மதுரை: டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் பி.மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுடன் பேசிச் சென்ற பின்னர், அக்கிராம மக்கள் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை ரேஷன் கடைகளில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு விநியோகம்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கி வருகிறது. அதனை முன்னிட்டு அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி பகுதியில் இன்று (ஜன.9) ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அரிட்டாபட்டியில் 820 குடும்ப அட்டைதாரர்களும், நரசிங்கம்பட்டியில் 444 குடும்ப அட்டை தாரர்களும் உள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
கிராம மக்கள் முடிவு: இதனிடையே, அமைச்சர் பி.மூர்த்தி டங்ஸ்டன் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மக்களை சந்தித்து இன்று விளக்கமளித்தார். இதில் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட எஸ்பி அரவிந்த் மற்றும் கனிமவளத்துறையினர் பங்கேற்றனர். இந்நிலையில், அமைச்சர் பேசிவிட்டு சென்ற பின்னர் மத்திய, மாநில அரசுகள் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என கிராம மக்கள் முடிவெடுத்தனர்.
திரும்ப ஒப்படைத்தனர்... - அதன்படி கிராமத்தினர் முடிவுக்கு கட்டுப்பட்டு பொங்கல் தொகுப்பு பொருட்கள் பெற்றவர்கள், வாங்கிய பொருட்களை மீண்டும் ரேஷன் கடைகளில் ஒப்படைத்தனர். இதேபோல் நரசிங்கம்பட்டி மக்களும் வாங்கிய பொங்கல் தொகுப்புகளை மீண்டும் ரேஷன் கடைகளில் ஒப்படைத்தனர். இதனால் ரேஷன்கடைக்காரர்கள் கடைகளை அடைத்துவிட்டு சென்றனர்.
» “பாலியல் குற்றாவாளி ‘சார்’களின் சரணாலயம் அதிமுக” - அமைச்சர் சிவசங்கர் சாடல்
» இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை காசாவில் 46,006 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
சட்டப்பேரவையில் எதிரொலித்த பேரணி: முன்னதாக, மதுரையில் ஜனவரி 7-ம் தேதி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட்டிலிருந்து மதுரை தல்லாகுளம் வரை 20 கி.மீ. தூரத்துக்கு பேரணி நடத்தினர். இது நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று அப்பகுதி மக்களை சந்தித்து தமிழக அரசின் நிலைப்பாடுகளை தெரிவிக்க அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட நிர்வாகத்தினர் மக்களை சந்தித்தனர். இதில் அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி கிராமங்களில் மக்களை சந்தித்து பேசினார்.
அமைச்சர் மூர்த்தி சந்திப்பு: அரிட்டாபட்டியில் கிராம மக்களை சந்தித்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியது: “டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் என்ன முடிவெடுத்துள்ளார் என்பதை அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மக்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எங்களை அனுப்பியுள்ளார். இதன்மூலம் மேலூர் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தமிழக முதல்வர் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை அறியலாம். இத்திட்டத்துக்கு எதிராக அரிட்டாபட்டியில் கிராம சபைக் கூட்டம் கூட்டியபோது அதில் நானும் பங்கேற்றேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும், அத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சட்டப்பேவைரயில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தினோம். நீங்கள் கூறிய கருத்தை தமிழக முதல்வர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என்று நானும் வாக்குறுதி அளித்தேன். அதேபோல் மேலூரில் விவசாயிகள், வணிகப் பெருமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்.
தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கூறினார்கள். உடனடியாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம். உடனடியாக இரண்டு நாளில் சட்டப் பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தில் யார் எதிர்த்தார்கள், ஆதரித்தார்கள் என்பதை நீங்கள் நேரடியாக பார்த்திருப்பீர்கள். அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. நம் பகுதியைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியைப் பற்றியும், எந்த சமுதாயத்தைப் பற்றியும் பேசத் தேவையில்லை.
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி அந்த தீர்மானத்தை நிறைவேற்றினோம். தான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது, அப்படி ஒருவேளை வந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அப்படியென்றால் மேலூர் பகுதி மக்கள் மீது முதல்வர் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நேற்று நடந்த சட்டமன்றத்தில் கூட டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து கொண்டுவந்த தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?, எதிர்க்கிறீர்களா? என முதல்வர் கேட்டார்.
சிலஅரசியல் கட்சியினர் நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டு, நாங்கள் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்ததாக கூறினர். நான் இதையெல்லொம் சொல்வதற்கு காரணம் இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எதையும் பேசிவிட்டு செல்லலாம். அதில் யாரும் தலையிட முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் நமது முதல்வர் ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டார்.மீண்டும் சொல்கிறேன் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் வரவே வராது. நேற்று நிதி அமைச்சர் பேசும்போதுகூட ஒருகைப்பிடி மண்ணைக்கூட அள்ள விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
சிலர் அரசியல் செய்வதற்காக போராட்டம்: ஆளும் அரசே நம்பிக்கையுடன் சொல்லும்போது சிலர் அரசியல் செய்வதற்காக சிலர் போராடுகிறார்கள். போராடுவது ஜனநாயக உரிமை. ஆனால் செய்ய முடியாததை எல்லாம் நான் செய்வேன், அதை நீங்களும் செய்யுங்கள் எனச் கூறுகின்றனர். பொதுவாக மக்களுக்கு தைரியமாக இருங்கள் எனவும், ஆறுதலாகவும் சொல்ல வேண்டுமே தவிர நடக்காததை எல்லாம் நடப்பதுபோல் தூண்டிவிடக்கூடாது. தமிழக அரசு முடிவு பண்ண வேண்டியதை தன்னிச்சையாக மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. மத்திய அரசு ஏலம் விட்டாலும் மாநில அரசு அனுமதிக்காது.
டங்ஸ்டன் திட்டம் வராது: திமுக கட்சி சார்பில் பேசுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம். டங்ஸ்டன் திட்டம் வரவே வராது. அரிட்டாபட்டியை ஒதுக்கிவிட்டு மற்ற பகுதியில் ஆய்வு செய்யலாமா? என டெல்லியில் கேட்டதாக கூறுகிறார்கள். எந்தப் பகுதியாக இருந்தாலும் ஒரு ஏக்கரைக்கூட மாநில அரசு தராது என்பதை தெளிவுபடுத்துங்கள் என தமிழக முதல்வர் கூறியிருக்கிறார். ஒருவேளை அவர்கள் ஆய்வை தொடங்கினால் போராட்டக் களத்தில் முதல் ஆளாக நாங்களும் உங்களோடு துணை நிற்போம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தயவு செய்து நாங்கள் சொன்னதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
முதல்வர் உறுதி: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராடலாம். அனைத்து தரப்பு மக்கள் சார்பில் அனைத்து கட்சிகளும் சேர்ந்துதான் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். கட்சியினர் போராடுவது அவர்கள் உரிமை. உங்களோடு தமிழக முதல்வரும் சேர்ந்து இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வரவிடமாட்டார். எந்த முதல்வரும் சொல்லாததை, நமது முதல்வர் சொல்லியிருக்கிறார். என் பதவியைக்கூட ராஜினாமா செய்வேன் என கூறியிருக்கிறார். வாயில் வந்ததை சொல்லிட்டு போக வரவில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார், எவர் சொன்னாலும் சரி. சொல்வது மிகவும் ‘ஈசி’, அதை நடைமுறைப்படுத்துவதற்கு தன்னம்பிக்கை, தைரியம் வேண்டும்.
அச்சப்படத் தேவையில்லை.... ஆனால் தமிழக முதல்வர் வரவே வராது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் சிலர் உங்கள் மனநிலையை மாற்றுகின்றனர். உங்களுக்கு எந்த பயமும் கவலையும் வேண்டாம். மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கட்டும். சிவகங்கை மாவட்டத்தில் 25 ஆண்டுக்கு முன்பு மத்திய அரசு கிராஃபைட் கம்பெனி அமைக்க முயற்சித்தது. தமிழக அரசு எதிர்த்தது. ஆனால் இன்றும் வரவில்லை. தமிழக முதல்வர் உங்களுக்கு துளியும் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வார். இதை சொல்வதற்காக வந்துள்ளேன். மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்திடுமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலூர் மக்களோடு சேர்ந்து மதுரை மாவட்ட மக்களும் நமக்கு ஆதரவளிப்பார்கள் தயவு செயது முதல்வரை சொல்வதை நம்புங்கள்,” என்று அவர் பேசியிருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago