“அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நடக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்” - கே.சந்துரு பேச்சு

By கி.மகாராஜன்


மதுரை: “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நடைபெற்று வரும் முயற்சிகளை ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும்” என உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசினார்.

மதுரையில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், இந்தியாவுக்கான மக்கள் இயக்க மதுரை கோட்டம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் என்.பி. ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். இதில், அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம் என்ற தலைப்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியது: “இந்திய அரசியலைப்பு சட்டம் உருவாகி 75 ஆண்டுகள் கடந்துள்ளது. அரசியலைப்புச் சட்டத்தை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலைப்புச் சட்டம். இந்திய அரசியலைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26-ம் தேதி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அரசு மொழியாலோ, மதத்தாலோ, பாலினத்தாலோ, வாரிசு உரிமையாலோ, எந்த ஒரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டப்படாது என்ற பிரகடனம் முக்கியமானது. அரசியலைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவு இதயமாக உள்ளது.

கடந்த 20 நூற்றாண்டுகளாக மனிதனை மனிதனாக கருதப்படவில்லை. மனிதனை சமமாகக் கருதவில்லை. மனிதர்கள் சாதியாலும், மதத்தின் அடிப்படையாலும் பிரிக்கப்பட்டு பாகுபாடு நிறைந்ததாக சமூகம் இருந்தது. அந்த பாகுபாடு இந்திய அரசியலைப்புச்சட்டத்தின் 15-வது பிரிவில்தான் நீக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரும் சமமில்லை. சட்டத்தின் முன் சமம் என்பது கிடையாது. பாலினத்தின் அடிப்படையில் பெண்களுக்கு உரிமை இல்லை. மொழியின் பெயரால், மதத்தின் பெயரால் அவர்கள் நசுக்கப்பட்டார்கள்.

அரசியலைப்புச் சட்டத்தின்படி இந்தியாவை ஒரு ஜனநாயக குடியரசாக ஏற்றுகிறோம். இந்திய அரசியலைப்புச் சட்டம் தனிச்சிறப்பு மிக்கது. அதில் உள்ள சில பிரிவுகள் வேறு எந்த நாட்டின் அரசியலைப்புச் சட்டங்களிலும் கூட இல்லை. 8 மணி நேரம் வேலை சட்டமெல்லாம் இங்கே இருக்கிறது. தொழிற்சங்கங்கள் உருவாக்கவும், செயல்படவும் அரசியல் அமைப்பு சட்டம் உறுதியளித்தது.

இன்று அரசியலமைப்புச் சட்டத்தை நான் மாற்றுவேன், மனு நீதியைப் பின்பற்றுவேன் என்று யாராவது சொன்னால், அதை கேட்டு ஆவேசம் வரவில்லை என்றால் நாமே அரசியலமைப்பு சட்டத்தை படித்து புரிந்துக் கொள்ளவில்லை. மதிப்பு வாய்ந்த நம் அரசியல் அமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம், ஸ்ரீலங்கா நாடுகளில் அவர்களின் அரசியல் அமைப்பு சட்டங்கள் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மதம் சார்ந்த அரசியல் அமைப்பு சட்டமாக இருக்கும்.

ஆனால், நமது நாட்டில் இன்றைக்கும் பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாட்டில் மதசார்பற்ற நாடாக அறிவித்தது அரசியல் அமைப்பு. அரசியல் நிர்ணய சபையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்தார்கள். இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை குறித்து வழக்கில், மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதுதான் மதச்சார்பின்மை என்று பல தீர்ப்புகளில் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்‌.

அரசியல் அமைப்பு சட்டம் நம் தலைவர்கள் மட்டும் படிக்கிற புத்தகம் அல்ல. சாதாரண மக்கள் புரிந்து கொண்ட புத்தகம். தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு பிறகு வக்பு வாரியச் சட்டம், ஒரு நாடு , ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது. இவ்விரு சட்டங்களையும் சுலபமாக நிறைவேற்ற முடியாது.

பாஜக மைனாரிட்டி அரசுக்கு ஆக்சிஜனாக இருப்பவர்கள் நிதிஷ் குமாரும். சந்திரபாபு நாயுடுவும். இவர்கள் எவ்வளவு நாள் ஆக்சிஜனாக இருப்பார்கள் என்பது யாராலும் சொல்ல முடியாது. மக்களை பாராட்டியே ஆக வேண்டும். தேர்தலில் சரியாக வாக்களித்துள்ளனர். இதிலிருந்து மக்களுக்கு அரசியல் சட்டம் புரிந்துள்ளது. பாஜகவுக்கு மெஜாரிட்டி கொடுக்க கூடாது என்று மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் இந்திய அரசியலைப்புச் சட்டத்தை சிலர் தங்களுக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சிக்கின்றனர். இதை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இது எல்லாக் காலங்களிலும் பொருந்தக் கூடிய வாழும் ஆவணம்” என்று அவர் பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். லெனின் வரவேற்றார். சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநர் எஸ். செல்வ கோமதி, எல்ஐசி பென்சனர் சங்க பொதுச் செயலாளர் என். சேகர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொருளாளர் டி.சித்ரா நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்