புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியுடன் நேருக்கு நேர் மோதுவதை வரலாற்று வாய்ப்பாக கருதுகிறேன். திராவிட சித்தாந்தமும், தமிழ் தேசியமும் நேருக்கு நேர் மோதுகிறது.
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல் துறையையும், உளவுத் துறையையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, சிபிஐ விசாரணை கேட்பது மாநில உரிமைக்கு எதிரானது. எனவே, வேங்கைவயல் வழக்கில் மறு விசாரணை தேவை என்று கூறலாமே தவிர, சிபிஐ விசாரணை கேட்பது தேவையற்றது.
நான் பெரியாரை ஆதரித்துப் பேசினேன் என்பதை மறுக்கவில்லை. தற்போது பெரியாரைப் பற்றி சிறு அளவுதான் விமர்சித்துள்ளேன். என்னைவிட ஆயிரம் மடங்கு விமர்சித்துப் பேசியவர்கள் அண்ணாவும், கருணாநிதியும். அதற்கான சான்றுகளைத் தருகிறேன். உண்மை, நேர்மையுடன் வலுவான கருத்துகளை முன்வைக்கும்போது சலசலப்புகள் ஏற்படத்தான் செய்யும். திராவிடம், இந்தியம் என்ற கோட்பாடுகளைத் தகர்த்து, தமிழ் தேசியக் கோட்பாட்டை கட்டமைக்கும்போது, அடித்தளம் ஆடத்தான் செய்யும்.
தற்போது பெரியவர்களுக்குள் சண்டை நடந்து வருகிறது. அதனால், இதில் தவெக தலைவர் விஜய்யை இழுக்க வேண்டாம். இது பெரியார் மண் கிடையாது. இது சேர, சோழ, பாண்டியனின் மண். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கொடியில்தான் வித்தியாசமே தவிர, வேறு எவ்வித வேறுபாடும் இல்லை. அனைவரது புத்தகங்களையும் அரசுடமையாக்கும்போது, பெரியார் புத்தகங்களை மட்டும் ஏன் அரசு உடைமையாக்கவில்லை? இவ்வாறு சீமான் கூறினார்.
சிபிஐ விசாரிக்க வேண்டும்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை சுதந்திரமாக நடைபெறவில்லை. உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது. எனவே, உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கும் வகையில், அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்