“பெரியாரை மரியாதை குறைவாக பேசுவோருக்கு...” - முதல்வர் ஸ்டாலின் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: “பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை” என்ற முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் ரவி அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. அவர் தொடர்ந்து அதை செய்ய வேண்டும். அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது” என்றார்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: “நான் சென்னை மாநகராட்சிக்கு மேயராக இருந்தபோதும், தொடர்ந்து துணை முதல்வராக இருந்தபோதும் இதே வடசென்னை பகுதிக்கு குறிப்பாக சென்னைக்கு என்னென்னப் பணிகளையெல்லாம் செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டியதை பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு பணிகள் செய்தோம். இப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மாநகராட்சியின் பொறுப்பை மீண்டும் திமுக ஏற்ற பிறகு பல்வேறுப் பணிகளை சென்னைக்கு செய்திருக்கிறோம்.

அதில் குறிப்பாக, வடசென்னை பகுதிக்கு, சட்டமன்றத்தில் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட சென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால், அந்த 1000 கோடி ரூபாயும் தாண்டி பல்வேறு துறைகளின் ஒத்துழைப்போடு சுமார் 6309 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மொத்தப் பணிகள் 252. அந்த 252 பணிகளில் 29 பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. 166 பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகளும் முடிவடைய இருக்கிறது. எனவே, இந்த ஓராண்டு காலத்திற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.

தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் , இந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நானும், இரண்டாவது முறையாக ஏற்கெனவே, அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டாலும், தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

துணை முதல்வரையும், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். அவர்களும் இந்தப் பணிகளை துரிதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். வட சென்னையைப் பொறுத்தவரை இது ஒரு வளர்ந்த சென்னையாக நிச்சயமாக இந்த ஓராண்டுக்குள் உருவாகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பணிகளை தான் இன்றைக்கு நான் ஆய்வு கொண்டேன்” என்றார்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து, தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு ஆளுநர் ஒன்று, இரண்டு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் குற்றச்சாட்டு வைக்கிறார். அனைத்து பிரச்சினைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது எங்களுக்கு நன்றாகதான் உள்ளது. தொடர்ந்து அதை செய்ய வேண்டும். ஏன் என்றால், அதை செய்ய செய்யதான் எங்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் வேகம் வருகிறது. அவருடைய போக்கு இந்த ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. எனவே, அவர் அதை தொடர்ந்து செய்யட்டும், தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன்.

காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனம் குறித்து தேடுதல் குழுவை ரத்து செய்து ஆளுநர் அறிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்த வேலைகளைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். அது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வரும் 4-ஆம் தேதி வழக்கு வருகிறது. அப்போது தெரியும்.

பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கெல்லாம் நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. ஏன் என்றால், பெரியார் தான் எங்களுக்கு தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் அவர்தான். அதனால், அதை நாங்கள் பெரிதுப்படுத்தவும் தயாராக இல்லை. பொருட்படுத்தவும் தயாராக இல்லை.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 8-ஆம் தேதி தேர்தல் முடிவு தெரியவரும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் தீர்மானம் போட்டு இருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த சொல்லியிருக்கிறோம். பார்ப்போம். நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு தான் என்ன என்பது தெரியும்.

வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை பெரிதாக பூதாகரமாக்குகிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிற்சாலைகள் எல்லாம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்