. 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கயிற்றைப் பிடித்து கீழே இறங்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது அக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பிபிஏ படித்த மாணவி லோகேஸ்வரி கயிற்றின் மூலமாக கீழே இறங்க தயார்படுத்தப்பட்டார். அவர் தயக்கத்துடன் இருந்த நிலையில், பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் அவரை கீழே தள்ளிவிட, முதல் மாடியில் இருந்த சாளரத்தில் மாணவியின் கழுத்துப்பகுதி பலமாக மோதி, கீழே விழுந்து மயங்கினார்.

மருத்துவமைனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் (61) அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த ஆலாந்துறை போலீஸார் பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர்.

இதையடுத்து பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் ஆறுமுகம் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பெயரில் போலியாக சான்றிதழ் தயாரித்து மோசடி செய்து பல்வேறு கல்லூரிகளில், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை முகாம்கள் நடத்தியது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது:

’’போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர். இவருக்கு தாய், தந்தை கிடையாது. ஒரு தம்பி உள்ளார். சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, அவரது இடது காலில் சிறு ஊனம் ஏற்பட்டது. வேலை தேடி சென்னைக்கு சென்றுள்ளார்.

எங்கும் வேலை கிடைக்கவில்லை. இவருடைய நிலையைப் பார்த்த பேராசிரியர் ஒருவர், அவர் பணியாற்றும் கல்லூரியில் விடுதியில் மாணவர்களைப் பார்த்துக் கொள்ளும் (கேர் டேக்கர்) பணியில் சேர்த்து விட்டுள்ளார். அங்கு மாணவர்களுக்கு சிறு, சிறு பயிற்சிகள் அளித்த வந்த ஆறுமுகம் நாளடைவில் கயிறு ஏறி, இறங்குவதற்கு பயிற்சி அளித்துள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர் தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என்று கூறி, இலவசமாக முகாம் நடத்துவதற்கு தனியார் கல்லூரிகளை அணுகியுள்ளார். இதற்காக ஆறுமுகம் என்டிஎம்ஏ (தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்) பெயரில் முகநூல் பக்கம் தொடங்கி அதில் பலரை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டார்.

பின்னர் ஒவ்வொரு கல்லூரியாகச் சென்று பயிற்சி அளித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் 1,200 கல்லூரிகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். சான்றிதழ் கட்டணமாக மட்டும் ரூ.50 வசூலித்துள்ளார்.

பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் சின்னம், பெயர், அதிகாரியின் பெயர் போன்றவற்றை போலியாக அச்சடித்து வழங்கியுள்ளார். சென்னை வண்டலூரில் இவரது அலுவலகம் உள்ளது. காஞ்சிபுரம் காவல் நிலையம் மூலமாக, அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகத்தை அங்கு அழைத்துச் சென்று அவரது அலுவலகத்தில் சோதனை செய்ய உள்ளோம்” என்று போலீஸார் கூறினர்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் பயிற்சிகளுக்கு உதவியாக இருந்ததாகவும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறி சந்தேகத்தின் பேரில் சென்னையைச் சேர்ந்த அசோக் மற்றும் சதீஷ், ஈரோட்டைச் சேர்ந்த தாமோதரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினிதா, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆகியோரிடம் காருண்யா நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மதியம் தனிப்படை போலீஸார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை, தனிப்படை போலீஸார் கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஞானசம்பந்தன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 7 நாள் போலீஸ் காவல் கோரி தனிப்படை போலீஸார் மனுதாக்கல் செய்தனர். அது குறித்த விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

கல்லூரி நிர்வாகம் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து கலைமகள் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சுற்றறிக்கை (கடித எண் 24-1/2016) அனுப்பியிருந்தது. இந்நிலையில் ‘பயிற்சி அதிகாரி பேரிடர் மேலாண்மை ஆணையம், தெற்கு மண்டலம், தமிழ்நாடு’ என்ற முகவரியில் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் 16.04.2017 முதல் 15.05.2017-க்குள் பேரிடர் மேலாண்மை முகாம் நடத்த தேதி முடிவு செய்து தகவல் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் ஒரு பகுதியாக, இம்முகாமை நடத்த வணிகவியல்துறை டீன் வி.விஜயலட்சுமி என்பவர் மூலமாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஆறுமுகம் என்பவரிடம் இருந்து கடந்த ஜூலை 3-ம் தேதி கடிதம் வந்தது.

12-ம் தேதி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆறுமுகத்துடன் 5 பேர் மட்டுமே வந்தனர். துணைக்கு சில மாணவர்களை அழைத்துக் கொண்டார். முகாமில் மாணவிகளை கயிற்றில் இறங்கச் செய்த போது, மாணவி சாளரத்தில் அமர்ந்து கைகளை இறுக்கிப் பிடித்திருந்தார். பயிற்சியாளர் மாணவி லோகேஸ்வரியை வலையில் விழுமாறு தள்ளியபோது, மாணவி சாளரத்தைப் பிடித்திருந்ததால், தலை உள்நோக்கி திரும்பியது. கீழே விழுந்தபோது, கழுத்துப் பகுதியில் பலமாக அடிப்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாணவியின் இறப்புக்கு கல்லூரி நிர்வாகம் மிகவும் வருந்துகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்