களத்தை இழந்த அதிமுக... கச்சை கட்டும் நாதக! - ஈரோடு கிழக்கில் தொடங்கியது தேர்தல் யுத்தம்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், ஒற்றை ஆளாய் ஆளும் கட்சியை எதிர்த்து களத்தில் நிற்கிறது சீமானின் நாதக.

2016-ல் 1.1 சதவீதம், 2019-ல் 3.87, 2021-ல் 6.58 சதவீதம் என படிப்​படியாக தனது வாக்கு வங்கியை வளர்த்த நாம் தமிழர் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்கு​களைப் பெற்று அங்கீகரிக்​கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றிருக்​கிறது. இப்படியான சூழலில், “கொங்கு எங்கள் கோட்டை” என மார்தட்டும் அதிமுக-வும் பாஜக-வும் இடைத்தேர்தலை புறக்​கணித்​தாலும் எதைப் பற்றியும் கவலைப்​ப​டாமல் துணிச்​சலுடன் களத்துக்கு வந்திருக்​கிறார் சீமான்.

ஈரோடு கிழக்கில் 2023 இடைத்​தேர்​தலில் நாதக வேட்பாளர் 10,827 வாக்குகள் (6.3 சதவீதம்) பெற்றார். அதிமுக 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தது. தற்போது முக்கிய கட்சிகள் களத்தில் இல்லாததால் நாதக-வுக்கு வாக்குகள் இயல்பாகவே அதிகரிக்​கலாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்​சகர்கள், “சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்​டங்களை முன்னெடுத்து வரும் அதிமுக-வும் பாஜக-வும் இடைத்தேர்தலில் போட்டி​யிட்டு தங்களின் பலத்தைக் காட்டி இருக்க வேண்டும். இது அவர்களுக்கான சுய பரிசோதனை​யாகவும் இருந்​திருக்​கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு அந்தக் கட்சிகள் அரசியல் பிழையை செய்துள்ளன. ஆளுங்​கட்​சியின் பணபலம் படைபலத்தை எதிர்த்து நின்று கவுரவமான வாக்கு​களைப் பெறமுடி​யாமல் போனால் அதுவே ஆளும் கட்சிக்கு நற்சான்​றிதழ் அளித்தது போலாகி​விடும் என்பதால் எதிர்க்க ஆளில்லாத களத்தில் ஆடிப் பார்க்​கட்டும் என எதிர்க்​கட்​சிகள் விட்டு​விட்டன.

ஆனால், நாதக இந்த இடைத்​தேர்தலை ஒரு சவாலாக ஏற்று களமிறங்​கி​யுள்ளது. குறிப்பாக, பெரியார் குறித்த கடும் விமர்​சனங்களை முன்வைத்து சர்ச்​சையில் சிக்கிய சீமான், அவர் பிறந்த ஈரோடு மண்ணிலேயே கருத்​தியல் யுத்தத்தை நடத்த தேர்தலில் போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்​துள்ளார்.

சீமானின் பெரியார் குறித்த விமர்​சனம், வலதுசாரி சிந்தனை கொண்ட வாக்காளர்கள், இந்து அமைப்பு​களிடம் வரவேற்பு பெற்றுள்ள​தால், அவர்களது வாக்குகளை நாதக பெற வாய்ப்புள்ளது. ஒருவகை​யில், சீமான் வீசும் இந்த பெரியார் அஸ்திரம், பாஜக-வின் அடிப்படை வாக்கு வங்கியைத் தகர்க்​கவும் வாய்ப்புள்ளது. “என்டிஏ தேர்தலைப் புறக்​கணித்​தா​லும், தொண்டர்கள் மனச்சாட்​சிப்படி வாக்களிப்​பார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்​துள்ளதால் கடந்த தேர்தல்​களைப் போல் அல்லாமல் இம்முறை நாதக கணிசமான வாக்குகளை அறுவடை செய்ய வாய்ப்​பிருக்​கிறது” என்றார்கள்.

அங்கீகார அடையாளத்தைப் பெற்ற பிறகு நாதக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் ஈரோடு கிழக்கில் நாதக-வையும் வீழ்த்த ஆளும் கட்சி எந்த எல்லைக்கும் போகும் என கணிக்​கிறார் சீமான். அதனால், தானே களத்தில் இறங்கினால் என்ன என தனக்கு நெருக்​க​மானவர்கள் மட்டத்தில் ஒரு ஆலோசனையும் நடத்தி​னா​ராம். அது சரியாக இருக்காது என்பதால் இறுதியாக, உள்ளூர் முகமான சீதாலட்​சுமியை நிறுத்தி இருக்​கிறார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதலியார் என்பதால், கொங்கு வேளாளர் சமுதா​யத்தைச் சேர்ந்த சீதாலட்​சுமியை தேர்வு செய்திருக்​கிறார் சீமான். இவர் ஏற்கெனவே ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதி​களில் போட்டி​யிட்​டவர்.

பெரியார் பிறந்த மண்ணில், “பெரியாரை ஆதரிப்​பவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்” என்ற முழக்​கத்​துடன் சீமான் தைரியமாக வாள்வீச வருவதால் ஈரோடு கிழக்கில் அனல் பறக்கும் என எ​திர்​பார்​க்​கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்