சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதே உண்மை என்று பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் மற்றும் அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பழனிசாமி, ‘‘பொள்ளாச்சி பாலியல் சம்பவம் 2019-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட பெண் 24-ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அடுத்த நாளே முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மற்றொரு குற்றவாளி 2019-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுதான் உண்மை’’ என்றார்.
இதற்கு மு.க.ஸ்டாலின், ‘‘பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 12 நாட்கள் கழித்துதான் கைது செய்யப்பட்டுள்ளது.
புகார் கொடுக்க 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு 12 நாட்கள் ஆகியுள்ளது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதுதான் உண்மை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஜன.11-ம் தேதி (நேற்று) ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் கொடுக்கிறேன்.
முதல்வர் சவால்: எதிர்க்கட்சி தலைவரும் ஆதாரத்தை கொடுக்கட்டும். பேரவை தலைவர் முடிவு எடுக்கட்டும். நான் சொல்வதை நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்லும் தண்டனையை ஏற்று கொள்கிறேன். நீங்கள் சொன்னதை நிரூபிக்கவில்லை என்றால் நான் சொல்லும் தண்டனையை ஏற்று கொள்ள தயாரா?’’ என்றார்.
அதனை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஏற்றுக்கொண்டார். பேரவைத் தலைவரும், ‘‘ஜனவரி 11-ம் தேதி இருவரும், ஆதாரத்தை என்னிடம் தரலாம்’’ என்றார்.
நேற்று காலை திமுக, அதிமுக சார்பில் ஆதாரங்கள் பேரவை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. பேரவை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘ஜன. 10-ம் தேதி இந்த அவையில் நீண்ட நேரம் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இடையே விவாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நடந்த நிகழ்வில் யார் சொல்வது நியாயம் என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டபிறகு, அதனை பேரவை தலைவரிடம் ஒப்படைப்பது என்றும், பிறகு அதனை பார்த்து தீர்ப்பு வழங்குவதாகவும் சொன்னீர்கள். இந்த அவையில் அத்தனை உறுப்பினர்கள் மத்தியில் நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, தங்களுடைய தீர்ப்பு என்ன என்பதை இந்த அவை அறிய விரும்புகிறது’’ என்றார்.
அதைத்தொடர்ந்து பேரவை தலைவர் அப்பாவு பேசியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களிடம் இருந்த ஆவணங்களை முதல்வர் கொடுத்தார். அதேபோல், எதிர்க்கட்சி சார்பிலும் வழங்கப்பட்டது. இரண்டையும் ஆய்வு செய்ததில் முதல்வர் சொன்ன தகவல்கள் அப்படியே இருந்தன. சம்பவம் 12-ம் தேதி நடந்தது. முதல் தகவல் அறிக்கை 24-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி கொடுத்த ஆவணத்தை சரி பார்த்ததில் 12-ம் தேதி சம்பவம் நடந்தது. 16-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் செயின் எங்கே என்று கேட்டதில் இருந்து, அதிலிருந்து சம்பவம் வெளியே வருகிறது.
தொடர்ந்து, 19-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கிறார். துணை காவல் கண்காணிப்பாளரை சென்று பார்க்குமாறு சொல்கின்றனர். அவரால் 22-ம் தேதிதான் பார்க்க முடிகிறது. அங்கு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்துக்கு செல்லுமாறு சொல்லியுள்ளனர். 24-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் உண்மை. இதில் வேறு ஒன்றும் இல்லை. நடந்தவையும் இவ்வளவுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago