சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் என்று திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக-வின் தேர்தல் அறிக்கை எண் 309-ல் “ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலன்” என்ற தலைப்பின்கீழ் ‘புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 44 மாதங்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் நிதித் துறை உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவினை திமுக அரசு அமைத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் 04-02-2025 நாளிட்ட செய்தி வெளியீடு எண் 271 தெரிவிக்கிறது. இந்தச் செய்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி குழு, மாநில அரசின் நிதி நிலைமை மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தக்கூடிய ஓய்வூதிய முறையை பரிந்துரை செய்யும் என்றும், இந்தக் குழு தனது பரிந்துரைகளை ஒன்பது மாதத்திற்குள் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அரசு செய்தி வெளியீடு தெரிவிக்கிறது.
» வெப்பநிலை உயர்வு: தொடர் அலட்சியம் பேராபத்துக்கு வழிவகுக்கும்
» போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அழைப்பு
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது என்பதே அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். இது மட்டுமல்லாமல், அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்படக் கூடிய ஓய்வூதியத் திட்டம் என்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாது என்பதுதான் அதன் பொருள். இது தேவையற்ற ஒன்று. மேற்படி மூன்று திட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கை. திமுக-வின் தேர்தல் வாக்குறுதியும் இதுதான். இந்த நிலையில், குழு அமைப்பது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது.
திமுக-வின் தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சி அமைத்து 44 மாதங்கள் கடந்த நிலையில் ‘எது சிறந்த திட்டம்’ என்று ஆராய குழு அமைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து, பொருளாதார வல்லுநர் குழு ஆரம்பித்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை எல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஆட்சி முடியும் தருவாயில் இதுபோன்றதொரு குழுவை அமைத்திருப்பது அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயல்.
முதல்வர் ஸ்டாலின் திமுக-வின் தேர்தல் அறிக்கையை நன்கு வாசித்து, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-க்கு முன்பு பணியில் சோர்ந்தவர்களுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதனை அப்படியே 2003-க்கு பின் சேர்ந்தவர்களுக்கும் நடைமுறைப்படுத்த எந்தக் குழுவும் அவசியம் இல்லை என்பதால், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago